பொதுத் தேர்தலை அரசு ஒத்திவைக்க வேண்டும்; கபே அமைப்பு கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலைப் பிற்போடுமாறு கபே அமைப்பு (சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்)தேர்தல் ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கபே அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: –

”தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அச்ச சூழ்நிலையில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர். இந்நிலையில் தேர்தலை நடத்துவதென்பது அசாதாரண நிலைமையாகும். குறிப்பாக வேட்பு மனு தாக்கல் செய்யும்போது ஏற்படக்கூடிய விடயங்கள் மற்றும் அதன்பின்னர் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு சிக்கல்கள் காணப்படுகின்றமையினால் தேர்தல் நடவடிக்கைகளை பிற்போடுவது அவசியமாகும்ஃ

மேலும் நிர்வாக சேவைகள் சிலவற்றை மாத்திரம் திறந்து தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாகும். சிலநாடுகளில் நடைபெறக்கூடிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கூட பிற்போடுகின்ற நிலையில் இலங்கையில் தேர்தலை பிற்போடுவது குறித்து அரசாங்கம் எந்ததொரு அறிவிப்பையும் இதுவரை விடுக்கவில்லை.

மேலும் தேர்தலுக்கு முன்னர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தான் தற்போதைய சூழ்நிலையில் முக்கியமானதொன்றாக காணப்படுகின்றமையினால் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”