மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் நாள் கார்த்திகை 27 : பா. அரியநேத்திரன்

மாவீரம் என்பது பெரிய வீரம், அல்லது பெருமை தரும் வீரம் என்பதாகும். வீரம் துணிவான ஒரு உணர்வு தாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வலி, ஆபத்து, எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே மாவீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம்.
புறப்பொருள் இலக்கியங்களில் வீரம் என்ற உணர்வு முதன்மை பெறுகின்றது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்று எல்லா புறப்படலங்களிலும் வீர மறவரின் துணிவும், அவர்கள் எதிரிகளை எதிர்த்து போராட தயங்காமையும் கூறப்பட்டுள்ளது. அகத்தில் பெரும்பாலும் வீரம் முன் மொழியாவிடினும், பல செயல்களில் தலைவ னும், தலைவியும், பாங்கியும், நற்றாயும், செவிலித் தாயும், பல்வேறு சமூக உறுப்பினர்களும் தான் விரும்பியதை அடைய வீரத்தை உபயோகிக்க வேண்டியுள்ளது.
வீரத்தின் தன்மை.
1.தன் நாட்டைக்காத்தல்
2.நேர்மையாக இருத்தல்
3. தன் கடமையினை எவ்வித தடை வரினும் சிரமேற்று வெற்றி பெறுதல்
4.நினைத்ததை சாதித்தல்
5..விடாமுயற்சி
6 தன்னைச் சார்ந்தோரைக் காத்தல்
இந்த ஆறு உன்னத வீரம்தான் “மாவீரம்” அதை களத்தில் இனத்துக்காய் போராடி செய்கையில் காட்டிய ஈழத்தில் ஒரேயொரு விடுதலை இயக்கம் விடுதலைப்புலிகள் மட்டுமே அவர்களின் உன்னத தியாகத்தால் தன்னை ஆகுதியாக்கிய புனிதர்கள் தான் விடுதலைப்புலிகளின்  “மாவீரர்கள்” அந்த ஒப்பற்ற உயிர் தியாகம் செய்தவர்களை ஒரே நாளில் தேசமாக திரண்டு அஞ்சலி நினைவு கூரும் நாளாக 1989, கார்த்திகை27ம் நாளை தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பிரகடனப்படுத்தியிருந்தார்.
அந்த தினம் விடுதலைப்புலிகளின் போராளி சங்கர் வீரச்சாவை தழுவிய நாள் 1982 கார்த்திகை, 27 அந்த நினைவு நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. எதிர்வரும் வியாழக்கிழமை 2025 நவம் பர் 27ல் வழமை போன்று ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆகுதியான மாவீர்களை நினைவு கூர்ந்து துயிலும் இல்லங்களிலும், புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களும், மத்தியகிழக்கு நாடுகளில் தொழிலுக்காக சென்ற தமிழ் இளைஞர்களும், தமிழ் நாட்டிலும்  மக்கள் திரண்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வு எழுச்சியாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது.
2025 ல் இடம்பெறும் மாவீர் தினம் 36 வது மாவீரர் தினமாகும். 2008 கார்திகை,27 வரை ஈழத்தில் விடுதலைப்புலிகளால் 20 மாவீரர் தினங்கள் இடம்பெற்றன இந்த 20 தினங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 20 மாவீரர் உரைகளை நிகழ்த்தியுள்ளார். அவருடைய உரை ஒரு தீர்க்க தரிசன உரையாகவே பார்க்கப் பட்டது. அவர் இறுதியாக 2008,கார்த்திகை,27 ல் மாவீர் நாள் உரையில் கூறியது “இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.
அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமை யோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப் பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோ மாக” .
என கூறியிருந்தார் இதனை அவதானித்தால் சர்வதேசத்தை நோக்கி விடுதலைப்பயணம் செல்லவேண்டிய தேவையையும் புலம்பெயர்ந்து வாழும் இளையோருக்கும் அந்தபணி உண்டு என்பதையே மேலோட்டமாக தமது உரையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்தை நோக்க முடிகி றது.
ஒரு விடுதலைக்கான போராட்டம் அந்த நாட்டில் ஆரம்பித்தாலும் விடுதலைக்கான வெற்றி யையும், அந்த நோக்கத்தையும் தீர்மானிக்கும் சக்தி சர்வதேசமாகும் தலைவர் பிரபாபரனின் இறுதி உரையில் தேசவிடுதலையை தீவிரமாக முன்எடுத்து வருபவர்கள் புலம்பெயர்ந்துவாழும் இளையோர் என்பதை தெளிவாக கூறி அவர்களிடம் போராட்டத்தை ஒப்படைத்ததாகவே அந்த உரையின் தார்ப்பரியம் தெரிந்தது. சர்வதேசம் மூலமாக எமது இலக்கை அடைவதற்கான வேண்டுகோளாகவே இந்த உரை அமைந்துள்ளது.
விடுதலைப்புலிகள் மௌனிப்பதற்கு  முன்னம் 2008 கார்த்திகை 27 வரை துயிலும் இல்லங்களில் நடைமுறையானது மாவீரர்களின் பெற்றோர் சுடர் ஏற்றவேண்டிய கல்லறைகள், நினைவு கற்களுக்கு முன்னால் கார்த்திகை 27 ம் நாளில் பி.ப 5.15  மணிக்கு நிற்கக்கூடிய வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ள பட்டிருக்கும் தேசியத் தலைவரின் மாவீரர் நினைவுரை இடம்பெறும் பின்னர் நினைவொலி மணி ஒலி எழுப்பபட்டு ஒருமணித்துளி நேரம் எழுப்பப் படும், அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் பொதுச் சுடர் தளபதிகளில் ஒருவர் ஏற்றுவார் அதனை தொடர்ந்து  ஈகை சுடர்களை பி.ப 6.07 மணிக்கு சகலரும் ஏற்றுவார்கள்.
விடுதலைப்புலிகள் மௌனத்திற்கு பின் னர் 2009 கார்த்திகை 27 தொடக்கம் எதிர்வரும் 2025, கார்த்திகை 27  வரை 16  வருடங்களாக மாவீரர் தினங்கள் முன்னாள் போராளிகள், பொது அமைப்புகள், சில தமிழ்த்தேசிய கட்சிகள் இராணுவ முகாம் இல்லாத துயிலும் இல்லங்களில் தலைவரின் உரை, தேசிய கொடி மட்டும் இன்றி ஏனைய நடைமுறைகளை அப்படியே சகல துயிலும் இல்லங்களிலும் எழுச்சியுடன் செய்யப் பட்டு வருவதை காணலாம்.
புலம்பெயர் நாடுகளில் தலைவரின் உரை மட்டுமே இடம்பெறாது ஏனைய புலிக்கொடி ஏற்றப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் அப்படியே நடைபெற்று வருவதை காணலாம். வீரச்சாவை தழுவிய மாவீரர்கள் 2009 மே 18  வரை ஐம்பதாயிரம் வரையில் உயிர் நீத்துள்ளனர். விடுதலைப்புலிகளால் 2008 ல் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தரவில் 1982 தொடக்கம் 2008 வரையும் 22390  மாவீர்கள் ஆகுதியானதாக மாவட்ட ரீதியான விபரத்தை அப்போது வெளியிட்டிருந்தனர்.
இந்த தொகையில் வடமாகாணத்தை சேர்ந்த மாவீரர்கள்:14957  (ஆண்கள்:10834 பெண்கள்:4123
கிழக்கு மாகாண மாவீரர்கள்: 7083,  (ஆண்கள்: 6580  பெண்கள்:503) வடகிழக்கு சாராதவர்கள்:350 (ஆண்கள்:282  பெண்கள்:68) 2009  ஜனவரி தொடக்கம் மே 18  வரை ஐந்து மாதங்களில் உக்கிரமான போர் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்கள் முழுவதும் இடம்பெற்று இறுதியில் முள்ளி வாய்க்கால், நந்திக்கடல், வரை 2009  மே 18 ல் போர் மெளனிக்கும் வரை 05 மாதங்கள் மட்டும் ஏறக்குறைய 27000, மாவீர்ர்கள் வீரச்சாவை தழு வினார்கள் என நம்பப்படுகிறது அவர்களை டைய கணிப்பு இதுவரை உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை 2008 ல்  விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வ மாக அறிவித்த 22360 மாவீர்ர்களுடன் சேர்த்து மொத்தமாக 50000, மாவீரர்கள் ஆகுதியானார்கள் என்பதை முள்ளிவாய்க்கால் மௌனத்திற்கு பின்னர் பலராலும் உச்சரிக்கப்படுகிறது.
அந்த ஐம்பதாயிரம் மாவீர்களை நினைவு கூர்ந்து தொடர்ச்சியாக 2009  கார்த்திகை,27  தொடக்கம் தற்போது 16  வருடங்களாக நினைவுச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படுகிறது. விடுதலைப்புலிகளின் மௌனத்திற்கு பின்னர் 16  வருடங்களாக மாவீர்களுக்காக வணக்கம் செலுத்தும் நாம் அவர்களுடைய கனவு நினைவேற வேண்டுமானால் குறைந்த பட்சம் சிதறிக்கிடக்கும் தமிழ்த்தேசிய கட்சிகள் ஈழத்தில் ஒற்றுமையாக ஒரு அணியாக ஒரே குரலில் சர்வதேசம் நோக்கி அரசியல் தீர்வுக்காக கோரிக்கையை முன்வைக்க கூடியதாக செயல்படக்கூடிய தமிழ்தேசிய கட்சிகள் ஒற்றுமை படவில்லை .
2025 கார்த்திகை 27  மாவீரர் நாளிலாவது தமிழ்தேசிய கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல்பட்டு மாவீரர்களுடைய கனவு நனவாக உழைக்க உறுதி பூணுவோம்.