மரணித்தவர்களை நினைவுகூரும் உரித்து உறவுகளுக்கு உள்ளது ; கஜேந்திரன் எம்.பி.சுட்டிக்காட்டு

போரில் மரணித்தவர்களை நினைவுகூரும் உரித்து அவர்களின் உறவுகளுக்கு உள்ளது. அதனைத் தடைசெய்ய சட்டத்திலும் இடமில்லை, சர்வதேச சட்டத்திலும் இடமில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை சிரமதானப் பணிமூலம் துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்துக்கு வருகின்றபோது இதற்கு அண்மையிலுள்ள சந்திகள், வீதிகள் எங்கும் படையினர் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதியால் சென்றவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டதனால் சிரமதானப் பணிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி துப்புரவு செய்தவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

பத்துப்பேருடன்தான் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டோம். போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கான உரித்து உறவுகளுக்கு உள்ளது. அதனைத் தடைசெய்ய இந்த நாட்டுச் சட்டத்திலும் இடமில்லை. சர்வதேச சட்டத்திலும் இடமில்லை. ஆனால், படையினரும் பொலிஸாரும் அதற்கு மாறாக முற்றாகக் குழப்பும் விதமாக நடந்துகொண்டிருக்கின்றனர்.

கோப்பாயில், கனகபுரத்தில் மக்கள் துப்புரவு செய்தபோது பொலிஸார் அச்சுறுத்தல் நிலைமையை ஏற்படுத்தினர். வடக்கில் பொதுவாக அச்சுறுத்தல் நிலைதான் காணப்படுகின்றது. படையினரதும் பொலிஸாரதும் நடவடிக்கையை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார்.