போராளிகளை நினைவுகூரும் அடிப்படை உரிமை ஈழத்தமிழருக்கு உள்ளது-பா. கஜதீபன்

உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தமக்காக தங்களை  அர்பணித்தவர்களை நினைவுகூரவும், ஆராதிக்கவும்  உரிமை இருக்கிறது. அதே போன்று மண்ணுக்காக உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும்  அடிப்படை உரிமை ஈழத்தமிழருக்கு உள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிக்கையில்,

“நினைவேந்தல்களை தடைசெய்யும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் உரிமை மீறல் செயற்பாடுகள் என  வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த அரசு  பக்கச் சார்பாக, இனரீதியான செயற்பாட்டை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

இந்த புதிய அரசு கட்டாயமாக எமக்கு தடைகளை விதிக்கும் என தெரிந்து தான் நாம் தற்போது அரசில் உள்ளவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என கடுமையாக வேலை செய்தோம். இதை மக்கள் சிலர் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

உலகத்தில் எங்கும் நடைபெறாத விடயம் தமிழர் பகுதிகளில் தான் நடக்கிறது. எமக்கு எதிரான இந்த செயற்பாடுகள் தொடர அனுமதிக்கக் கூடாது

போராளிகளை பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்தி அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.  ஆனால் இங்கு உயிர்நீத்த மாவீரர்கள் இங்குள்ள பெற்றோரின் பிள்ளைகள் தான்; சகோதரர்கள் தான்; ஏதோ ஒருவகையில் அவர்கள் இங்குள்ளவர்களின் உறவுகள் தான்; உயிர்நீத்த உறவுகளை குடும்ப அங்கத்தவர்கள் நினைவு கூரவேண்டும்.

இம்முறை நினைவேந்தல்களை தடுப்பதற்கு புது விளக்கங்கள் கொடுக்கிறார்கள். தொற்று நோய் பரவும் காராணத்தையும் குறிப்பிடுகிறார்கள்.

இத் தொற்றுநோய் உலகம் முழுவதும் உள்ள நோய். அதை நாம் அலட்சியம் செய்ய முடியாது. அதற்கு ஏற்ற வகையில் சுகாதார நடைமுறைகளின் படி அனைவரும் மாவீரர் வாரத்தை அனுஸ்டிக்க வேண்டும்.

பழைய விடயம் மறப்பது நாகரீகமல்ல – நடந்து முடிந்த விடயங்களை நினைவு கூருவது என்பது நாம் எப்படியானவர்கள்; எமது பாரம்பரியம், எமது வரலாறு என்பன மறைக்கப்படமால் இருப்பதற்கு ஏற்ற விடயம். அதை மக்கள் உணர்ந்து, தொடர்சியாக இந்த நினைவேந்தல்களை எந்த தடை வந்தாலும் கடைப்பிடிக்க முன்வர வேண்டும்.

இந்த அரசு நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கோருவதுடன், அதற்கான அழுத்தங்கள் கொடுப்போம். அனுமதியை பெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுப்போம்” என்றார்.