மாடுகள் செத்துக்கொண்டிருக்கும் போது சல்லிக்கட்டு விளையாடிய ஆளுனர் – மட்டுநகரான்

வடகிழக்கு மாகாணம் என்பது தமிழர் தாயகம்.தமிழர் தாயகம் என்பது வெறுமனே நிலத்தினால் கட்டியமைக்கப்பட்டது அல்ல.அது தமிழர்களின் அடையாளம்,தமிழர்களின் கலைகலாசாரம்,கலாசார விழுமியங்கள், பண்பாட்டு ஒழுக்கங்களினால் கட்டமைக்கப்பட்டதே தமிழர் தேசியமும் தமிழர் தாயகமுமாகும். இதனை கேள்விக்குட்படுத்தும் பல்வேறு விடயங்கள் நடந்ததன் காரணமாகவே இந்த நாட்டில் தமிழர்கள் ஆயுதம் ஏந்தி தமது உரிமைக்காக போராடவேண்டிய நிலைமையேற்பட்டது.

இந்த விடயங்கள் சரியாக புரியப்படுமானால் தமிழர்கள் தங்களுக்குள் ஒன்றுபட்டு தமிழ் தேசியத்தினை அடைவதற்கான வழிகளை ஏற்படுத்துவார்கள் என்பது எங்களது எதிர்பார்ப்பாகவுள்ளது. இதன்காரணமாகவே இவ்வாறான வழிகளை இல்லாமல்செய்வதற்கு அல்லது கேள்விக்குட்படுத்துவதற்கான தொடர்ச்சியான செயற்பாடுகளை சிங்கள தேசமும் அவர்களின் அடிவருடிகளும் முன்னெடுத்துவருகின்றனர்.

Senthil மாடுகள் செத்துக்கொண்டிருக்கும் போது சல்லிக்கட்டு விளையாடிய ஆளுனர் - மட்டுநகரான்எவ்வாறாயினும் தமிழர்கள் தமது அடையாளத்தினையும் கலைகலாசாரம்,கலாசார விழுமியங்கள்,பண்பாட்டு ஒழுக்கங்கங்களை பாதுகாப்பாதற்காக தொடர்ந்து போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சிங்கள தேசம் எமது பாரம்பரியங்களை கேள்விக்குட்படுத்தும்போது எல்லாம் அதற்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழுகின்ற நிலைமையினை நாங்கள் காணமுடியும்.

அதன்காரணமாக இன்று எங்கள் கைகளைக்கொண்டு எங்களது கண்களை குத்தும் செயற்பாடுகளை சிங்கள அரசு செயற்படுத்துவதற்கு முனைவதை காணமுடிகின்றது.

அண்மையில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழா தொடர்பில் இன்று தமிழர் பகுதிகளில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதை காணமுடிகின்றது. பொங்கல்விழாவானது தமிழர்களின் காலம்காலமாக முன்னெடுத்துவரும் பண்பாட்டு விழுமியங்களை மீறும் செயற்பாடுகளாக கிழக்கு தமிழர்கள் பார்க்கும் நிலைமையினை காணலாம். குறிப்பாக தமிழர்கள் ஆங்கில திகதியான தை 15அன்றே தமிழர்களுக்கு தைமாதம் பிறக்கின்றது. அன்றைய தினமே தமிழர்கள் பொங்கல் விழாவினை தொடங்குகின்றனர்.

அந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தி தமிழர்களின் அடையாளங்களை வெளிப்படுத்துகின்றனர். மார்கழி மாதங்களில் தமிழர்கள் எந்த நிகழ்வினையும் நடாத்துவதில்லை. இது பண்டைய காலம் தொடக்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளாகவே பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அந்த மரபுகளையெல்லாம் மீறிய வகையில் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழாவினை தமிழர்கள் எதிர்க்கும் நிலமை ஏற்பட்டுள்ளது. இது தமிழர்களின் பாரம்பரிய முறைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் மீறும் வகையிலான செயற்பாடுகளாகவே பார்க்கப்பட்டுள்ளது.

இன்று வடகிழக்கு பகுதியில் தமிழர்களை நோக்கி முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் உட்பட தமிழர்கள் மீது முன்னெடுக்கப்படும் அத்துதமீறிய செயற்பாடுகளை மூடிமறைத்து தமிழர்கள் இந்த நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள் என்பதை இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கு முன்னெடுத்த முயற்சியாகவே இதனை தமிழர்கள் நோக்கும் நிலையாகவுள்ளது.

Mailath Batti மாடுகள் செத்துக்கொண்டிருக்கும் போது சல்லிக்கட்டு விளையாடிய ஆளுனர் - மட்டுநகரான்இன்று மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதியில் கால்நடை பண்ணையாளர்கள் துரத்தப்பட்டு அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேநேரம் தினமும் கால்நடைகள் சுடப்படும், கொல்லப்படும் நிலைமைகள் காணப்படுகின்றன. போராட்டம் ஆரம்பமான மூன்று மாதத்தில் சுமார் 231க்கும் அதிகமான கால்நடைகளை இழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான கால்நடை பண்ணை தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்து கஸ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தங்களுக்கு என்றாவது விடிவு கிடைக்கும் என்ற வகையில் 120 நாட்களையும் தாண்டிய வகையில்  மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் வெள்ளத்தின் மத்தியிலும் போராடிவருகின்றனர்.

இதுவரையில் 445சிங்கள அத்துமீறிய செய்கையாளர்கள் சுமார் 4500ஏக்கர் காணிகளில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களினால் மாடுகள் கொல்லப்படுதல் சம்பவம் நடைபெறுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரினால் ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலும் அதனைவிட அதிகமானோர் அதிகமான நிலத்தினை ஆக்கிரமித்து அத்துமீறிய பயிர்ச்செய்கையினை முன்னெடுத்துவருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Trinco Jalli மாடுகள் செத்துக்கொண்டிருக்கும் போது சல்லிக்கட்டு விளையாடிய ஆளுனர் - மட்டுநகரான்இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிங்களவர்களினால் கால்நடைகளும் கால்நடை பண்ணையாளர்களும் கஸ்டங்களை அனுபவித்துவரும் நிலையில் ஒரு தடவையேனும் அவர்களை சென்று சந்தித்து அவர்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கமுனையாக கிழக்கு மாகாண ஆளுனர் பொங்கல் விழாவினையும் ஜல்லிக்கட்டினையும் நடாத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை தமிழர்கள் எழுப்பிவருகின்றனர்.

கிழக்கில் தமிழர்களின் குரல்களை மழுங்கடிக்கசெய்வதற்கான நடவடிக்கையாக கூட இருக்கலாம் என்ற கருத்துகளும் பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன.
அண்மையில் கிழக்கு மாகாண ஆளுனரின் ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் விழா தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள கல்விமான் ஒருவர் தனது முகப்புத்தக்கத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்:-
“பொங்கல் என்பது பானையில் அரிசியையும் பாலையும் ஊற்றிச் செய்யும் ஓரு சமையல் நிகழ்வல்ல. அதற்குப் பின்னால் ஒரு பாரம்பரியம், இனத்துவ அடையாளம் போன்றவை உள்ளன.

பாரம்பரியம் எனும்போது உழவுத் தொழில் அதன் பின்னால் உள்ள விடயங்கள் என்று வரும். உழவுத்தொழிலில் மாடுகள் பிரிக்கமுடியாத அம்சமாக உள்ளது. மயிலத்தமடுவில் மாடுகளுகளுக்கு நிகழ்த்தப்படுகிற அநியாயங்களை விளங்காமல் சல்லிக்கட்டு அறிமுகப்படுத்துகிறேன், புல்லுக்கட்டு அள்ளிப்போடுகிறேன் என்று நிற்பது அரைஞாண்கொடி இல்லாமல் கச்சைகட்டுகிற விளையாட்டுத்தான்.

மாடு என்பது தமிழர்களின் இனத்துவ அடையாளம். மயிலத்தமடுவில் மாட்டுக்கு வைக்கப்படும் கத்தியானது இனத்தை அவமானப்படுத்தும் செயல். இனத்துவ மோதலாக அவன் செய்யும்போது மறுபுறத்தில் எதுவுமே நடக்காததுபோல இனத்தை அடையாளப்படுத்தும் ஜல்லிக்கட்டுயும், பொங்கலையும் பேருக்கு செய்வதற்கு இவர்களுக்கு முடிகிறதே.

என்னை இப்படிச் செய் என்று யாராவது சொன்னால் என்னால் முடியாது. ஒருபக்கத்தில் மாட்டைப் பலிகொடுத்த ஒரு விவசாயி அழுதுகொண்டிருக்கும்போது மறுபக்கத்தில் மாட்டைக்கொண்டாடும் சல்லிக்கட்டும், விவசாயியைக் கொண்டாடும் பொங்கலும் கொண்டாடுவதற்கு என்னால் முடியாது. அதற்காக சாதாரண மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் கொண்டாடக்கூடாதா? என்று கேட்டால் அதுவேறு, இதுவேறு.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டிய இடத்தில் உள்ளவர், பாதிக்கப்படும் மாடுகளைக் காக்கவேண்டியவர் இங்கு மாடுகள் செத்துக்கொண்டிருக்கும் போது சல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவது. தாய்-தகப்பனுக்கு சோறுபோடாதவன் முதியோர் இல்லத்தில் அவர்களது பிறந்தநாளை எல்லோருக்கும் சோறுபோட்டு கொண்டாடுவது போன்றுதான் உள்ளது.

எனது அம்மப்பா ஒரு பட்டிக்காரன் அவர் மாடுகளுடன் எப்படி அன்போடு இருப்பார் என்பது எனக்குத் தெரியும்.மாட்டிற்கு வருத்தம் என்றால் அவர் சாப்பிடமாட்டார். இங்கு மாகாணத்தில் ஓருபக்கத்தில் மாடுகள் சுட்டும், வெட்டியும் கொல்லப்படுகின்றன.இந்த நிலையில் சல்லிக்கட்டு தேவையா?”என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான பல்வேறுபட்ட கருத்துகளை முகப்புத்தகங்கள் ஊடாக காணமுடிகின்றது.தமிழர்களின் அடையாளங்களை அழித்துவிட்டு தமிழர்களுக்கான நிகழ்வுகளை நடாத்துவதினால் எந்த பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை.

கிழக்கு மாகாண ஆளுனர் கிழக்கில் தமிழர்களின் கலைகலாசாரம்,பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கவேண்டும் என்று தனித்து நின்று முடிவு எடுப்பாரானால் அவர் முதலில் செய்யவேண்டியது மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்கவேண்டும்.அங்குள்ள சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்கள் அகற்றப்பட்டு பண்ணையாளர்களின் நிலங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.