போரினால் முதன்மைப் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் சிறுவர்களே

போரின் கொடூரங்கள் யாரையுமே விட்டுவைப்பதில்லை. கடைசியில், எந்தவொரு பாவமுமறியாத சிறுபிள்ளைகளே போரின் சுமையைச் சுமக்கவேண்டியிருக்கிறது.

எந்தவொரு போரை எடுத்துக்கொண்டாலும், அதனால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றவர்களாகவும், அந்தப் போரின் தாக்கங்களுக்கு முகம் கொடுப்பவர்களாகவும் சிறுவர்கள் இருப்பதை நாம் காணக்கூடியதாகவிருக்கிறது. ஏற்கனவே நடந்துமுடிந்த போர்கள் அனைத்துமே, சிறுவர்களின் வாழ்வில் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் அதே நேரத்தில், சமகாலத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்களும் தொடர்ந்து, அவர்கள் மேல் துன்பங்களையும் துயரங்களையும் சுமத்திக்கொண்டிருக்கின்றன.

food1 போரினால் முதன்மைப் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் சிறுவர்களேபோர்கள் நடைபெறும் போது, அவ்வேளையில் சிறுவர்களைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் பல நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தி வருவதன் காரணமாகவும், புவிசார் அரசியலின் காரணமாகவும், அந்த அமைப்பின் செயற்றிறன் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. உலகின் பல பாகங்களிலும் நடைபெறும் போர்களின் காரணமாக உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சொல்லொணாத் துன்பதுயரங்களை சிறுவர்கள் சந்தித்து வருகிறார்கள்.

போர்களும் அவற்றால் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களும்

கடந்த நூற்றாண்டில் நடைபெற்று முடிந்த போர்களும் மோதல்களும், அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்புக்கும் இன்னும் குறிப்பாக சிறுவர்களின் உயிரிப்புகளுக்கும் காரணமாக அமைந்திருக்கின்றன. முதலாம் உலகப் போரில் (1914-1918) நேரடியாக நடைபெற்ற மோதல்கள், குண்டுவீச்சுத் தாக்குதல்கள், பட்டினி போன்றவற்றின் காரணமாக 1.6 மில்லியன் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். அதே நேரம் இரண்டாம் உலகப் போரோ (1939-1945) இன்னும் அதிகமான இழப்புகளை, அதாவது 6 மில்லியன் சிறுவர்களின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.

உலகப் போர்களுக்கு அப்பால், கொரியப் போர் (1950-1953), வியட்நாம் போர் (1955-1975), றுவாண்டா இனவழிப்பு நிகழ்வு (ஏப்பிரல் – யூலை 1994) போன்ற போர்களும் கடந்த நூற்றாண்டில் நடைபெற்று முடிந்திருக்கின்றன. இந்தப் போர்கள் அனைத்துமே மிகவும் மோசமான பாதிப்புகளை சிறுவர்களில் தோற்றுவித்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக கொரியப் போரை எடுத்துக்கொண்டால், அது 5 இலட்சம் சிறுவர்களின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்ததாகக் கணிப்பிடப்படுகிறது. வியட்நாம் போரோ அதற்கு எந்தவிதத்திலும் வேறுபடவில்லை. இரண்டு மில்லியன் சிறுவர்கள் அந்தப் போரினால் பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். றுவாண்டாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் போது, சிறுவர்கள் விசேடமாக இலக்குவைக்கப்பட்டார்கள். 100 நாட்களில், அண்ணளவாக 5 இலட்சம் சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.

Afhan2 போரினால் முதன்மைப் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் சிறுவர்களேஆப்கானிஸ்தான், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, எத்தியோப்பியா, லிபியா, மாலி, சோமாலியா, தென் சூடான், மற்றும் சிரியா போன்ற நாடுகளிலே தற்போது உள்நாட்டுப் போர்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப் போர்கள் கணிசமான அளவு உயிரிழப்புகளையும் இடப்பெயர்வுகளையும் பொதுமக்கள் நடுவில் ஏற்படுத்தியிருக்கின்றன. துரதிட்டவசமாக போர்கள் நடைபெறும் போது, சிறுவர்களுக்கே பாதிப்புகள் அதிகமாக ஏற்படுவது மட்டுமன்றி, உள்நாட்டுப் போர்களிலும் எல்லோரையும் விட சிறுவர்களே அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள்.

இஸ்ரேல்பாலஸ்தீனப் போர்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்குமிடையே தற்போது நடைபெற்றுவருகின்ற போர், அந்தப் பிரதேசத்தில் வாழுகின்ற சிறுவர்கள் மத்தியில் மிகவும் கடுமையான உடனடிப் பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பது மட்டுமன்றி, அந்தச் சிறுவர்கள் இந்த அனுபவங்களின் தாக்கங்களை தமது வாழ்வு பூராகவும் சுமக்க வேண்டிய சூழல் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. “சிறுவர்களின் புதைகுழியாக காஸா நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிறது” என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் குஸ்தாவே குட்டெர்ரேஸ் (Gustavo Guterres) அண்மையில் எச்சரிக்கை செய்திருக்கிறார். காஸாப் பிரதேசத்தில், இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்த காலத்திலிருந்து இன்றுவரை, 15,200 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த எண்ணிக்கையில் 6000 சிறுவர்களும் உள்ளடங்குகிறார்கள். (தற்போதைய எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருக்கும்). நடைபெற்றுவரும் இந்தப் போரின் காரணமாக இருபக்கத்திலுமுள்ள சிறுவர்கள், உடல், உள ரீதியிலான நெருக்கீடுகளுக்கும் கல்வியில் பாதிப்புகளுக்கும், உள்ளாகியிருப்பதுடன், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளையும் நிறைவுசெய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஒரு சக்கரமாக மீண்டும் மீண்டும் தொடருகின்ற இந்த வன்முறைகள், இந்தப் போரின் காரணமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் உறுதியற்ற நிலை போன்ற காரணிகள், ஓர் அமைதி நிறைந்த மற்றும் பாதுகாப்பு நிறைந்த சிறுபராயத்தை இந்தச் சிறுவர்களிடமிருந்து பறித்தெடுத்திருக்கும் அதே நேரம், அவர்களது வாழ்க்கையில் நிலையான பாதிப்புகளையும் தோற்றுவித்திருக்கின்றன.

food3 போரினால் முதன்மைப் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் சிறுவர்களேஐக்கிய நாடுகளின் தரவுகளின் படி, கடந்த இருபது ஆண்டுகளில் நடைபெற்ற போர்களின் காரணமாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கொல்லப்பட்டும் காயங்களுக்கு உள்ளாகியும் இருக்கிறார்கள். குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், வான் தாக்குதல்கள் போன்றவை நேரலாம் என்ற தொடர்ச்சியான பயத்தோடும் அங்கலாய்ப்போடும் இந்தச் சிறுவர்கள் ஒவ்வொரு கணமும் வாழ்ந்துகொண்டிருப்பதன் காரணத்தினால், அவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன், நீண்ட கால உளவியல் உபாதைகளைச் சந்திப்பதுடன், அன்றாட வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதில் பல சிரமங்களை அனுபவிக்கிறார்கள். போரின் காரணமாக தமது குடும்ப உறவுகளையும் நண்பர்களையும் இவர்கள் தொடர்ந்து இழந்து வருவதன் காரணமாக, அவர்களது உணர்வு ரீதியான தாக்கங்கள் மேலும் அதிகரிப்பது மட்டுமன்றி, உளச்சோர்வு, பதற்றம், உளநெருக்கீட்டுக்குப் பின்னரான உளக்கோளாறு போன்றவற்றுக்கும் இந்தச் சிறுவர்களை உள்ளாக நேரிடுகின்றது.

உள்நாட்டுப் போர்களுக்கு முகம்கொடுக்கும் சிறுவர்கள் சந்திக்கும் பாதிப்புகள்
உள்நாட்டுப் போர்களினால் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை உற்றுநோக்கினால், அவர்கள் சந்திக்கின்ற உயிரிழப்புகளும் காயங்களுமே மிக மோசமானவையாகப் பார்க்கப்படுகின்றன. போர்கள் நடைபெறும் பிரதேசங்களில், வன்முறைகள், குண்டுத்தாக்குதல்கள், ஆயுத மோதல்கள் போன்றவை மிகவும் அதிகமாக நிகழ்வதன் காரணமாக, அங்குள்ள சிறுவர்களின் உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன. பல தடவைகளில், நேரடியாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் அவர்கள் இலக்குவைக்கப்படுகிறார்கள் அல்லது நடைபெறும் சண்டையில் அகப்பட்டுக்கொள்கிறார்கள்.

இதன் காரணமாக அவர்கள் ஒன்றில் உயிரிழக்கிறார்கள் அல்லது காயங்களுக்கு உள்ளாகிறார்கள். வன்முறைகளை நேரடியாக அனுபவிப்பதன் காரணமாக அல்லது அவற்றைக் கண்ணால் பார்ப்பதன் காரணமாகவும் இடப்பெயர்வுகள், குடும்பங்களை விட்டுப் பிரிதல், குடும்ப உறவுகளின் இழப்புகள் போன்றவற்றின் காரணமாக உளரீதியான நெருக்கடிகளுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாகிறார்கள். சுகாதார வசதிகள், கல்வி, ஊட்டச்சத்து போன்றவை இல்லாமற் போவதன் காரணத்தினால், அவர்கள் ஊட்டச்சத்துக்குறைவு, நோய்கள், கல்வி இழப்பு போன்றவற்றுக்கும் ஆளாகுகிறார்கள். இவ்வாறான காரணங்களினால் அவர்களது உடல், உள விருத்தி பாதிப்புக்கு உள்ளாவதுடன் தவிர்க்கப்படக்கூடிய நோய்களுக்கு அவர்கள் உள்ளாகுவதுடன், குழந்தை மற்றும் சிறுவர்களின் இறப்பு அதிகரிப்பையும் தோற்றுவிக்கிறது.

mullivaikal food kanchi போரினால் முதன்மைப் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் சிறுவர்களேபோரின் இன்னொரு முக்கிய பாதிப்பு என்னவென்றால், அது பலரை மாற்றுத்திறனாளிகளாக ஆக்குகின்றது. சிறுவர்களை இது பலவழிகளில் பாதிக்கலாம். விமானத் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள், துப்பாக்கிச்சூடு, குண்டுத் தாக்குதல்கள் என்பவற்றைச் சிறுவர்கள் சந்திக்கும் போது, அவர்கள் தமது அவயவங்களை இழக்கக்கூடிய நிலைக்கு உள்ளாவது மட்டுமன்றி, எரிகாயங்கள், மற்றும் முள்ளந்தண்டு தொடர்பான காயங்களுக்கும் உள்ளாகுகின்றார்கள். மேலதிகமாக, துப்பாக்கிச் சூடுகளின் நடுவில் அகப்படும் போதோ, அல்லது அவர்கள் இலக்கு வைத்துத் தாக்கப்படும் போதோ, நிரந்தரமான உடலியல் பாதிப்புகளுக்கு உட்படுத்தப்படுவது மட்டுமன்றி, உயிரிழப்புகளுக்கு உள்ளாகும் ஆபத்தும் இருக்கிறது. அதுமட்டுமன்றி, போரில் சிறுவர்கள் சந்திக்கும் உளநெருக்கடிகள் அவர்களது ஆற்றல்களில் பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமன்றி, அவர்கள் அனுபவிக்கின்ற மன அழுத்தம் மற்றும் பயம் போன்ற உணர்வுகளின் காரணமாக அவர்களது உளநலம் நீண்டகாலப் பாதிப்புகளையும் சந்திக்கலாம்.

பல சந்தர்ப்பங்களில் உள்நாட்டுப் போர்கள், மக்கள் சமூகங்கள் நடுவே பாரிய இடப்பெயர்வுகளைத் தோற்றுவிக்கலாம். இதனால் குடும்பங்கள் தமது சொந்த வீடுகளைக் கைவிட்டு, சனத்தொகை அதிகமான இடப்பெயர்வு முகாம்களிலோ அல்லது அயல்நாடுகளிலோ தஞ்சம் அடையலாம். அவ்வாறான சூழல்களில் வாழ்க்கை வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன், அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அங்கு குறைவாகவே காணப்படுகின்றன. இடப்பெயர்வு முகாம்களில் வாழ்கின்ற சிறுவர்கள், சுரண்டல்கள், துஷ்பிரயோகங்கள், கடத்தல்கள் போன்றவற்றுக்கு உள்ளாகும் ஆபத்துகள் இருக்கின்றன. உறுதித்தன்மை, பழக்கப்படுத்தப்பட்ட சூழல், ஆதரவு வலைப்பின்னல்கள் போன்றவை இழக்கப்படும் போது, அவை சிறுவர்களின் உணர்வுநலனைப் பாதிப்புக்கு உள்ளாக்கி, மன அழுத்தம், பதற்றம், உளநெருக்கீடு போன்றவை அவர்களில் மேலும் அதிகரிக்கக் காரணமாகி விடுகின்றன.

தமிழில்: ஜெயந்திரன்

நன்றி: groundviews.org