மலையகத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது-ஹட்டன்- டிக்கோயா நகரசபை

அண்மைக்காலங்களில், குறிப்பாக புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், அரசாங்க பேருந்துகளிலும் தமிழ்மொழி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் ஹட்டன் – டிக்கோயா நகரசபை உறுப்பினருமான எஸ்.கேசவமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நகருக்குள் வரும், வெளியேறும் அரசாங்க பேருந்துககள் அனைத்திலும், தமிழ்மொழியிலான பெயர்ப் பலகைகள் இடம்பெற்றிருக்கவேண்டும் என இது தொடர்புடைய பிரேரணையொன்றை, ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் முன்வைத்து உரையாற்றினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்குக்கு​ வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டமாக நுவரெலியா காணப்படுவதாகவும் அதிலும் ஹட்டன் பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளிலேயே, அதிகளவான தமிழர்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.​

இந்நிலையில், பஸ்களில் காட்சிப்படுத்தப்படும் பெயர்கள், மும்மொழியிலும் சம அளவில் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் எனவே, இது குறித்து ஹட்டன் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான டிப்போவுக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

இந்நிலையில், இந்தப் பிரேரணை, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.