பெண் அரச உத்தியோகத்தர் மீது தாக்குதல்! நிறைவடையும் நிலையில் விசாரணை!

நிந்தவூரில் இம்மாதம் முதலாம் திகதியன்று அரச ஊழியர் கடமையேற்பு வைபவத்தில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி தவப்பிரியா சுபராஜ் தொடர்பான விரிவான விசாரணை இன்று முற்பகல் 11 மணியளவில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கல்முனை பிராந்திய அலுவலகத்தில் ஆரம்பமானது.

cc பெண் அரச உத்தியோகத்தர் மீது தாக்குதல்! நிறைவடையும் நிலையில் விசாரணை!
இவ்விசாரணையின் போது இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் தலைமை தாங்கியதுடன் குறித்த சம்பவத்தில் முறைப்பாட்டாளர் சார்பாக பெண்ணின் கணவர் சுபராஜ் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் அம்பாறை மாவட்ட விவசாய சேவை திணைக்கள உதவி ஆணையாளர் எல்.ஜீ சாமினி சோமதாச ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் 2 மணித்தியாலங்களாக குறித்த விசாரணைகள் இடம்பெற்றதுடன் பொலிஸ் தரப்பில் தற்போதைய விசாரணையின் முன்னேற்றங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணையில் விரிவாக ஆராயப்பட்டது. மேலும் சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கை கிடைக்க பெற்ற பின்னர் குறித்த வழக்கு விசாரணையின் அறிக்கையை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டது.

இதேவேளை அம்பாறை மாவட்ட விவசாய சேவை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எல்.ஜீ சாமினி சோமதாச விசாரணையின் போது குறித்த பெண்ணை தாக்கிய நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இருந்த போதிலும் அவருக்கெதிராக திணைக்களத்தின் உள்ளக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அது தொடர்பாக விடயங்கள் வெளியிடப்படும். அத்துடன் கட்டாய விடுவிப்பில் நிந்தவூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.எம்.கார்லிக் உள்ளார். இது தவிர தாக்கப்பட்ட முறைப்பாட்டாளரான பெண் உத்தியோகத்தர் இடமாற்ற கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். அந்த விடயம் சாதகமாக பரீசிலனை செய்யப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விசாரணையில் மேற்கூறியவர்களை தவிர தாக்குதல் நடத்தியதாக முறையிடப்பட்டிருக்கும் நிந்தவூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.எம்.கார்லிக் கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சட்ட வைத்திய அதிகாரி பாதிக்கப்பட்ட பெண் எவரும் இன்றைய விசாரணையில் சமூகம் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தர் கல்முனை ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். அரச உத்தியோகத்தரான பெண்ணை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.