புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு முடக்கம் – ஆடைத் தொழிற்சாலையில் 261 பேருக்கு கொரோனா

புதுக்குடியிருப்பில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடமையாற்றும் பணியாளர்களில் 261 பேர் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகின்றது.

இனையடுத்து புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதிகள் இன்றிரவு 11.00 மணி முதல் முடக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பலருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு பணியாற்றும் 926 பேருக்கும் இன்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு இடம்பெற்ற பரிசோதனையில் கொரோனா கண்டறியப்பட்ட பணியாளர்களுக்கு முதல் கட்டமாக பி.சி.ஆர். பரிசோதனையும், ஏனைய பணியாளர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் பி.சி.ஆர். பரிசோதனை இடம்பெறவுள்ளது.

கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட குழுவினரே இன்று இந்த விசேட பரிசோதனையை மேற்கொண்டனர். இதேநேரம் இவ்வாறு கொரோனா கண்டறியப்பட்டவர்களின் வீடுகள், அவர்கள் பழகியவர்களின் வீடுகள் என ஆயிரத்தைத் தாண்டிய குடும்பங்கள் தனிமைப் படுத்தலுக்கு உட்பட வேண்டிய அவலமும் காணப்படுகின்றது.

குறித்த ஆடைத்தொழிற்சாலை அடிப்படை சுகாதாரநடைமுறையைப் பின்பற்றாத காரணத்தால் மூடப்படவேண்டும் எனப் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பல தடவைகள் சுட்டிக்காட்டியும் அதன் உரிமையாளர் தென் பகுதியைச் சேர்ந்தவர் என்பதன் அடிப்படையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் விளைவே இந்த நிலைமைக்குக் காரணம் எனத் தற்போது சுட்டிக்காட்டப்படுகின்றது.