பொது வேட்பாளர் விடயத்தை நாம் சரியாக கையாளவேண்டும் – செல்வம்

மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் எந்த தேர்தலையும் சந்திப்பதற்கும் நாம் தயாராக தான் இருக்கின்றோம். ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடந்தால் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனப்பிரச்சனை சார்ந்து தமிழ் தரப்பிற்கு என்ன செய்யவேண்டும், என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

வெறுமனே கருத்துச் சொல்லிவிட்டு ஏமாற்றுகின்ற நிலைமையினை இம்முறை மக்கள் ஏற்க்கமாட்டார்கள். அதற்கு உடந்தையாக நாங்களும் இருக்கமாட்டோம். பொது வேட்பாளர் விடயத்தை நாம் சரியாக கையாளவேண்டும்.

தமிழினம் ஒருவரை நிறுத்திவிட்டு சொற்பவாக்குகளை பெறும் நிலை இருந்தால் ஒட்டுமொத்த தமிழினத்தின் மானமே போய்விடும். எனவே சரியான நெறிப்படுத்தலின் ஊடகவே அந்த விடயத்தை செய்யவேண்டும்” என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.