பொது வேட்பாளரை தமிழ்க் கட்சிகளால் ஒற்றுமையாக நிறுத்த முடியாது – விக்கியை நேரில் சந்தித்து கூறிய ஜனாதிபதி

09 4 பொது வேட்பாளரை தமிழ்க் கட்சிகளால் ஒற்றுமையாக நிறுத்த முடியாது - விக்கியை நேரில் சந்தித்து கூறிய ஜனாதிபதிதமிழ்க் கட்சிகளால் ஒற்றுமையாக – ஓரணியாக தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த முடியாது என்று விக்னேஸ்வரன் எம்.பியிடம் தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

யாழ்ப்பாணம் வந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை இரவு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனை நல்லுாா் கோவில் வீதியில் உள்ள அவரின் இல்லத்துக்கு தேடிச் சென்று சந்தித்தார். நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் விக்னேஸ்வரன் எம்.பி. தெரிவித்தவை வருமாறு –

“தமிழ்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அவர்களால் ஒற்றுமையாக பொது வேட்பாளரை நிறுத்தமுடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார். இது எமக்கு – தமிழ்க்கட்சிகளுக்கு வெட்கட்கேடான விடயம். அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களித்த பின்னர் இரண்டாவதாக சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதை தாம் வரவேற்பதாகவும ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை சஜித் பிரேமதாஸ முழுமையாகத் தருவதாக கூறியுள்ளமை தொடர்பாக ஜனாதிபதியுடன் நான் உரையாடிய போது அதற்கு அவர், பொலிஸ் அதிகார மற்ற 13ஆம் திருத்தச் சட்டத்தையே தருவதாக சஜித் கூறினார். அதனையே நானும் ஏற்கனவே கூறியுள்ளேன் என்று தெரிவித்தார். வேண்டுமானால் சஜித்துடன் முழுமையாகப் பேசிப் பாருங்கள் என்றும் கூறினார்.”