மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்ட சுகாதாரம் குறித்த வசதிகள் எப்படி களுத்துறைக்கு மாற்றப்பட்டது -இரா. சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இருதயவியல் பிரிவின் ஆய்வக (Cardiology Unit – Cardiac Catheterization Laboratory) வசதிகளை செய்துகொடுக்க சுகாதார அமைச்சு இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உறுதியளித்தும் இன்னும் அந்த வசதி ஏற்படுத்தப்படவில்லையெனவும் மட்டக்களப்புக்கு கிடைக்கவேண்டிய குறித்த ஆய்வகத்திற்கான சில வசதிகள் களுத்துறைக்கு மாற்றப்பட்டமை தொடர்பாகவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியிடமே அவர் இந்தக் கேள்விகளையும் கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஒட்டுமொத்த நாட்டிலும் வைத்தியர்களின் பற்றாக்குறை தொடர்ந்தும் காணப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

வடக்கு- கிழக்கில் சேவையாற்றும் வைத்தியர்கள், விசேடமாக பெண் வைத்தியர்கள், கடமையில் இணைந்து இரண்டு மூன்று மாதங்களிலேயே கர்ப்பகால விடுமுறையை எடுக்கிறார்கள். பின்னர் இரண்டு வருடங்களிலேயே வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

வடக்கு- கிழக்கில் சேவையாற்றினால் இரண்டு வருடங்களில் இடமாற்றம் கிடைத்துவிடும் என்ற சட்டம் இருக்கின்றதோ தெரியவில்லை, நான் விசேடமாக, இங்கு ஒன்றைக் கூற வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருதயவியல் பிரிவின் ஆய்வகம் ஒன்று இல்லாத விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே சுகாதார அமைச்சராகிய உங்களை வந்து சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். இதன்போது பிரதமரும் இருந்தார். இந்த சந்திப்பின்போது, நீங்கள் குறித்த ஆய்வகத்தை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெற்றுத் தருவதாகக் கூறியிருந்தீர்கள். எனினும், அது இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கவில்லை.

அத்தோடு, கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ மட்டக்களப்பிற்கு வருகைத் தந்தபோது, உடனிருந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர், தனது மாவட்டத்தில் இருதயவியல் பிரிவின் ஆய்வகம் அமைக்கப்படும் என்றும் எதிர்காலத்தில் எமது மாவட்டத்திற்கு இதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில், குறித்த ஆய்வகம் குறித்த நிலைப்பாட்டை அறிவிக்க முடியுமா எனக் கேட்க விரும்புகிறேன். ஏனெனில், கிழக்கு மாகாணத்திற்கு இவ்வாறான ஆய்வகம் ஒன்று இல்லாமல் இருக்கிறது. இருதயவியல் பிரிவின் ஆய்வகம் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் மாவட்டத்திற்கு அருகிலுள்ள மாவட்டங்களில் குறித்த வசதிகள் காணப்படுகின்றன.

இதேவேளை, களுத்துறைக்கு மாற்றப்பட இருப்பதாக அறியக்கிடைக்கின்றது. ஆனால் அங்கிருந்து கொழும்புக்கான பயண தூரம் ஒரு மணித்தியாலங்களே, ஆனால் மட்டக்களப்புக்கு கிடைக்குமானால் பயனடையப்போவது கிழக்கு மாகாணம் முழுவதுமே.

மட்டக்களப்பு அல்லது திருகோணமலையில் உள்ள ஒரு நோயாளி, குறித்த சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளவதற்காக கொழும்புக்கோ அல்லது யாழ்ப்பாணத்திற்கோ எட்டு மணிநேரம் செலவழித்துப் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, மட்டக்களப்பு மாவட்டத்திற்கே இதனை வழங்கக்கூடிய வழிமுறைகள் ஏதேனும் உள்ளனவா” என சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துள்ள சுகாதார அமைச்சர்,மட்டக்களப்புக்குக் கொண்டுவரவிருந்த நிலைமையில் அங்கு காணப்பட்ட தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இதன்காரணமாக, களுத்துறையில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேசவாதிகளினால் கட்டுவிக்கப்பட்ட கட்டடத்திற்கு மாற்றுவதாக முடிவெடுக்கப்பட்டது. அடுத்த ஒப்பந்தத்தின் (Tender) அடிப்படையில் இது மட்டக்களப்பிற்கு வழங்கப்படும். இது தொடர்பாக நான் விபரமான அறிக்கை ஒன்றை அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.