“மாவீரர்கள் எமது இனத்தின் விடிவெள்ளிகள்”- யோ.கனகரஞ்சினி

தமிழீழ மாவீரர் மாதமான நவம்பரில், தாயக உறவுகள் தமது மாவீர உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்து வருகின்றது.

இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த போக்கு குறித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய கருத்தில்,

 “2009ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் மாவீரர்களுக்கு, மாவீரர் நினைவு இடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போதைய ஆட்சிமாற்றத்திற்குப் பின் மாவீரர்களுக்கோ, போரில் கொல்லப்பட்ட மக்களுக்கோ அஞ்சலி செலுத்தத் தடை உத்தரவுகளை அரசாங்கம் விதித்து வருகின்றது.

தியாகி திலீபன் நினைவு கூரலையும், நீதி மன்றத்தின் ஊடாக அனுமதி மறுக்கப்பட்டது.

மாவீரர்கள் எமது இனத்தின் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராடினார்கள். அவர்கள் எங்களின் உறவுகள். நாங்கள் போரில் எங்களின் பெறுமதிமிக்க பிள்ளைகளை இழந்து இருக்கிறோம். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது எமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

தற்போது நாட்டில்  பரவி வரும் கொரோனா தொற்றும் மக்களை ஒன்று கூட விடாது தடுத்துள்ளது. அவ்வாறு இல்லை என்றால் இலங்கை அரசாங்கம் என்ன தடையை விதித்தாலும்  அந்த தடைகளை கடந்து, எமது  மாவீர உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி இருப்போம். எமது விருப்பம் மாவீரர் துயிலுமில்லங்களில் அஞ்சலி செலுத்துவது தான்.  இருப்பினும் பொது அறிவித்தல் தற்போது இருப்பதனால் அதற்கான முன்னேற்பாட்டு சட்டத் திட்டங்களை கடைப்பிடித்து,  நாங்கள் எமது இருப்பிடங்களில் இருந்தவாறே  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.”