மாளிகை காட்டு விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமித்துள்ள தொல்லியல் திணைக்களம் -அகரன்

வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாளிகை கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள காட்டுவிநாயகர் ஆலயமானது மாளிகை கிராம மக்களின் நீண்ட நெடிய பாரம்பரியமான கோவிலாகும். நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இப்பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து மீண்டும் தங்களது சொந்தக் கிராமத்தில் மீளக் குடியேறி வாழ்ந்துவரும் நிலையில் இக்கிராமத்தில் உள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தின் காணியை துப்பரவு செய்வதற்காக கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வீட்டுக்குவீடு நெல் மூடைகள் வழங்கி அந்தப் பணத்திலிருந்து பற்றைக்காடுகளாக இருந்த ஆலயத்திற்குரிய காணியை துப்பரவு செய்யும் போது நிலத்திற்கு கீழ் காணப்பட்ட  செங்கற்கள் சிதைவடைந்ததால் தொல்லியல் திணைக்களம் இவ்விடயத்தில்
தலையிட்டு ஓமந்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்து ஆலய நிர்வாக உறுப்பினர்களையும் துப்பரவு பணியில் ஈடுபட்ட கனரகவாகனங்களின் பணியார்களையும் கைது செய்து வவுனிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கரைவருடகால நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கிலும் கிழக்கிலும் அமைச்சர் சஜித் பிரேமதாசா அவர்களின் நேரடி வழிகாட்டலின் கீழ் தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன வரலாற்று ஆலயங்கள் மற்றும் சில நினைவு சின்னங்கள் அமைந்துள்ள இடங்களை தொல்லியல் திணைக்களங்களால் திட்டமிட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றன அவற்றில் முக்கியமாக கன்னியா வெந்நீருற்று, நீராவியடிப்பிள்ளையார், வெடுக்குநாறி மலை, நாவற்குளி,திருக்கேதீஸ்வரம் போன்று வடக்கில் 350க்கு மேற்பட்ட இடங்களைசிங்கள பௌத்தத்தின் அடையாள சின்னங்களாக தொல்லியல் திணைக்களம் இனங்கண்டு வைத்துள்ளது.

இவ்வாறாக தமிழ் மக்கள் மீதும் தமிழர்கலாசார சின்னங்கள் மீதும் இடம்பெறும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை தடுத்துநிறுத்துவதற்கு ஆளும் கட்சியின் பங்காளியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நான்கரை வருடகாலமாக அமைச்சர் சஜித் பிரேமதாசா அவர்களோடு அரசியல்ரீதியாக பேசி தீர்வை காண்பதற்கு பதிலாக நீதிமன்றங்களை நாடி வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு காலவரையறையின்றி இந்தப் பிரச்சினைகளை நீடித்து செல்கின்றனர்.

மேலும் அமைச்சர் சஜித் பிரேமதாசா அவர்களின் நேரடி வழிகாட்டலின் கீழ் உள்ள தொல்லியல் திணைக்களத்தின் உயர்சபையில் பௌத்த துறவியின் தலைமையில் 32 சிங்களவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இவ் ஆக்கிரமிப்பு பணிகளை திட்டமிட்டு செய்து வருகின்றார்கள்.நடுநிலையாக ஆய்வுகளை செய்து பக்கச்சார்பற்ற முறையில் இருக்கவேண்டிய இந்த தொல்லியல் திணைக்களம் முழுக்க முழுக்க சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக செயற்படுகின்றது. இவ் திணைக்களத்தில் இருக்கின்ற உயர்சபையில் உள்ள 32 பேரில் ஒரு தமிழரையோ,முஸ்லீமையோ கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நியமிக்கமுடியவில்லை.

இந்த நிலையில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டு சஜித்பிரேமதாசா அவர்கள் பிரதான வேட்பாளராக தேர்தல் களத்திலே தனது பணிகளை ஆரம்பித்திருக்கின்ற இந்நேரத்தில் மாளிகை காட்டுவிநாயகர் ஆலயத்தின் தலைவர் திரு சுப்பரமணியம் வயது 70 செயலாளர், திரு அகிலன் வயது 38 இருவரையும் கைது செய்து தடுத்துவைத்திருப்பதென்பது ஒட்டுமொத்த இந்துமக்களுக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படுகின்ற சவாலாகும். என்பதுடன் எந்த வகையில் சஜித்பிரேமதாசா கூறுகின்ற இன,மொழி,மத வேறுபாடு இன்றி மக்கள் சமத்துவமாக நடத்தப்படுகின்றார்கள் என்பதை காட்டுகின்றது.அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பௌத்தமத்திற்கே அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் பாரிய தாதுகோபுரங்கள் அமைக்கப்படுமென்றும் ஆயிரத்து இருநூறு பௌத்த அறநெறிப்பாடசாலைகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் பகிரங்கமாக சஜித் மேடைகளில் தெரிவித்து வருகின்றார்.

பௌத்த மதத்திற்கு கொடுக்கப்படுகின்ற முன்னுரிமை ஏன் ஏனைய மதங்களுக்கு கொடுக்கமுடியவில்லை. கொடுக்கமுடியாவிட்டாலும் கடந்த நான்கரைவருடகாலமாக தமிழர் ஆலயங்கள் மற்றும் கலாசார சின்னங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை.ஒருவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார் என்பதைவிட வருவதற்கு முன் என்ன செய்தார் என்று எம் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.