மக்களின் பட்டினி நிலைமை பற்றி கண்டுகொள்ளாத அரசாங்கம்-யோகேஸ்வரன்

அரசாங்கம் தேர்தலை மையப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதே தவிர கொரனா அச்சுறுத்தலினால் ஏற்படும் பட்டினை சாவை தடுப்பதற்கான திட்டங்களை முன்னெடுப்பதாகயில்லையென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் விசேட நிவாரண திட்டத்தினை அமுல்படுத்திவிட்டே ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

கொரனா அச்சுறுத்தல் காரணமாக ஜனாதிபதியினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந்தவேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்வோர் தமது தொழிலை இழந்துள்ளனர்.ஊரடங்கினை அமுல்படுத்தியுள்ள அரசாங்கம் பெருமளவான மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.சமுர்த்த உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணமானது சமுர்த்தி பயனாளிகளின் கணக்கில் உள்ள நிதியிலேயே வழங்கப்படுகின்றது.

இந்த கொரனா காலத்தில் விசேட நிகழ்வாரண உதவிகளை வழங்கியதா என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது.சதொச மூலமாக மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதாக கூறுகின்றது,ஆனால் களுவாஞ்சிகுடி,கொக்கட்டிச்சோலை பகுதிகளில் இருந்த சதோசவினை மூடிவிட்டார்கள்.இருக்கும் சதோசவில் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவுசெய்யமுடியாதயுள்ளது.

அரசாங்கம் குறைந்த விலையில் பலநோக்கு சங்க வர்த்தக நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும்.அரசாங்கம் சொல்வதை செய்வதாக இல்லை.

இந்த அரசாங்கம் தேர்தலை மையப்படுத்தியதாக செயற்படுகின்றதே தவிர கொரனாவினால் தொழில் இழந்த மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் திட்டமிடுவதாக இல்லை.அவ்வாறானால் அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் விசேடமான நிவாரணத்தினை வழங்கிவிட்டு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தவேண்டும்.ஊரடங்கு சட்டமானது கட்டாயம் அமுல்படுத்தவேண்டும்.அதற்காக மக்களின் அன்றாட தேவையினை உதாசீனம் செய்யமுடியாது.

சாதாரண கூலித்தொழில் செய்வோர்,பெண் தலைமை தாங்கும் குடும்பத்தினர்,விசேட தேவையுடையவர்கள் கிராம புறங்களில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.தொண்டர் அமைப்புகள் வழங்கும் நிவாரணங்களையே பிரதேச செயலகங்கள் மக்களுக்கு வழங்குகின்றன.

அரச நிவாரணங்கள் மக்களுக்கு சென்றடையவில்லை.ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்கால மக்களின் பட்டினி சாவுக்கு வழிவகுக்காமல் அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கமுன்வரவேண்டும்