‘மக்கள் சமாதானக் கூட்டணி’ என்ற பெயரில் சஜித் தலைமையில் புதிய கூட்டணி; சின்னம் இதயம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாஸ தலைமையிலான தேர்தல் கூட்டுக்கு “மக்கள் சமாதானக் கூட்டணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி யானைச் சின்னத்தில் களமிறங்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கு மாறாக புதிய கட்சி ஒன்றையும் சின்னம் ஒன்றையும் நேற்றுத் தேர்வு செய்துள்ளது சஜித் தரப்பு.

புதிய கூட்டணிக்கு இதயம் சின்னத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேற்றே விண்ணப்பமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேர்தல் கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்திருந்தது.
அதனடிப்படையிலேயே சஜித் பிரேமதாஸ தலைமையிலான தேர்தல் கூட்டுக்கு “மக்கள் சமாதானக் கூட்டணி’ எனப் பெயரிடப்பட்டு இதயம் சின்னத்தை ஒதுக்
கீடு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அதன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சித் மத்துமபண்டார கோரியுள்ளார்.

நேற்றுக் காலை கூடிய சஜித் தரப்பினர் “எங்கள் தேசிய முன்னணி’ என்ற கட்சியைப் பயன்படுத்தித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான இதன் தலைவராக சேனக டி சில்வாவும் அதன் செயலாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் டயானா கமகேவும் உள்ளனர்.

இது கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் முந்தைய பல தேர்தல்களிலும் போட்டியிட்ட ஒரு கட்சியாகும். கட்சியின் தற்போதைய நிர்வாகத்தை மாற்றி, புதிய நிர்வாகிகளாக தலைவர் பதவிக்கு சஜித்தும் செயலாளர் பதவிக்கு ரஞ்சித் மத்துமபண்டாரவும் நியமிக்கப்படுகின்றனர் என அக்கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

அதனை அங்கீகரிக்கும்படி சஜித் தரப்பு நேற்றுத் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கட்சியின் சின்னம் தொலைபேசியாக இருந்த நிலை யில் அதனை இதயம் சின்னமாக மாற்றும்படியும் கோரப்பட்டுள்ளது.