இந்தியாவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் நபர்களுடன் பல இலங்கையர்களுக்கு தொடர்பு?

91 இந்தியாவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் நபர்களுடன் பல இலங்கையர்களுக்கு தொடர்பு?ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் எனும் சந்தேகத்தில் இந்தியாவில் கைதான நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த மேலும் சிலரின் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதன்படி, ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் மாளிகாவத்தைப் பகுதியில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களுடன் நாட்டினுள் தொடர்பு வைத்திருந்த நபர்கள் தொடர்பில் ஏற்கனவே தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுடன் நெருங்கிய தொடர்பு
வைத்திருந்த ஒருவர் மாளிகாவத்தையில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரே சம்பந்தப்பட்ட நால்வருக்கும் விமானச் சீட்டு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.