புதையல் தோண்டினார்களாம்: 5 படையினர் உட்பட 21 பேர் கிளிநொச்சியில் கைது

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 5 இராணுவத்தினர் உட்பட 21 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இராணுவத்தினரில் லெப்டினன்ட் கேர்ணல் தர அதிகாரி ஒருவரும் உள்ளடங்குகின்றார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி – தரும்புரம், இராமநாதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டவை எனக் கூறப்படும் பொருள்களைத் தேடுவதாகக் கூறி இவர்கள் அதிநவீன ஸ்கனர் கருவிகளைப் பயன்படுத்தி புதையல் தோண்டுகின்றனர் என விசேட அதிரடிப்படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து விசேட அதிரடிப் படையினரின் அணி ஒன்று முன்னெடுத்த தேடுதலில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் லெப்டினப்ட் கேணல் தர அதிகாரி உள்ளிட்ட 5 இராணுவத்தினரும் அடங்குகின்றனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட அதிநவீன ஸ்கனர் கருவிகளுடன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள தரும்புரம் பொலிஸார், சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.