மலையக மக்களின் பிரச்சினை குறித்து மோடிக்கு நாம் கடிதம் அனுப்புவோம் – மனோ கணேசன்

இலங்கையிலுள்ள தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்தியா தனது பங்களிப்பை வழங்க வேண்டியது கட்டாயமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டில்லி விஜயத்தின்போது, வெறுமனே விருந்தோம்பலை மாத்திரம் வழங்காமல், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசுமாறு வலியுறுத்தி தாமும் கடிதமொன்றை எழுதவுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது,

இலங்கை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் கடமையும், கட்டுப்பாடும் உள்ளது. இலங்கை அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய நிலையிலும் அவர்கள் காணப்படுகின்றனர்.

எனவே, இலங்கையில் காணப்படும் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்தியா தனது பங்களிப்பை வழங்க வேண்டியது கட்டாயமாகும். எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டில்லி விஜயத்தின்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர் பேச வேண்டும்.

வடக்கு, கிழக்கு மக்கள் சார்பில் அங்குள்ள அரசியல் தலைவர்கள் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதைப் போன்று மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணிலுடன் பேசுமாறு வலியுறுத்தி நாமும் கடிதம் எழுதுவோம்.

ஊழல் ஒழிப்பு சட்ட மூலமானது, கடந்த காலங்களில் அரச சொத்துக்களை கொள்ளையிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும், அவர்களால் கொள்ளையிடப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீள நாட்டுக்கு கொண்டு வருவதாகவும் இருக்க வேண்டும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்ட மூலத்தில் அவ்வாறு எதுவும் இல்லை.

இது அந்த சட்ட மூலத்தில் காணப்படும் குறைபாடாகும். எனவே, நாம் இவ்விடயத்தில் அதிருப்தியுடன் இருக்கின்றோம். கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிகாட்ட வேண்டும்.

நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் தொடர்பில் இனங்காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு உண்மையில் விசாரணைக்குழுவல்ல. அது முட்டாள் குழுவாகும். கோழியைப் பாதுகாக்கும் பொறுப்பு நரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதைப் போன்று தான் இந்தக் குழுவின் நியமனமும். நாடு வங்குரோத்தடைய பிரதான காரணம் ராஜபக்ஷ அரசாங்கம் என்பது அனைவருக்கும் தெரியும்.

அவ்வாறிருக்கையில், ராஜபக்ஷக்களின் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் குழுவொன்றை அமைத்து, நாடு வங்குரோத்தடைய யார் காரணம் என வினவினால் அவர் யாரைக் கூறுவார்?

எனவே அக்குழுவில் அங்கத்துவம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிலிருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றேன். அவர் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றார் என்றார்.