போதையில் புதைந்து போகும் நம் சமுதாயத்தினால் தடம் மாறி போகும் எதிர்கால விழுதுகள் -பாலநாதன் சதீஸ்

அப்பா! அம்மாவுக்கு அடிக்காதேங்க….

அம்மா அம்மா வாம்மா எங்கயாவது போகலாம்…….. என ஒரு சிறுமியின் அழுகைக் குரல் நாற்காலியில் அமர்ந்திருந்த என் காதில் ஒலித்தது. சட்டென எழும்பி அப்பக்கம் சென்று பார்த்தேன் அக் குரல் என் பக்கத்து வீட்டுச் சிறுமியின் குரல்…

ஏங்க குடிங்கிறீங்க … நான் உங்கள நம்பித்தானே வந்தேன். இனி குடிக்காதேங்க நம்மட பிள்ளைன்ர முகத்த பாருங்கோ…… என கணவனின் கால் உதைபட்டு விழுந்து அழுதுகொண்டிருந்தாள் மனைவி. அதனை பார்த்த என் மனதுக்குள் ஏதோ ஒரு பாரம். எதனால் நம் சமூகத்திற்கு இந் நிலை. இந்த போதை பழக்கத்தால் ஒரு குடும்பமே வீதிக்கு வந்துவிடுகின்றது. இன்னும் எத்தனை இழப்புக்கள் என என் மனது அச் சம்பவத்துக்கான காரணம் பற்றி ஆராயத் தொடங்கியது.

மாறிவரும் விஞ்ஞான யுகத்திலே மக்கள் சமுதாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எதிராக இலங்கையில் அதிகரித்துவரும் பிரச்சினை தான் இந்த போதைப்பொருள். ஆரோக்கியம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த மிகப்பெரும் அருட்கொடையாகும். ஆனால் அதனை பொருட்படுத்தாத நம் சமுதாயம் இளம் வயதிலேயே போதைப்பொருளுக்கு அடிமையாகி தம் வாழ்க்கையை இழக்கும் அழிவுப்பாதை நோக்கி விரைந்து செல்கின்றார்கள்.

அதிலும் போருக்குப் பின்னர் இந்தப் போதைப் பொருள் பாவனை நம் சமூகத்தின் மத்தியில் இன்று அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. “இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் முடிவடைந்த பின்னர் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது” _ இலங்கை மதுவரி திணைக்களம்.

போதைப்பொருள் என்ற வகையில் மதுபானம், கஞ்சா, குடு, மாவா, போதைக்காக பயன்படுத்தும் ஊசிகள், புகையிலை என பல வகைகளில் பல பெயர் சொல்லி போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றது. இப்போதைப் பொருட்கள் நம் சமூகத்தவரின் கையில் இன்று எளிமையாகவும், பரவலாகவும் இலகுவாக கிடைத்துவிடுகின்றது. இதனால் பள்ளிப்பருவத்திலையே எம் இளம் சமுதாயம் போதைவஸ்து பழக்கத்திற்கு அடிமையாகும் அபரித நிலை இன்று காணப்படுகின்றது. இதற்கு காரணம் யார்? நம் கண் முன்னே இளைஞர்களின் வாழ்கை போதை பழக்கத்தால் சீரழிவுக்கு செல்கின்றது. இதற்கு யார் காரணம்?

ஓ….ஆங்காங்கே மூலை முடுக்கெல்லாம் மதுபானக்கடைகளும், அதற்கு கிடைத்த அங்கீகாரம்களும் தான். அதுமட்டுமல்ல இன்றைய தென்னிந்திய சினிமாக்கள் இளைஞர்கள் போதைப்பொருளை பாவித்தால் தான் கீரோயிஷம் என்று காட்டும் பகட்டு சித்தரிப்புக்களும், மகிழ்ச்சியாய் இருந்தாலும் குடி, கவலையை மறப்பதற்கும் குடி என்ற மனோநிலைக்கு இளைஞர்களை தள்ளும் சினிமாக்களும் தான் காரணம். நம் இளைய தலைமுறையினரை போதைப்பழக்கத்திற்கு தள்ளி, அவர்கள் வாழ்க்கையினை சிதைக்க அத்திவாரமிடுகிறது அரசு. அதற்கு துணைபோகிறது இன்றைய சினிமா.

போதை என்னும் கடலுக்குள் மூழ்கியிருப்பவர்களுக்கும், மூழ்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் என்றுமே வாழ்க்கையின் சுவாரஷ்யம் புரியப்போவதில்லை! அதிக தீங்கை விளைவிக்க கூடிய இரசாயனப்பண்டம் தான் போதைப்பொருள்! அது சொற்ப அளவில் தேகத்தை அடைந்துவிடும் ஆனால் அதனால் வரும் தீங்குகள் தான் அதிகம் ஆகும்.

தொடர்ந்து போதை பொருளுக்கு மனிதன் அடிமையாகும் போது முதலில் பாதிக்கப்படுவது மனிதனின் நரம்பு மண்டலமே. இதனால் ஞாபக சக்தியை முதலில் இழக்கின்றார்கள் . பின்னர் சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. இதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது. மனிதனில் மாற்றங்கள் ஏற்படுகின்ற போது தன்னம்பிக்கையை இழக்கின்றார்கள். இதனால் உடல் சோர்வுக்கு உட்பட்டு தனிமையை நாடி, தற்கொலைக்கு முயற்சிக்கின்றார்கள். இவ்வாறு உயிரை அணு அணுவாக காவு கொள்ளும் போதை பொருள் தேவைதானா? இதனால் உங்களுக்கு இழப்புக்கள் தான் எஞ்சும்.

“இலங்கையில் குறிப்பாக முப்பது வருடங்களில் உயிர் இழந்தவர்களைவிட போதைப்பொருளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வருடம்தோறும் 47000 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றார்கள் – சுகாதாரத்துறை.

போதை பொருளுக்கு அடிமையாவதால் உடல், உளத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் பல பிரச்சினை ஏற்படுகின்றது. இப்பழக்கத்தால் நடத்தைகளில் பல மாற்றம் ஏற்படுகின்றது. இதனாலேயே பல பிரச்சினைகள் துளிர்விட ஆரம்பிக்கிக்கின்றது. முதலில் குடும்ப வாழ்க்கை உருக்குலைந்து போகின்றது. இதனால் சமுதாயத்தில் அவர்களுக்கென சேமித்து வைத்திருந்த அந்தஸ்தை இழக்கின்றார்கள். இந் நிலை ஏற்படும் போது அலுவலக வேலை, நட்பு, உறவினர்கள் என எல்லா தொடர்புகளிலும், உறவு நிலைகளிலும் விரிசல் ஏற்படுகின்றது. இதனால் வாழ்கையில் அனுபவிக்க வேண்டிய இலட்சியங்கள், கனவுகளை இழந்து சிறகொடிந்த பறவை போல தனிமைப்படுத்தப்பட்டு தீராத பல நோய்களுக்கு ஆட்பட்டு வாழ்க்கை சிதறடிக்கப்பட்டு நடு வீதியிலே நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பமும் தத்தளிக்கின்றார்கள். இந் நிலைக்கு யார் காரணம்? நீங்கள் செய்யும் தவறுக்கு உங்கள் குடும்பத்துக்கா தண்டனை. சிந்தியுங்கள் இளைஞர்களே!

அம்மா வாங்கம்மா ….. எனக்கு பசிக்குது.. என மறுபடியும் ஒரு அலறல் கேட்டது. எட்டு திக்குகளிலும் அலைபாய்ந்த என் சிந்தனைகளை நிலைநிறுத்திக்கொண்டு மீண்டும் அப்பக்கம் திரும்பினேன் . அந்த குரல் அதேசிறுமியின் குரல் தான். கீழே உதைபட்டு விழுந்த தாயை தழுவி முத்தமிட்டாள். தாயும் மகளை அரவணைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தனர். நானும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டேன்.