மலையகத் தமிழரின் வடக்கு-கிழக்கு நோக்கிய குடிப்பெயர்வு சாத்தியமா? : ஐ.வி.மகாசேனன்

டித்வா  புயலுக்குப் பிறகு மலையகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள், மலையகத் தமிழர்களின் நிரந்தர பாதுகாப்பு, வாழ்வாதாரம், மற்றும் வடக்கு-கிழக்கு நோக்கிய குடியேற்றம் சாத்தியமா என்ற கேள்விகளை மீண்டும் தீவிரமாக எழுப்பியுள்ளது. இந்த நேர்காணலில், இந்த விவகாரத்தை வரலாறு, அரசியல், சமூக, பண்பாட்டுகோணங்களில் ஆய்வாளர் மகாசேனன் விரிவாக விளக்குகிறார்.
டித்வா புயலுக்குப் பிறகு மலையக மக்கள் மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையை நீங்கள்எவ்வாறு பார்க்கிறீர்கள்?
மலையக மக்கள் இயற்கை அனர்த்தங்க ளால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படுகிற சமூக மாகவே நீண்ட காலமாகஇருக்கிறார்கள். டித்வா புயல் என்பது ஒரு சம்பவம் மட்டுமே. உண் மையில்,  ஒவ்வொரு ஆண்டும் கனமழை, மண் சரிவு,  போன்றவற்றால் மலையக மக்கள் உயிரிழப் பையும் சொத்திழப்பையும் சந்தித்து வருகிறார்கள். முழு இலங்கையும் இயற்கை அனர்த்தத் தால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், உண்மையில் அதிக சுமையைச் சந்தித்தவர்கள்  மலையக மக்கள்தான். காரணம், அவர்கள் வாழும் இடங்களே இயல்பாக அபாயப் பகுதிகள். அரசுநிவாரணம் அறிவிக்கிறது; ஆனால் அந்த நிவாரணம் பெரும்பாலும் காணி மற்றும் வீடு உள்ளவர்களுக்கேசென்றடைகிறது. லயன் அறைகளிலும், காணியில்லாத நிலையில் வாழும் மலையக மக்களுக்கு அந்த நிவாரணங்கள் முழுமையாக சென்று சேருவதில்லை.
மலையக மக்களின் பாதுகாப்பான வாழ்வு குறித்து கடந்த காலத்திலிருந்தே பேசப் படுகிறது. வடக்கு-கிழக்கு நோக்கியகுடியேற்றம் புதிய யோசனையா?
இது எவ்விதத்திலும் புதிய யோசனை அல்ல. 1970களிலிருந்தே மலையக மக்களின் பாதுகாப்பான எதிர்காலம் குறித்து ஈழத்தமிழர் அரசியல், சமூக வட்டாரங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
விடுதலைப் போராட்ட காலத்திலும், மலையக மக்களை வன்னி உள்ளிட்ட பகுதிகளில் குடியேற்ற வேண்டும் என்றசிந்தனைகள் முன் வைக்கப்பட்டன.
1980களுக்குப் பிறகு சில மனிதநேய இயக்கங்கள் மூலம் குடியேற்ற முயற்சிகள் நடைமுறையிலும் வந்துள்ளன.ஆகவே, டித்வா புயலுக்குப் பிறகு மீண்டும் இந்த விவாதம் எழுவது என்பது புதிய  சிந்தனை அல்ல; பழைய, தீராத ஒருபிரச்சினை மீண்டும் மேலெழுந்துள்ளது என்பதே உண்மை.
மனோ கணேசன், சுமந்திரன் போன்ற அர சியல்வாதிகளின் கருத்துகள் விமர்சனங்களை சந்திக்கின்றன. இதை நீங்கள்எவ்வாறு மதிப்பிடு கிறீர்கள்?
இந்த அரசியல்வாதிகள் கூறும் கருத்துகள் மனிதநேய அடிப்படையில் சொல்லப்படுவது போல இருந்தாலும், அதில்அரசியல் நோக்கங்கள் கலந்துள்ளதா என்ற சந்தேகம் எழுவது இயல்பானது. குறிப்பாக தேர்தல் அரசியல், அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகள் போன்றவை இதில் கலந்திருக்கலாம். ஆனால் முக்கியமான கேள்விஅரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதல்ல. மலையக மக்கள் உண்மையில் என்ன விரும்புகிறார்கள்? அவர்கள் இடம்பெயர தயாராக உள்ளார்களா? என்பதே அடிப்படை கேள்வி. அந்த மக்களின் விருப்பம், அச்சம், எதிர்பார்ப்பு ஆகியவை கருத்தில் கொள்ளப்படாமல் எடுக்கப்படும் எந்த முடிவும் நீடித்த தீர்வாக இருக்காது.
வடக்கு-கிழக்கு மக்களிடம் மலையக மக்களை ஏற்கும் மனநிலை உள்ளதா?
பெரும்பான்மையான வடக்கு–கிழக்கு ஈழத் தமிழர்கள் மனிதநேய அடிப்படையில் இதற்கு எதிர்ப்பில்லை. ஒரே மொழி, ஒரே பண்பாட்டு பின்னணி கொண்ட இன்னொரு தமிழ் சமூகத்தை ஏற்றுக்கொள்வதில் அடிப்படைத் தடை யில்லை. மாறாக, இது அந்தப் பகுதிகளில் தமிழ் சமூகத்தின் எண்ணிக்கையையும் சமூக பாது காப்பையும் வலுப்படுத்தும் என்றபார்வையும் உள்ளது. எனினும், அரசு காணிகள், இராணுவ ஆக்கிரமிப்புகள், இன விகித மாற்ற முயற்சிகள் போன்றசூழலில், இந்த குடியேற்றம் தவறாக பயன்படுத்தப்படுமோ என்ற அச்சமும் வடக்கு–கிழக்கு மக்களிடம் உள்ளது.
மலையக மக்கள் ஏன் நிரந்தரமாக இடம்பெயர வேண்டிய நிலை உருவாகிறது?
மலையகப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் மண் சரிவு அபாயப் பகுதிகளாக அரசின் பேரிடர் முகாமைத்துவஅமைப்பால் அறிவிக் கப்பட்டுள்ளன. ஆனால் அதே இடங்களில்தான் மக்கள் தொடர்ந்து வாழ்கிறார்கள்.
சாதாரண பருவமழையில்கூட உயிரிழப்புகள் நிகழ்கின்றன. தூங்கிக் கொண்டிருக்கும்போது மண் சரிந்து குடும்பமேஉயிரிழக்கும் சம்பவங்கள் ஆண்டுதோறும் நடக்கின்றன. இது ஒரு “அசாதாரண பேரிடர்” அல்ல; ஒரு தொடர்ச்சியானஅபாய வாழ்வு. ஆகவே, அவர்களுக்கு பாதுகாப்பான, நிரந்தர இருப்பிடம் தேவை என்பது மனிதநேயக் கோரிக்கையாகமட்டுமல்ல, ஒரு அவசரத் தேவை யாகவும் மாறியுள்ளது.
மொழி மற்றும் பண்பாட்டு அடையாளம் தொடர்பான பிரச்சினைகள் மலைய கத்தில் உள்ளனவா?
ஆம், இது மிகவும் முக்கியமான பிரச்சினை. மலையகப் பகுதிகளில் அரசு அறிவிப்புகள் பெரும்பாலும் சிங்களமொழியில்தான் வழங்கப் படுகின்றன. பேரிடர் எச்சரிக்கைகள் கூட தமிழில் சரியாக வழங்கப்படுவதில்லை. இதனால், “சிங்க ளம் தெரிந்தால்தான் பாதுகாப்பு” என்ற மனநிலை உருவாகிறது.
பல மலையக இளைஞர்கள், தமிழ் அடையாளத்தைவிட சிங்கள மொழியைப் பாதுகாப்பு கருவியாக பார்க்கும்நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். இது நீண்ட காலத்தில் மலையகத் தமிழர்களின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளம்அழிவதற்கான பாதை ஆகும்.
அனைத்து மலையக மக்களும் வடக்கு-கிழக்கிற்கு வந்தால், மலையகப் பகுதிகளில் என்ன விளைவுகள் ஏற்படும்?
இதையும் நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். மலையகத்திலிருந்து பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்தால், அந்தப்பகுதிகளில் தமிழ் சமூகத்தின் இருப்பு முற்றிலும் குறையும். அதன் விளைவாக, மலையகப் பகுதிகள் முழுமையாகசிங்களமயமாகும் அபாயம் உள்ளது. அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாமல்போகும்; பாராளுமன்றத்திற்கே ஒருமலையகத் தமிழ் பிரதிநிதியை அனுப்ப முடியாத நிலை உருவாக லாம். ஆகவே, முழுமையான குடியேற்றம் ஒருதீர் வாகாது.
அப்படியானால் நீடித்த தீர்வு என்ன?
நாம் இரண்டு வழிகளையும் ஒரே நேரத்தில் சிந்திக்க வேண்டும். ஒன்று, வடக்கு–கிழக்கிற்கு வர விரும்பும் மக்களுக்கு – காணி, வாழ்வாதாரம், சமூக பாதுகாப்பு, மரியாதையான வாழ்வுஆகியவை முன்கூட்டியே உறுதி செய்யப்பட வேண்டும்.
இரண்டாவது, மலையகத்திலேயே வாழ விரும்பும் மக்களுக்கு – மண் சரிவு அபாயமற்ற சமதளப் பகுதிகளில்குடியிருப்புகள், காணி உரிமை, போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட வேண்டும். தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் என்ற அடை யாளத்துக்குள் அவர்களை முடக்கக்கூடாது.
இறுதியாக நீங்கள் வலியுறுத்த விரும்புவது என்ன?
மலையக மக்கள் இலங்கையின் பொரு ளாதாரத்தின் முக்கிய தூண்கள். ஆனால் இன்றும் அவர்கள் அடிமைத்தனவாழ்க்கைக்குள் தள்ளப் பட்டுள்ளனர். அவர்களுக்கு உயிர்வாழும் உரிமையுடன் கூடிய பாதுகாப்பான, மரியாதையான வாழ்க்கை உறுதி செய்யப்படவேண்டும். வடக்கு–கிழக்கு அழைப்பு என்பது ஒரு வாய்ப்பாக இருக்கலாம்; ஆனால் அது கட்டாயமாகவோ, அரசியல் இலாபத்துக்காகவோ அல்ல.
மலையக மக்களின் விருப்பமே முடிவின் மையமாக இருக்க வேண்டும்-அதுவே உண்மை யான மனிதநேய தீர்வு.