பிளவுபட்டுள்ள சுதந்திரக் கட்சியை மீண்டும் இணைக்க முயற்சி – இரு தரப்பினரும் இணங்கியதாக தகவல்

தற்போது இரண்டாகப் பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஒன்றாக இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கு இரு தரப்பினரும் இணங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு குழுக்களுக்கிடையிலான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு ரோஹன லக்ஸ்மன் பியதாச கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகிய இரு தரப்பினருக்குமான கலந்துரையாடலே முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கிடையிலான கலந்துரையாடலை முன்னெடுக்கும் வகையில் இரு தரப்பிலிருந்தும் குழுக்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தவிசாளராக விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவினர் தற்போதும் எதிர்ப்பு தெரிவித்துவருதால் கலந்துரையாடலை முன்னெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க முன்னெடுத்த சட்ட நடவடிக்கைக்கு அமைவாக மைத்திரிபால சிறிசேன குழுவால் கட்சியின் தவிசாளராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு நீதிமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கட்சின் நிர்வாக மற்றும் செயற்குழுவுக்கு தலைமை தாங்குவது யார் மற்றும் அதில் செயற்படும் உறுப்பினர்கள் தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இதேவேளை கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாலித் தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் சந்திரிகா குமாரதுங்கவும் அங்கு சென்றிருந்தார். ரணில் விக்ரமசிங்கவுடன் மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, அனுர யாப்பா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியினர் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும். இவர்களுக்கு மேலதிகமாக நிமல் லான்சாவும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து சுற்றுப்பயணத்தில்
ஈடுபட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.