மழை வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு – மட்டு.நகரான்

கிழக்கு மாகாணத்தில் மழையுடனான காலநிலை நீடித்து வருகின்றது. மழை காலங்களில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையினைக் காணமுடிகின்றது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், நீர்நிலைகளும் கடல் பகுதியும் சூழ்ந்த பிரதேசமாகவும், விவசாய நிலங்களை அதிகளவு கொண்ட பகுதியாகவும் காணப்படுகின்றபோதிலும், கடந்த காலங்களைவிட கடந்த 10வருட காலத்தில் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதியாக மட்டக்களப்பு மாவட்ட காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்திற்கு பின்னராக காலப்பகுதியிலேயே வெள்ளப்பாதிப்புகள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றமையையும் காணமுடிகின்றது.

யுத்ததிற்கு பின்னர் சர்வதேச சமூகம் வடகிழக்கினை கட்டியெழுப்புவதற்காக ஒதுக்கிய பெருமளவான நிதிகள் முறையாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படாமல் சர்வதேச சமூகத்திற்கு எதையாவது செய்து காட்டிவிட்டு பெருமளவான நிதிகளை சிங்களப் பகுதிக்கு கொண்டுசெல்வதையே நோக்காக கொண்டு செயற்பட்டதே இன்று இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளும் மாவட்டத்தில் முறையாக பேணப்படாத மழைநீர் சேமிப்புத் திட்டங்கள் காரணமாகவே தொடர்ச்சியாக வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டது.

அதுமட்டுமன்றி கோடை காலத்தில் அதிகளவில் வறட்சியினால் பாதிக்கப்படும் மாவட்டமாகவும் மட்டக்களப்பு மாவட்ட காணப்படுகின்றது. 25வீத நிலத்தில் நீர்நிலைகள் காணப்படுகின்றபோதிலும், அதிளவில் வறட்சியினால் பாதிக்கப்படும் மாவட்டமாகவும் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

இக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல குளங்கள் நீர்வற்றி மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கே மிகவும் கஸ்டமான நிலையினை எதிர்நோக்கும் நிலையினை பல வருடங்களாக அனுபவித்து வருகின்றனர்.

மழை காலங்களில் வெள்ள நீர் அனைத்தும் கடலுக்குள் அனுப்பபடுகின்றது. பல குளங்கள் மட்டக்களப்பில் இருக்கின்ற போதிலும் உன்னிச்சைக் குளத்தினை தவிர நீரை சேமிக்கும் வகையிலான குளங்கள் மட்டக்களப்பில் காணப்படாத நிலையே உள்ளது.

குறிப்பாக நவகிரி, புளுக்குனாவை, கித்துள், வாகனேரி போன்ற குளங்கள் பிரதான குளங்களாக உள்ளபோதிலும், அவற்றை கடந்த காலங்களில் மழை நீரை சேமிக்கும் வகையிலான நிலையில் விரிவாக்கம் செய்யப்படவில்லையென்பது நீண்டகால குறைபாடாக மக்களிடம் இருந்து வருகின்றது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சிறுகுளங்கள் உள்ளன. அவற்றினை தூர்வாரி அவற்றினை ஆழப்படுத்துவதன் மூலம் மழை நீரை சேமித்து வறட்சிகாலத்தில் விவசாயிகளுக்கு பயன்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

அதேபோன்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் திட்டங்களை முன்னெடுப்பதற்கு உன்னிச்சைக் குளம் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. சில பகுதிகளுக்கு அம்பாறையில் உள்ள குளத்தில் இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. ஏனைய குளங்களை புனரமைத்து குடிநீர் விநியோக திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சாத்தியங்கள் உள்ளபோதிலும், இதுவரையில் அதற்கான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

யுத்தம் முடிந்த காலம் தொடக்கம் ரூகம் கித்துள் குளங்களை இணைத்து பெரிய குளம் ஒன்றிணை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும், இதுவரையில் அது தொடர்பான நிர்மாணப் பணிகள் பேச்சளவிலேயே காணப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குளங்கள் புனரமைக்கப்பட்டு விரிவாக்கப்படும் நிலையேற்படுமானால் பெய்துவரும் மழை நீர் கடலுக்குள் செல்லும் நிலையினை கட்டுப்படுத்தமுடியும் என நீண்டகாலமாக நிபுணர்களினால் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை காலங்களில் குளங்கள் நிரம்பி வழிவதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்து செல்லும் நிலைமையே இருந்து வருகின்றது. மழை பெய்யும்போது விவசாயிகள் மகிழ்ச்சி கொள்வதற்குப் பதிலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் கவலையடைவதையே அதிகமாக காணமுடிகின்றது.

விவசாயத்தினையே பெரும்பாலானோர் தமது தொழிலாக கொண்டுள்ள நிலையில், இந்த நிலைமையினால் மிகவும் பாதிக்கப்படும் சமூகமாக விவசாய சமூகம் காணப்படுகின்றது .இலங்கையில அரசி உற்பத்தியில் பெருமளவான பங்களிப்பினை மட்டக்களப்பு மாவட்டம் வழங்கிவரும் நிலையில் இந்த விவசாயத்தினை பாதுகாப்பதற்காக அரசாங்கம் முறையான திட்டங்களை வகுக்காதது கவலைக்குரியதாகும்.

மாற்றாந்தாய் பார்வையுடன் அரசாங்கம் வடகிழக்கு மக்களை நோக்குவதன் காரணமாகவே வளங்கள் பல இருந்தும் முன்னேற்றம் காணமுடியாத நிலையில் தமிழர்கள் வாழும் நிலையுள்ளது.

இன்று விவசாய புரட்சி என்ற மகுடத்துடன் அரசாங்கம் இலங்கையின் பல பாகங்களிலும் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துவரும்போது பெயரளவிலேயே அந்த திட்டங்கள் இங்கு செய்யப்படுகின்றதே தவிர விவசாயத்தினை பாதுகாக்கவோ அல்லது அவர்களின் விவசாய மேம்பாட்டுக்காகவோ இதுவரையில் எந்தவித திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் காலத்தில் உன்னிச்சைக்குளம் புனரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று மட்டக்களப்பு மாவட்டம் பயனடைகின்றது.இதுபோன்று ஏனைய குளங்களும் புனரமைக்கப்படும்போது இந்த மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையோ,விவசாய அழிவுகளோ ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை.

மாரி காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் மழையின் காரணமாக குளங்கள் நிரம்பும்போது முகத்துவாரம் ஊடாக கடலில் கலக்கப்படுகின்றது.இந்த முகத்துவராம் ஊடாக வெள்ள நீர் வெளியேற்றப்படும் செயற்பாடானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய தாக்கத்தினை செலுத்திவருகின்றது.

சிலர் இதனை வெள்ள நீர் வெளியேற்றும் செயற்பாடாக பார்க்கின்றபோதிலும் நிபுணர்களின் கருத்துகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான வறட்சி நிலைக்கும் இதுவும் காரணமாக அமைக்கின்றது.

நீர்வெளியேற்றபடும்போது நிலக்கீழ் நீரும் இழுத்துச்செல்லப்படுவதாகவும் இதன்காரணமாக குறுகிய காலத்தில் வெள்ளம் வடிந்துசெல்லும்போது மாவட்டத்தில் வறட்சி நிலையேற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.இவ்வாறான நிலையில் மழை நீரை சேமிக்கும் வகையில் மட்டக்கள்பு மாவட்டத்தில் உள்ள குளங்கள் புனரமைக்கப்பட்டு விரிவுபடுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இதற்கான அழுத்தங்களை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முன்னெடுக்கும்போதே எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தினை அழிவுகளில் இருந்து பாதுகாக்கமுடியும்.

ஏற்கனவே திட்டமிட்ட குடியேற்றங்கள்,அத்துமீறிய காணி அபகரிப்புகள்,மேய்ச்சல்தரை பிரச்சினையென பல பிரச்சினைகளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் நிலையில் எதிர்காலத்தில் இவ்வாறான நீண்டகால திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டியது பாரிய கடமையாகும்.

தமிழர்களின் பொருளாதாரத்தினை கேள்விக்குட்படுத்தி பெரும்பான்மை மக்களினை மேம்படுத்துவதன் மூலம் சிறுபான்மை மக்களின் குரல்களையினையும் அவர்களின் பேரம்பேசும் சக்தியினையும் இல்லாமல்செய்யும் முயற்சியாகவும் இவ்வாறான செயற்பாடுகளில் அரசுகள் அக்கரை காட்டாமல் இருக்கின்றது.

இனிவரும் காலங்கள் தமிழர்களுக்கு பாரிய சவால்மிக்க காலமாக இருப்பதனால் எதிர்காலத்தில் முன்கொண்டுசெல்லவேண்டிய  செயற்பாடுகள் தொடர்பில் திட்டங்களை வகுப்பதற்கு தமிழ் கல்வமான்களும் முன்வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

தமிழர்கள் இருப்பின் அத்திபாரமாக இருக்கும் விவசாயத்துறையினை வளர்ப்பதற்கு எதிர்காலத்தில் அனைவரும் கைகோர்க்கவேண்டும்.