மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவது சாத்தியமற்றது – சரித ஹேரத்

மாகாண சபைகளுக்கான தேர்தல் குறித்து கருத்துரைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது. ஐக்கிய தேசிய கட்சியினரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரும் கடந்த அரசாங்கத்தில் மக்களின் ஜனநாயக உரிமையைக் கூட விட்டுவைக்கவில்லை. மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்துவது சாத்தியமற்றது என கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்-

“மாகாண சபை தேர்தல் குறித்து எதிர்க்கட்சியினர் குறிப்பிடும் கருத்துக்கள் அவர்களின் குறைகளை மறைத்துக் கொள்ளும் வகையில் உள்ளன. மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கும், அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

மாகாண சபை தேர்தல் முறைமையினை நீக்கி புதிய தேர்தல் முறைமையை கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அப்போதைய அரசாங்கம் தோல்வியடைந்ததால் மாகாண சபைத் தேர்தலை நடத்த எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை . எல்லை நிர்ணய அறிக்கையை கொண்டு வந்து அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கம் தோற்கடித்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல் நிலையை ஏற்படுத்தி தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் தேசிய பொருளாதாரம்,தேசிய பாதுகாப்பு மாத்திரமல்ல மக்களின் ஜனநாயக உரிமையையும் பலவீனப்படுத்தியுள்ளது” என்றார்.