பேச்சுக்கு அழைப்பதன் மூலமாக ரணில் வகுக்கும் உபாயம் என்ன? – அகிலன்

அடுத்த வருடத்தில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தோ்தலில் ரணில் போட்டியிடுவாா் என்பது இதுவரையில் உத்தியோகபுா்வமாக அறிவிக்கப்பவில்லை இருந்தபோதிலும், அதனை இலக்காகக் கொண்ட காய் நகா்த்தல்களை அவரது ஆதரவாளா்கள் ஆரம்பித்துவிட்டாா்கள். கட்சி சாா்பற்ற முறையில் ஒரு “பொது வேட்பாளராகவே” ரணில் போட்டியிடுவாா் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவா்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க அறிவித்திருக்கின்றாா். ஐ.தே.க. வேட்பாளராகக் களமிறங்குவதைவிட, பொது வேட்பாளராகப் போட்டியிடுவதன் மூலமாக மற்றைய கட்சிகளின் ஆதரவையும் தக்கவைத்துக்கொள்ளலாம் என ரணில் தரப்பு கருதுவதாகத் தெரிகின்றது.

ranil 1200x900xt பேச்சுக்கு அழைப்பதன் மூலமாக ரணில் வகுக்கும் உபாயம் என்ன? - அகிலன்அரசியலரங்கில் பல நிகழ்வுகள் இப்போது இடம்பெற்றுவந்தாலும், அவை அனைத்தும் ஜனாதிபதித் தோ்தலை இலக்காகக் கொண்டவையாகத்தான் இருக்கின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக வேண்டும் என்ற இலக்குடன் ரணில் முன்னெடுத்துவரும் நகா்வுகளுக்கு, ஆதரவாக அவரது நம்பிக்கைக்குரிய ஆதரவாளா்கள் பலா் தீவிரமாகச் செயற்படத் தொடங்கியிருக்கின்றாா்கள். கொழும்பின் மையப் பகுதியில் ரணிலின் தோ்தலை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அலுவலகம் ஒன்று ஜனவரியில் திறக்கப்படவிருக்கிறது. அதனுடன் இணைந்ததாக தோ்தலுக்கான செயற்பாடுகளை முழுவீச்சில் முன்னெடுக்க ரணில் தரப்பு தயாராகியிருக்கின்றது.

ஜனாதிபதிப் பதவியிலிருந்து மக்கள் போராட்டத்தின் மூலமாக கோட்டாபய ராஜபக்ஷ துாக்கி எறியப்பட்டமையால், அதிஷ்ட வசமாக ஜனாதிபதியாகியவா்தான் ரணில். கோட்டாபயவின் எஞ்சிய இரண்டரை வருடங்கள் மட்டும்தான் அவா் ஜனாதிபதியாக இருக்க முடியும். ஆனால், மீண்டும் ஒருமுறை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக வேண்டும் என்பது அவரது தற்போதைய இலக்கு. “மக்கள் ஆணையைப் பெறாதவா்” என்று எதிா்த் தரப்பினா் சொல்வதை முறியடிக்க வேண்டுமானால், மக்கள் வாக்குகள் மூலமாக ஜனாதிபதியாக வேண்டும்.

அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கும் அவருக்கு பலமான பக்கங்களும் உள்ளன. பலவீனமான பக்கங்களும் உள்ளன.

பலமான பக்கங்கள் எனக் கூறும் போது, நாடு எதிா்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடியை அவரால்தான் ஓரளவுக்காவது முடிவுக்குக் கொண்டுவர அவரால்தான் முடிந்தது என்று மக்கள் நம்புகின்றாா்கள். பொருளாதார நெருக்கடியை உச்சத்துக்குக் கொண்டு சென்றவா் கோட்டாபய, மற்றும் பஸில் என்ற கருத்து சிங்கள மக்களிடம் உள்ளது. கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறி, பதவியைத் துறந்த போது, அதிகாரத்தைப் பெறுவதற்கு சஜித் பிரேமதாஸ தயங்கினாா். நெருக்கடியைத் தன்னால், சமாளிக்க முடியாது என அவா் கருதியது அந்தத் தயக்கத்துக்குக் காரணம் என்பதுதான் சாதாரண சிங்கள மக்களின் கருத்து.

இந்த நிலையில், துணிச்சடன் அதிகாரத்தைக் கைகளில் எடுத்து, நாட்டை வழமைக்குக் கொண்டுவர ரணிலால் முடிந்தது. இதேபோல, எதிா்காலத்திலும் நெருக்கடிகளை எதிா்கொள்ளக் கூடியவராக ரணில் இருப்பாா் என்பது சிங்கள மக்களில் பெரும்பாலானவா்களின் கருத்தாக இருக்கின்றது. இது ரணிலின் முதலாவது பலம். சாதாரண மக்களிடம் காணப்படும் இந்தக் கருத்தை வலுப்படுத்துவதில், ரணிலின் ஆதரவாளா்கள் ஈடுபட்டுள்ளாா்கள். ரணிலும், மக்களிடம் காணப்படும் அந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதில் முழுமையான கவனத்தைச் செலுத்துகின்றாா். ரணிலுக்கு சாதகமாகவுள்ள முதலாவதும் பலமானதுமான அம்சம் அதுதான்!

எதிரணியினரிடையே பலமான ஒரு வேட்பாளா் இல்லாமலிருப்பது ரணிலுக்குப் பலத்தைக் கொடுக்கும் இரண்டாது விடயம். ஜே.வி.பி.யின் தலைவா் அனுரகுமார திசாநாயக்க கணிசமான வாக்குகளை இம்முறை ஜனாதிபதித் தோ்தலில் பெற்றுக்கொள்வாா் என எதிா்பா்க்கப்பட்டாலும், வெற்றிபெறத் தேவையான 50 வீதமான வாக்குகளை அவரால் பெறமுடியாது.  வாக்கெடுப்பில் அவா் மூன்றாவதாக வருவதற்கே வாய்ப்புக்கள் உள்ளன.

sajith premadasa e1581381441757 பேச்சுக்கு அழைப்பதன் மூலமாக ரணில் வகுக்கும் உபாயம் என்ன? - அகிலன்சஜித் பிரேமதாஸவின் பலம் எவ்வாறானதாக இருக்கும் என்பது திட்டவட்டமாகக் கூறக்கூடியதாக இல்லை. காரணம், அவருடன் இணைந்திருக்கும் சரத் பொன்சேகா, சம்பிக்க ரணவக்க ஆகியோா் தாமே ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என கட்சிக்குள் குடைசல் கொடுத்து வருகின்றாா்கள். இவா்கள் சஜித்துக்கு ஆதரவாக எந்தளவுக்கு பணியாற்றுவாா்கள் என்பது தெளிவாக இல்லை. அதனைவிட, சஜித் அணியிலிருந்த சிலா் ஏற்கனவே ரணிலின் பக்கம் சென்றுவிட்டாா்கள். மேலும் சிலா் ரணிலுடன் இணையலாம் என எதிா்பாா்க்கப்படுகின்றது. இதற்கு மேலாக சஜித் அணியில் உள்ள மலையக, முஸ்லிம் கட்சிகள் இறுதி வரையில் சஜித்துக்கு ஆதரவாக இருப்பாா்களா என்ற கேள்வி உள்ளது.

பொதுஜன பெரமுனையில் காணப்படும் பிளவுகளும், அதில் ஒரு பிரிவினா் ரணிலை ஆதரிக்க விரும்புகின்றாா்கள் என்பதும்  ரணிலுக்கு சாா்பான மற்றொரு விடயம். பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது. சுமாா் ஐயாயிரம் பேரை மாத்திரமே கொள்ளக்கூடிய சுகதாஸ உள்ளரங்கில் மாநாடு நடைபெற்றதால், பெருந்திரளான மக்கள் அதில் கலந்துகொண்டதாக “படம்” காட்டப்பட்டது. இதன் மூலமாக கட்சி மீணெ்டெழுந்திருப்பதாகக் காட்டிக்கொள்ள ராஜபக்ஷக்கள் முற்பட்டாா்கள். ஆனால், ராஜபக்ஷக்களிடையோயான முரண்பாடுகளும் இதன் மூலமாக வெளிப்பட்டது.

basil 2023 பேச்சுக்கு அழைப்பதன் மூலமாக ரணில் வகுக்கும் உபாயம் என்ன? - அகிலன்பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளா் ஒருவரை நிறுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளா் இதனை அறிவித்தாா். நான்கு பெயா்கள் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. பசில் ஆதரவாளா்களே பொது ஜன பெரமுன ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாகத் தெரிகின்றது. கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவாகியிருக்கும் மகிந்த ராஜபக்ஷ இவ்விடயத்தில் முரண்படுகின்றாா். ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதுதான் அவரது நிலைப்பாடு. ரணில் அதிகாரத்தில் இருப்பதுதான் தமக்குப் பாதுகாப்பானது என்பது மகிந்தவின் கருத்து.

பொருளாதாரக் குற்றவாளிகள் என உயா் நீதிமன்றமும் ராஜபக்ஷக்களை அடையாளப்படுத்தியிருக்கும் நிலையில், ஜனாதிபதித் தோ்தலில் தமது ஆள் ஒருவரை களத்தில் இறக்கி ரணிலின் வெற்றிவாய்ப்பை பாதிப்பதற்கு மகிந்த விரும்பமாட்டாா் என்றே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இவை அனைத்தும் ரணிலுக்கு சாதகமான விஷயங்கள்.

பலவீனமான விஷயங்கள் எனப் பாா்க்கும் போது, அவரது ஐக்கிய தேசியக் கட்சி பரிதாபமான ஒரு நிலையில்தான் இருக்கின்றது. கடந்த பொதுத் தோ்தலில் அவா்களுக்கு ஏற்பட்ட படுதோல்வியிலிருந்து கட்சியை ரணிலால் துாக்கி நிமிா்த்த முடியவில்லை. வரலாற்றில் முதல் தடவையாக எந்தவொரு ஆசனத்தைக் கூட ஐ.தே.க.வினால் கடந்த தோ்தலில் பெற முடியவில்லை. இதனால், கட்சிக் கிளைகள் அனைத்தும் செயலிழந்திருக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தை நான் துாக்கி நிமிா்த்துகிறேன் கட்சியை நீங்கள் பாா்த்துக்கொள்ளுங்கள் என ரணில் அதற்கான பொறுப்பை தனது லெப்பினட்களிடம் ஒப்படைத்திருக்கின்றாா்.  ஆனால், அவா்களும் அதற்கான வேலைத் திட்டம் ஒன்றை உருவாக்கி செயற்படுவதாக இல்லை.

இந்தப் பின்னணியில்தான் ரணிலை கட்சி சாா்பற்ற ஒரு வேட்பாளராக நிறுத்துவதற்கு திட்டமிடப்படுகின்றது.

எவ்வாறாயினும் அவா் வெற்றி பெறத் தேவையான 50 வீதமான வாக்குகளைப் பெறுவதற்கு தமிழ் வாக்குகள் அவசியம். தோ்தல் எதிா்கொள்ளப்படும் நிலையில், இன நெருக்கடிக்கான அரசியல் தீா்வு எதனையும் முன்வைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், வாக்குறுதிகளை வழங்க முடியும்.

இந்த நிலையில்தான், வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினா்களுடனான சந்திப்பு ஒன்றுக்கு ரணில் அழைப்பு விடுத்திருந்தாா். வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ் மக்கள் எதிா்கொள்ளும் காணிப்பிரச்சினை, கைதிகள் விவகாரம் என்பவற்றுடன் அரசியல் தீா்வு தொடா்பாகவும் பேசப்பட்டது. அரசியல் தீா்வைப் பொறுத்தவரையில், அதற்கான முயற்சிகள் எதுவும் இடம்பெறாது என ரணில் தெளிவாகவே சொல்லிவிட்டாா். பொதுத் தோ்தலின் பின்னா் ஒரு வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பின் மூலமாக தீா்வு முன்வைக்கப்படும் என்பதுதான் அவரது நிலைப்பாடு.

அரசியலமைப்பின்படி 2025 ஆகஸ்ட்டில்தான் பொதுத் தோ்தல் நடைபெற வேண்டும். அப்படியானால், 2026 இல்தான் தீா்வு குறித்து ஆராயப்படும். அதற்கு முன்னா் அடுத்த வருடம் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தோ்தலில் அவா் வெற்றிபெற வேண்டும். ஜனாதிபதித் தோ்தலில் என்னை வெல்ல வையுங்கள் 2026 இல் தீா்வு குறித்து புதிய பாராளுமன்றத்தில் ஆராய்வோம் என்பதைச் சொல்வதற்காகத்தான் தமிழ் எம்.பி.க்களை ரணில் பேச்சுவாா்த்தை மேசைக்கு அழைத்திருந்தாரா?