மாகாண சபை முறையை இல்லாதொழிக்க டில்லியுடன் புதிய பேரம் – வெளியாகும் தகவல்கள்

“கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், காங்கேசன்துறைத் துறைமுகம், பலாலி விமான நிலையம் ஆகிய மூன்றையும் இந்தியாவுக்குத் தாரை வார்ப்பதற்குக் கொழும்பு இணங்குமானால், புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போது மாகாணசபை முறைமை ஒழிக்கப்படுவதை புதுடில்லி கண்டும் காணாமலும் பார்த்து இருக்கும். அதுவே இந்தியாவின் இப்போதைய நிலைப்பாடு.”

இவ்வாறு கூறியிருக்கின்றார் ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்ற அணி ஒன்றின் தலைவரான உபுது ஜெயக்கொட. கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

“அதை இலங்கைத் தரப்புக்கு உரிய வட்டாரங்கள் மூலம், உரிய முறையில் இந்தியா தெரியப்படுத்தியுள்ளது” என்றும் உபுது ஜெயக்கொட கூறினார் என வெளியான செய்தி சிங்கள அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

இதேவேளையில், கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பது குறித்த விஷேட அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.