மலையக மக்களும் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவாக ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி ஊடகத்திற்கு அவர் வழங்கியுள்ள கருத்தில்,
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்காக முன்னர் குரல் கொடுத்தவராவார். அவர் மலையக மக்களை சகோதர சகோதரிகளாகவே நேசிக்கின்றார். மலையக மக்கள் அவர் சார்பாக ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார். தமிழர்கள் என்ற ரீதியில் மலையகத்தமிழர் ஒவ்வொருவரும் தமது மூன்று விருப்பு வாக்குகளில் ஒரு வாக்கை அவருக்கு அளிப்பதை அவர் கட்டாயமாக மனமுவந்து ஏற்றுக்கொள்வார்.
ஆனால் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சனைகள் வேறு, மலையக சகோதர சகோதரிகளின் பிரச்சனைகள் வேறாகும். எனினும் நாம் யாவரும் தமிழ் பேசும் மக்களாக ஒன்று சேரலாம். அதில் தவறில்லை. அது மட்டுமல்ல, 1977ஆம் ஆண்டளவில் மலையகத்திலே முடுக்கி விடப்பட்ட கலவரங்கள் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்துவந்த பல மலையகத் தமிழர்கள் வன்னி மாவட்டத்தில் குடியேறியுள்ளார்கள். இப்போது அவர்கள் எமது மக்களாவர். வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பாரம்பரிய உரிமைகள் அவர்களையும் சாரும். ஆகவே தமிழ் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் எமது தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க முன்வர வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.