புதைப்பதற்கு இடமின்றி அலையும் தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகங்கள்

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேரந்த 34 வயதுடைய மொஹமட் அசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அதனை மட்டக்களப்பு புதூர் ஆலையடி மயானத்தில் புதைக்க முற்பட்ட போது அதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதனையடுத்து கள்ளியங்காடு மற்றும் காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் உடல் பாகங்களை புதைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதற்கும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த மாதம் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் குறித்த உடற்பாகங்கள் இரவோடு இரவாக இரகசியமாக புதைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உட்பட பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கல்லடி பாலத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கடந்த மாதம் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த குறித்த உடற்பாகங்கள் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டதுடன், மீண்டும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக் குண்டுதாரியான மொஹமட் அசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்களை உடனடியாக பிரச்சினைகள் எதுவுமின்றி எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் புதைப்பதற்கான நடவடிக்கையை அரசாங்க அதிபர் ஊடாக மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு கடந்த வியாழக்கிழமை  இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

பயங்கரவாதி நசார் மொஹமட் அசாத்தின் உடற்பாகங்களை புதைப்பதற்கு மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் இணக்கம் தெரிவிக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் மா.உதயகுமார் தெரிவித்துள்ளார்.