மடு திருத்தலம் புனித பூமியாக பிரகடனம் ; உறுதிப்பத்திரமும் கையளிப்பு

மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் பேர்டினன்ட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (29) ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார்.

கத்தோலிக்க பக்தர்களின் யாத்திரைக்குரிய புனித தலமாக விளங்கும் மடு தேவாலயம் பௌத்த மற்றும் இந்து பக்தர்களினதும் வழிபாட்டிற்குரிய தலமாக விளங்குதல் விசேட அம்சமாகும். மடு தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தின்போது மாத்திரமன்றி, வருடம் பூராகவும் யாத்திரிகர்களும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இலட்சக்கணக்கில் அங்கு வருகை தருகின்றனர்.

கடந்த கால யுத்தத்தின்போது பெரும் பாதிப்புக்குள்ளானதுடன், நீண்ட காலமாக முறையான பராமரிப்பும், புனரமைப்பும் மேற்கொள்ளப்படாதமையினால் மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசம் குறைந்த வசதிகளைக் கொண்ட ஒரு பிரதேசமாக மாற்றமடைந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி, இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, வரலாற்று முக்கியத்துவமிக்க வணக்கஸ்தலமாகிய மடு தேவாலயத்தை பாதுகாத்து, அங்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது அத்தியாவசியமாகும் என்பதனை உணர்ந்து, இப்பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்துவதற்கான ஆலோசனையை முன்வைத்ததுடன், அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது.

இதற்கமைய அப்பிரதேசத்திற்கான போக்குவரத்து, வீதி வசதிகள், நீர்வழங்கல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வணக்கஸ்தலத்திற்கு வருகை தரும் மக்களுக்கான தங்குமிட வசதிகள், ஓய்வு மண்டபங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்குமான விசேட அபிவிருத்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மடு திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக திருத்தலத்தை சூழவுள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பு தேவாலயத்தின் சமய நடவடிக்கைகளுக்கான கட்டிடங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக சுமார் 5,000 ஏக்கர் பரப்புடைய காணியை பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பாதுகாப்பதற்கும் உரிய வர்த்தமானியினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் வணக்கத்திற்குரிய வரலாற்று சிறப்புமிக்க மடு தேவாலயத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தமை தனது பதவிக் காலத்திற்குள் நிறைவேற்றப்பட்ட மேலுமொரு விசேட செயற்பணியாகும் என்பதை எண்ணி தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

பேராயர் இம்மானுவேல் பெர்னாண்டோ உள்ளிட்ட கத்தோலிக்க பாதிரியார்களும் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.