இலங்கை பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில், ஒரு அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்புக்கூறலையும் அதன் நிர்வாகத் திறனையும் உரசிப் பார்க்கும் முக்கிய நிகழ்வுகளாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் அமைகின்றன.
அந்த வகையில், அண்மையில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை யில்லாப் பிரேரணை அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீண்ட விவாதங்களுக்குப் பின்னர், 104 மேலதிக வாக்குகளால் இப்பிரேரணை அரசாங்கத்தினால் தோற்கடிக் கப்பட்டது. வாக்கெடுப்பில் ஆதரவாக 49 வாக்குகளும், எதிராக 153 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 22 உறுப் பினர்கள் பங்கேற்கவில்லை.
இந்த வெற்றியானது அரசாங்கத்தின் பாராளுமன்ற பலத்தை உறுதிப்படுத்தியிருந்தாலும், முன்வைக்கப்பட்ட தரவுகளும் புள்ளிவிவரங்களும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு கொள்கைகள் வாக்குறுதிகள் குறித்து பாரிய கவலைகளை எழுப்பியுள்ளன.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மையப்பொருள், நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்கு தரமற்ற நிலக்கரியைக் கொள்வனவு செய்தமை மற்றும் அமைச்சரின் கடந்த கால ஊழல் குற்றச்சாட்டுகள் என்பனவாகும்.
2025 டிசம்பர் முதல் 2026 பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியானது, வழக்கமான தர நியமங்களை விடவும் மிகக் குறைந்த வெப்பப் பெறுமானத்தைக் கொண்டிருந்ததாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
வழக்கமாக இருக்க வேண்டிய 6150 கலோரி பெறு மதிக்கு பதிலாக, 4900 முதல் 5900 வரையிலான குறைந்த தர நிலக்கரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக நுரைச்சோலை மின் நிலையத்தில் 150 மெகாவாட்டிற்கும் அதிகமான மின் உற்பத்திப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இத்தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் மட்டும் நாட்டுக்கு ஏற்பட்ட நேரடி நிதி இழப்பு சுமார் 8.5 பில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. இது தனிநபர் ஒரு வருடைய அல்லது அமைச்சொன்றின் தோல்வி என்பதைத் தாண்டி, நாட்டின் தேசியப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பாரிய நிர்வாகச் சீர்கேடாகும்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அமைச்சரின் தற்போதைய செயற்பாடுகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. குமார ஜயகொடி இலங்கை உரக்கம்பனியின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில், அரசுக்கு அண்ணளவாக 8.86மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத் தியதாக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பகிர்வுப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டின்கீழ் பிணையில் இருக்கும் ஒருவர், நாட்டின் முக்கியமான அமைச்சுகளில் ஒன்றான வலுசக்தி அமைச்சராக நீடிப்பது நல்லாட்சி மற்றும் பொது நலனுக்கும் எதிரானது என்பது எதிர்க்கட்சிகளின் பிரதான வாதமாகும்.
மேலும், நிலக்கரி கொள்வனவு நடைமுறையில் பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமை, கொள்முதல் காலத்தை 42 நாட்களில் இருந்து 21 நாட்களாக வேண்டுமென்றே குறைத்தமை மற்றும் முறையான தரப்பரிசோதனை ஆய்வாளர்களை நியமிக்கத் தவறியமை போன்ற முறைகேடுகள் ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்குப் பதிலளித்த அரசாங்கத் தரப்பினரும், வலுசக்தி அமைச்சர் ஜயக்கொடியும் இக்குற்றச்சாட்டுகளை அரசியல் காழ்ப்புணர்ச்சி எனக்கூறி நிராகரித்தனர். அமைச்சர் குமார ஜயகொடி தனது உரையில், கடந்த காலங்களில் நிலக்கரி விநியோகத்தில் ஆதிக்கம் செலுத்திய ‘ராஜபக்ஷ முகவர்களின்’ ஊழல் வலையமைப்பைத் தான் உடைத்தெறிந்ததால் தன் மீது போலியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகத் தெரிவித்தார். ‘மக்கள் பணத்தில் ஒரு சதத்தைக்கூட நான் மோசடி செய்யவில்லை, நிரூபித்தால் பதவியைத் துறக்கத் தயார்’ என்று அவர் பகிரங்கமான சவாலும் விடுத்துள்ளார்.
அதேநேரம், 2010 ஆம் ஆண்டு முதல் 2026 வரை நாட்டுக்கு வந்த 462 நிலக்கரி கப்பல்கள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தலைமையில் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இது முந்தைய அரசாங்கங்களின் ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் முயற்சியாகப் பார்க் கப்பட்டாலும், தற்போதைய இழப்புகளுக்கான உடனடிப் பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் நழுவுவதற் கானவொரு தந்திரோபாயம் தான்.
சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர், தமது சகபாடியான அமைச்சர் ஜயக்கொடியை தற்காத்துப் பேசுகையில், கொள்வனவு நடைமுறைகளில் அமைச்சர் நேரடியாகத் தலையிடவில்லை என்றும், தொழில்நுட்பக் குறைபாடுகளை ஊழலாகச் சித்தரிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.
‘முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல திட்டமிட்டு அமைச்சரவையைத் தவறாக வழிநடத்தியது போன்றதொரு செயல் இங்கு நடைபெற வில்லை’ என்றே அவர்கள் வாதிட்டனர்.
இருப்பினும், தரமற்ற நிலக்கரியினால் ஏற்பட்ட 8.5 பில்லியன் ரூபா இழப்பானது பாரிய நிதிச் சுமையாகும். இந்தத் தரம் குறைந்த நிலக்கரியை எரிப்பதன் மூலம் மின் நிலைய இயந்திரங்களுக்கு ஏற்படும் நீண்டகாலப் பாதிப்புகள் பற்றிக் கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோன்று, நிலக்கரியை பயன்படுத்தும்போது வெளி யேறும் சாம்பலின் அளவு 25 சதவீதம் வரை அதிகரித்ததால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுகள் என்பன மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். டீசல் மூலம் மேலதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய நாளொன்றுக்கு 50 மில்லி யன் ரூபா கூடுதல் செலவிடப்படுவதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் பி. பெரேரா ஆகியோர் முன்வைத்த வாதங்களின் படி, ஒரு அமைச்சர் சட்டத்திற்கும் பாராளுமன்ற நடத்தைக் கோவைக்கும் அப்பாற்பட்டவர் அல்லர். ஆகவே சட்ட நட வடிக்கைகளை முன்னெடுப்போம் என்றனர்.
அதேநேரம் ஆளும் தரப்பினர் ஊழல், மோசடி கள் நடைபெற்றால் ‘எதிர்க்கட்சியினர் குறிப்பிடும் வரை நாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம், கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுப்போம்’ என்று திடமாகக் கூறினார்கள். ஆனால் 153 வாக்குகளைப் பயன்படுத்தி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்தமை யானது ஒருவகை பெரும்பான்மைவாதம் தான்.
தரவுகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட நிர் வாகத் தோல்விகளை அரசியல் பலத்தால் மூடிமறைக்க முயற்சிப்பது, ஊழலுக்கு எதிரான மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு உகந்த பண்பல்ல. ஊழல் எதிர்ப்பு என்பது முந்தைய ஆட்சியை விமர்சிப்பது மட்டுமல்ல, தற்போதைய ஆட்சியில் நிகழும் தவறுகளுக்கும் பொறுப்பேற்பதாகும்.
இந்த விவாதத்தின் போது வெளிவந்த மற் றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், நிலக்கரி விநியோகஸ்தர்களுக்கான தகுதி நிபந்தனைகள் வேண்டு மென்றே தளர்த்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டாகும். முறையான தொழில்நுட்ப அல்லது சட்ட ஆலோசனைகள் இன்றி விநியோக அனுபவ நிபந்தனை கள் மாற்றப்பட்டதாகத் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.
மேலும், சட்டமா அதிபரின் அனுமதி பெறுவதற்கு முன்னரே உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள், நிர்வாக நடைமுறைகளில் நிலவும் அவசரத்தையும் அலட்சியத்தையும் காட்டுகின்றன.
இத்தகைய சூழலில், அரசாங்கம் முன்மொழியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது 2010 முதல் விசாரணைகளை முன்னெடுக்கும் போது, தற்போதைய அமைச்சரின் மீதான குற்றச்சாட்டுகள் அந்தப் பெரும் பட்டியலில் ஒன்றாக மாற்றப்பட்டு அதன் தீவிரம் குறைக்கப் படலாம்.
ஆக, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட விதம் இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் தார்மீகப் பொறுப்புக்கூறல் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
நிதி இழப்புகள் மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்த கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அறிக்கைகள் சபையில் பகிரங்கமாக முன்வைக்கப்பட்ட போதிலும், அரசியல் கூட்டுப் பொறுப்பு என்ற போர்வையில் அவை நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளன.
குறித்த விடயம் சம்பந்தமாக விசாரணைகள் ஒருபுறம் நடந்தாலும், வெளிப்படையான எண்மிய கொள்முதல் முறைகள் மற்றும் தார்மீகப் பொறுப்பேற்றல் என்பன நடைமுறைக்கு வரும் வரை, இது போன்ற விவாதங்கள் பெரும்பான்மைவாதத்தால் வெறும் சடங்குகளாகவே முடிவுக்கு வந்துவிடும்.
அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு கொள்கையை மெய்ப்பிக்க வேண்டுமானால், விசாரணைகளில் தவறு கண்டறியப்படும் பட்சத்தில் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பதே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழியாகும்.”



