புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை – உருத்திரகுமாரன்

மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான செயல்வழிப்பாதை என்ன என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது புத்தாண்டுச் செய்தியில் விளக்கியுள்ளார்.

இலங்கைத்தீவில் தமிழர் தேசம் சிங்கள தேசத்துடன் சமத்துவமாக, கௌரவமாக, பாதுகாப்பாக, இனஅழிப்புக்கு உள்ளாகாத வகையிலான அரசியல் உடன்பாடு எவற்றுக்கும் வரமுடியாது என்பதனையும், இத்தகையதொரு ஏற்பாட்டுக்கு சிங்கள தேசம் என்றும் தயாராக இருக்கப் போவதில்லை என்பதனையும் 2019 மீண்டும் நிரூபித்துள்ளது எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழர் தேசத்;தின் அரசியற்குரலாக தேர்தல் அரசியலைக் கடந்த தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்று உருவாக வேண்டும். சுயநல அரசியல்வாதிகளுக்கு மாற்றாக மக்களை உண்மையாக நேசிக்கும், மக்களுடன் இணைந்து செயற்படும், மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் புதிய அரசியற் தலைமை தமிழ் மக்களுக்காக உருவாக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தேசப்பற்று, நிமிர்ந்த நன்நடை, புதுமைமிக்க சிந்தனை, அறிவுசார் நடத்தை, தளராத உறுதி, சொல்லில் தெளிவு, செயற்பாட்டில் துணிவு, சோர்ந்து போகாத தொலைநோக்கு, சமூகநீதியில் பற்றுறுதி, இயற்கை மீது காதல், சூழல் பாதுகாப்பில் அதியுயர் அக்கறை, உயரிய மனித நேயம் இத்தனையும் கொண்ட புதியதோர் அரசியற் பண்பாட்டு அரசியற்சமூகம் உருவாக்குவதற்கான விதைகளை நாட்டும் பெரும்பணி 2020 தொடக்கம் பெறும் என்ற எதிர்பார்ப்புடன் இப் புதிய ஆண்டினை வரவேற்றுக் கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டில் கடந்தவை, ஈழத்தமிழர் தேசத்தின் நிகழ்ச்சி நிரல் என ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குhன செயல்வழிப்பாதையினை முன்வைத்துள்ள புத்தாண்டுச் செய்தியின் விரிவான அறிக்கை :

புதியதோர் அரசியற் சமூகமும் புதுமை கொண்ட அரசியற் பண்பாடும் உருவாக 2020 ஆண்டு வித்தி;டட்டும்!

தமிழீழ மக்களுக்கும், உலகத் தமிழ் மக்களுக்கும், தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராடிவரும் உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மலரும் இப் புத்தாண்டில் எனது தோழமையுடனான வணக்கத்தையும், வாழ்த்தையும், அன்பையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன். இன்று மலர்ந்துள்ள புத்தாண்டு உலக மக்களின் வாழ்வில் வளத்தையும், சமத்துவத்தையும், சமாதானத்தையும் மேம்படச் செய்யும் என நம்புவோமாக.

2019ஆம் ஆண்டு தமிழ்மக்களுக்கு அரசியல்ரீதியாகத் தெளிவான சில செய்திகளைக் கூறிவிட்டுக் கடந்து சென்றிருக்கிறது. இலங்கைத்தீவில் தமிழர் தேசம் சிங்கள தேசத்துடன் சமத்துவமாக, கௌரவமாக, பாதுகாப்பாக, இனஅழிப்புக்கு உள்ளாகாத வகையிலான அரசியல் உடன்பாடு எவற்றுக்கும் வரமுடியாது என்பதனையும், இத்தகையதொரு ஏற்பாட்டுக்கு சிங்கள தேசம் என்றும் தயாராக இருக்கப் போவதில்லை என்பதனையும் 2019 மீண்டும் நிரூபித்துள்ளது.

தமிழீழ மக்களின் அடிப்படை அரசியல் நிலைப்பாடுகளைக் கைவிட்டு, தமிழீழ மக்களைப் பெரும் அரசியற்தோல்விக்குள் தள்ளிவிடக்கூடியதொரு அரசியல் ஏற்பாட்டுக்குத் தமிழரது நாடாளுமன்றத் தலைமை தயாராக இருந்த போதும் சிங்கள தேசம் அதனையும்;கூட 2019 இல் நிராகரித்துள்ளது. தமிழர் தலைமை கைகோர்த்திருந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு அரசியல் ஏற்பாட்டையும் வழங்க முடியவில்லை. இவர்களால் முடியவில்லை எனக் கூறுவதைவிட சிங்கள ஆட்சியாளர்கள் எவரும் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை வழங்குவதற்குத் தயாராக இல்லை எனக் கூறுதலே கூடுதல் பொருத்தமுடையதாகும்.

2009ஆம் ஆண்டில் தமிழர் தேசத்தின் மீதான முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குத் தலைமை தாங்கியவர்களை சிங்கள தேசம் மீண்டும் ஆட்சி அரியணையில் ஏற்றியதனை நாம் 2019இல் கண்டுள்ளோம். மனிதகுல வரலாறு வெட்கித் தலைகுனியுமளவுக்குத் தமிழ் மக்களைக் கொன்றொழித்தவர்களிடம் இது குறித்து ஒரு கிஞ்சித்த சலனமோ மனக்கிலேசமோ இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பான்மையான சிங்கள மக்களிடமும் தமிழ் மக்கள் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பான எந்தவித அக்கறையும் வெளிப்படவில்லை. இலங்கைத் தீவு தமக்கு வாக்களிக்கப்பட்ட பூமி (Promised Land) என்ற மகாவம்ச புனைவு மனவுலகிற்குள் அவர்கள் புதைந்து கிடக்கிறார்கள் என்பதனையே இது வெளிப்படுத்துகிறது. இலங்கைத்தீவில் தமிழின அழிப்புக்கு எதிராகத் தமிழ் மக்கள் தமது போராட்டத்தை உறுதியாகத் தொடர வேண்டும் என்பதனை 2019ஆம் ஆண்டு; மீண்டும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.

சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய இராஜபக்ச பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு மாறாக அரசியல் அதிகாரம் எவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். இவர் தன்;னைச் சிங்கள தேசத்தின் தலைவர் என்ற நிலையில் வைத்துக் கொண்டு, தமது நாட்டை வழிநடத்தும் ‘ஒரு நாடு – ஒரு மக்கள்’ என்ற கோட்பாட்டின் நிலைப்பட்டுத்தான் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவரது இக் கருத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.

இலங்கைத்தீவு ஒரு மக்களைக் கொண்டதொரு நாடல்ல. இங்கு சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு அமைந்துள்ள சிறிலங்கா என்ற அரசினை சிங்கள தேசம் தனக்கான அரசாக உருமாற்றியிருக்கிறது. இலங்கைத்தீவில் சிறிலங்காத் தேசியம் என்பது சிங்களத் தேசியமாகவே உள்ளது. தமிழர் தேசம்; காலனித்துவ காலத்தில் தான் இழந்த இறைமையினை மீட்டெடுத்து, தனது பாரம்பரியத் தாயகத்தில் தனக்கான தமிழீழத் தனியரசினை உருவாக்குவதற்கு முயன்று வருகிறது. உலகின் அரசற்ற தேசங்களில் ஒன்றாகத் ஈழத் தமிழர் தேசமும் இருந்து வருகிறது.

சிங்கள தேசத்தின் அரசாக இருக்கிற சிறிலங்கா அரசு ஒரு ஜனநாயக அரசு அல்ல. அது ஓர் இனநாயக அரசு. ஒரு இனத்தின் முடிவுகளின் அடிப்படையில் இயங்கும் அரசு. அதாவது சிங்கள தேசத்தின் மக்களால் முடிவுகள் தீர்மானிக்கப்படும் ஓர் அரசு. கோத்தாபயவும் சிங்கள தேசத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதோர் அரசுத் தலைவர்தான். அவர் சிங்கள தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியே இயங்குவார். இதில் எமக்கு எந்த வருத்தமோ முரண்பாடோ இல்லை. சிங்கள அரசிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதனை நாம் காலாதி காலமாகக் கூறியே வந்திருக்கிறோம். கோத்தாபயவின் கூற்று எமது நிலைப்பாட்டையே உறுதிப்படுத்துகிறது.

இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்தின் இறைமையும், அந்த இறைமையின் அடிப்படையில் தனக்கென்றதோர் அரசினை இத் தாயக மண்ணில் அமைப்பதற்கு ஈழத் தமிழர் தேசத்துக்குள்ள உரிமையும், அவ்வுரிமையினைச் சிங்கள தேசம் நிராகரிப்பதிலும் இருந்துதான் ஈழத் தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினை உருக்கொள்கிறது.  தமிழர் தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கருத்துத் தெரிவிக்கும் உரிமை கோத்தாபயவுக்கோ அல்லது வேறு எந்த சிங்களத் தலைவர்களுக்கோ கிடையாது. காலனித்துவ காலத்தில் வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டு சிங்கள தேசம் தமிழர் தேசத்தை அடிமை கொள்ள முடியாது. தமிழ் மக்களின் சம்மதம் இல்லாத முடிவுகளைச் சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணிக்க முடியாது.

சிங்கள தேசத்தின் தலைவராகவுள்ள கோத்தாபய சிங்கள மக்களின் விருப்பப்படி தமது ஆட்சியைத் தொடரட்டும். ஈழத் தமிழர் தேசத்தினை அதன் விருப்பப்படியே விட்டு விடட்டும். தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் உரிமையினைக் கொண்டவர்கள் என்பதனை நாம் என்றும் முரசறைந்து கூறுவோம். மேலும் கோத்தாபய ஒரு தமிழின அழிப்புக் குற்றவாளி என்பதனையும், மனித குலத்துக்கு எதிராக இவர் இழைத்த குற்றத்துக்காக அனைத்துலக குற்றவியல் விசாரணைப்பொறிமுறையின் கீழ் நிறுத்தப்பட வேண்டியவர் என்பதனையும் நாம் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் வகையில் வெளிப்படுத்துவோம்.

2020ஆம் ஆண்டில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஈழத் தாயகத்தில் இப் பத்தாண்டுகளில் மாவீரர்களின் கனவான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைப்பது என்ற உயரிய இலட்சியத்தை நாம் சுமந்து வந்திருக்கிறோம். தமிழ் மக்கள் தமது  அரசியற் பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்கு உரிய அரசியல்வெளி இல்லாத சூழலில் வாழ்வதால் நாம் இதனை எமது முதன்மை இலக்காகக் கொண்டு இயங்குகிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப் படுவதற்கு அமைக்கப்பட்ட மதியுரைஞர் குழு அறிக்கை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து ஈழத் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு எதிரான செயற்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. தமிழர் தலைவிதி தமிழர் கையில் என்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தையும் நடத்தி வருகிறது. தமிழீழத்தை அமைப்பதற்கு உதவக்கூடிய வெளியுறவுக் கொள்கையுடன் இணைந்தவாறு தனது செயற்பாடுகளை பல்வேறு தளங்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இவ் வருடமும் தொடர்ந்து மேற்கொள்ளும். இந்துப் பெருங்கடல் நீர்ப்பரப்பின் புவிசார் அரசியலுடன் பின்னிப் பிணைந்திருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டம் காலத்துக்காலம் சந்திக்கும் பல்வேறு அரசதந்திர மற்றும் உபாயங்கள் சார்பான சவால்களை எதிர்கொள்ளவென எமக்கேயான அறிஞர் குழாம் ஒன்றினை இவவாண்டு நாம் கட்டியமைக்கவும் உள்ளோம்.

சிங்கள தேசம் தமிழர் தேசத்தினை ஆக்கிரமிப்புச் செய்து இனக்கபளீகரம் செய்யப் பகீரத முயற்சி நடாத்தும் இன்றைய சூழலில் ஈழத் தமிழர் தேசம் தனது  தேச அடையாளத்தை ஈழத் தாயகத்திலும் புலம் பெயர் மக்கள் மத்தியிலும் கொண்டாட வேண்டும். எமது அரும்பெரும் மொழியினை நாம் வீட்டிலும், வெளியிலும், நாம் கூடுமிடமெங்கும் பேசவேண்டும். அதையும் பிறமொழிக் கலப்பின்றி எமக்கே இயல்பான அழகுடன் பேசித்திரிய வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் பாரம்பரியக் கலைகள் புதுமெருகுடன் நிகழ்த்தப்பட வேண்டும். தமிழ் மக்களின் பாரம்பரிய உணவும் மரபும் தமிழ் வாழ்க்கைமுறையுடன் வலுவாக இணைக்கப்படுவதுடன் உலக மக்கள் மத்தியிலும் பரவலாக்கப்பட வேண்டும். தமிழர் கூடும் விழாக்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகளால் நிரம்பி எமது தேச அடையாளம் அங்கு மிளிர வேண்டும்.

தமிழர் தேசத்;தின் அரசியற்குரலாக தேர்தல் அரசியலைக் கடந்த தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்று உருவாக வேண்டும். சுயநல அரசியல்வாதிகளுக்கு மாற்றாக மக்களை உண்மையாக நேசிக்கும், மக்களுடன் இணைந்து செயற்படும், மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் புதிய அரசியற் தலைமை தமிழ் மக்களுக்காக உருவாக வேண்டும். தேசப்பற்று, நிமிர்ந்த நன்நடை, புதுமை மிக்க சிந்தனை, அறிவுசார் நடத்தை, தளராத உறுதி, சொல்லில் தெளிவு, செயற்பாட்டில் துணிவு, சோர்ந்து போகாத தொலைநோக்கு, சமூகநீதியில் பற்றுறுதி, இயற்கை மீது காதல், சூழல் பாதுகாப்பில் அதியுயர் அக்கறை, உயரிய மனித நேயம் இத்தனையும் கொண்ட புதியதோர் அரசியற்சமூகம் உருவாக வேண்டும். அத்தகைய அரசியற்சமூகத்தைக் கட்டியெழுப்பும்போது அதற்கிசைவான புதியதொரு அரசியற் பண்பாடும் தானாக உருவாகி வெளிப்படும். அழுக்கடைந்து கொண்டே போகும் இன்றைய அரசியற் பண்பாடு எம்மைவிட்டு நீங்கும். அப்போது மட்டுமே ஈழத் தமிழர் தேசம் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து தன்னைப் பாதுகாப்பதுடன், ஒரு மாண்புமிகு சமூகமாகவும் தன்னை ஆக்கிக் கொள்ள முடியும்.

இதற்கான விதைகளை நாட்டும் பெரும்பணி 2020 தொடக்கம் பெறும் என்ற எதிர்பார்ப்புடன் இப் புதிய ஆண்டினை வரவேற்றுக் கொள்வோமாக.

தமிழர் தலைவிதி தமிழர் கையில், தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.