மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறீலங்கா பலமுறை தவறிவிட்டது- ஐ.நா

கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறீலங்கா பலமுறை தவறிவிட்டது எனத் தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்சேல் பச்லெட், ஐ.நா பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகியதன் மூலம் முன்னேற்றத்துக்கான சாத்தியக் கூறுகளுக்கான வழிகளை இலங்கை அரசாங்கம் மூடிவிட்டது என்றும் கூறியுள்ளது.

மேலும் சிறீலங்காவில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை இன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் சமர்ப்பித்து பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“சிறீலங்காவுடனான பேரவையின் ஈடுபாட்டிற்கான ஒரு முக்கிய சந்தர்ப்பமாகும். எனது முன்னைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போல ஆயுத மோதல் முடிவடைந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குமான உள்நாட்டு முயற்சிகள் பலமுறை தவறிவிட்டன.

2015 ஆம் ஆண்டில் பேரவையில் சிறீலங்கா சார்பில் சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதிலும், தற்போதைய அரசாங்கம் உண்மையைக் கண்டறிதல் அல்லது பொறுப்புக்கூறல் செயல்முறைகளைத் தொடரத் தவறிவிட்டது.

சிறீலங்காவில் அனைத்து சமூகங்களிலும் போரில் பேரழிவுகளைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடுமையான விதி மீறல்களுக்கு வழிவகுத்த அமைப்புகள், கட்டமைப்புகள், கொள்கைகள் அவ்வாறே இன்னமும் உள்ளன. போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டவர்கள் அப்படியே இருக்கிறார்கள். சமீப காலங்களில் அவர்களில் இருப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

சிறீலங்காவில் சிவில் சமூகத்தினர் மற்றும் சுயாதீன ஊடகங்களுக்கான செயற்பாட்டு சுதந்திரம் கடந்த காலத்தில் ஓரளவுக்கு இருந்தபோதும் இப்போது அந்த சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் சிறீலங்காவில் நிறைவேற்றப்பட்ட 20-ஆவது திருத்தச் சட்டம் மூலம் நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறீலங்காவின் மனித உரிமைகள் ஆணையம், தேசிய காவல் ஆணையம் மற்றும் பிற முக்கிய அமைப்புகளின் சுயாதீனத் தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

சிவில் சமூக செயற்பாடுகள் வேகமாக இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவது ஜனநாயகத்தைக் கேள்விகுறியாக்கியுள்ளது.

தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் அரச உயர் மட்டத்தினரால் பாகுபாட்டுடன் கையாளப்படுகின்றனர். கோவிட்19 தொற்று நோயால் உயிரிழப்பவர்களை கட்டாயமாகத் தகனம் செய்யும் அரசின் கொள்கை சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களிடையே வேதனையையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நீண்டகால, கட்டமைப்பு மற்றும் அமைப்பு ரீதியான பிரச்சினைகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

இந்நிலையில் அங்கு கடந்தகாலங்களில் இடம்பெற்றதைப் போன்ற விதி மீறல்கள் முறைகள் மீண்டும் மீண்டும் நிகழக்கூடும் என்பதற்கான தெளிவான எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. அரசினால் அடுத்தடுத்து நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் உண்மையைக் கண்டறிந்து அதன் நம்பகத்தன்மையையும் பொறுப்புணர்வையும் உறுதி செய்வதற்கும் தவறிவிட்டன.

கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறீலங்கா பலமுறை தவறிவிட்டது. அத்துடன் இந்தப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகியதன் மூலம் முன்னேற்றத்துக்கான சாத்தியக் கூறுகளுக்கான வழிகளை சிறீலங்கா அரசாங்கம் மூடிவிட்டது. இந்நிலையில் சிறீலங்காவில் பொறுப்புக் கூறல் பொறிமுறையை உறுதி செய்வதற்கான புதிய வழிகளை ஆராயுமாறு சர்வதேச மட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகளைக் கண்டறியுமாறும் கோருகிறேன். மேலும் எதிர்கால பொறுப்புக்கூறலுக்கான ஆதாரங்களையும் தகவல்களையும் சேகரித்துப் பாதுகாப்பதற்கான பொறுப்பை வலியுறுத்துகிறேன்.

அத்துடன், பேரவை உறுப்பு நாடுகள் தங்கள் நாடுகளில் நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நான் கோருகிறேன்.

சிறீலங்காவில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை நிலைமைகளை தொடர்ந்து கண்காணிக்க எனது அலுவலகம் தயாராக உள்ளது”.