போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால்,இஸ்ரேலுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை

காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலை மற்றும் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஸ்டார்மர் அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

“இறுதியில், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி நீண்டகால தீர்வுதான். பாதுகாப்பான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசுடன் பாதுகாப்பான இஸ்ரேல் எங்கள் இலக்கு.

உண்மையான அமைதிக்கான பங்களிப்பாக பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என்று நாங்கள் முன்பே கூறியுள்ளோம். இப்போது இரு நாடுகள் தீர்வுக்காக செயல்பட வேண்டிய நேரம் இது,” என்று கெய்ர் ஸ்டார்மர் மேலும் கூறினார்.

சுதந்திர பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் முன்னர் கூறியிருந்தது. செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சமீபத்தில் அறிவித்தார்.

தற்போது, ஐநாவின் மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளன. இவற்றில் ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கும் அரபு குழுவான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அணி சேர நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காசாவில் போர் தொடங்கி 662 நாட்களுக்குப் பின்னர், இஸ்ரேல் காசாவில் 60,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது. இறப்பு எண்ணிக்கை 60,034 ஐ எட்டியுள்ளது, சராசரியாக ஒரு நாளைக்கு 36 பேர் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு, 88 குழந்தைகள் உட்பட 147 பேர் மரணமடைந்த நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து இனப்படுகொலையைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.