பொத்துவில் முதல் பொலிகண்டி வரை  பேரணி விவகாரம் – வழக்கு தள்ளுபடி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி பேரணிக்கு எதிராக கல்முனை காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்று கல்முனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இன்று குறித்த வழக்கு விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘கல்முனை நீதவான் இல்லாத சமையத்தில்  ஒரு பதில் நீதவான் முன்னிலையில் அழைப்பாணைகளை பெற்றிருந்தார்கள்.

நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை விசாரிப்பதற்கான எந்தவிதமான நியாயதிக்கங்களும் கிடையாது. ஆகையிலானால்   அழைப்பாணையை பெற்ற சட்ட மாணவர் ஒருவர் மேன்துறையீட்டு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஒரு மேன்முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவினை நான் ஆதரித்து இருந்தேன். இதன் காரணமாக கல்முனை நீதிமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு ஒரு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையானது பிரதிவாதிகளை கேட்காமல் கொடுக்கப்பட்ட கட்டளை என்பதனால் மே மாதம் 18ம் திகதி வரை அமுலில் இருக்கும். அதன் பின் பிரதிவாதிகள் சமூகமளித்ததன் பின் குறித்த வழக்கை முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும்.

இந் நிலையிலேயே இந்த தடை உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் மூலம் கல்முனை நீதிமன்ற பதிவாளருக்கு அறிவிக்கப்பட்டு இன்று காலை தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

குறித்த வழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ. யோகேஷ்வரன், அ.நிதான்சன்,துணைச் செயலாளர் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி, செ.கணேஷ் தமிழ் மாணவர் மீட்பு அணி தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினரும் ஆகிய 7 பேருக்கு எதிராக கல்முனை காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.