பிலிப்பைன்ஸில் அரசின் ஊழலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

போலி நிவாரணத் திட்டங்களுக்கு பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்பட்டதாகக் கூறப்படுவதால் பலர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்க ஊழலுக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) பல்லாயிரக்கணக்கான பிலிப்பைன்ஸ் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிலா மற்றும் பிற நகரங்களில் மாணவர்கள், தேவாலய குழுக்கள், பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் முகாம்களைச் சேர்ந்த குடிமக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டங்களின்போது 20 சிறுவர்கள் உட்பட 72 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் 39 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். மேலும் தடுப்பு வேலியாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு ட்ரெய்லர் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டம் இயற்றுபவர்கள் மற்றும் அதிகாரிகள் ஒப்பந்தங்களுக்கு ஈடாக பெரும் லஞ்சம் வாங்கியமை உட்பட பல்வேறு விடயங்கள் இந்தப் போராட்டங்களுக்கு காரணமாக கூறப்படுகின்றன.

அதேநேரம், நாட்டை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் ஏற்பட்ட ஊழலால் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் £1.48 பில்லியன் வரை இழந்திருக்கலாம் என்று பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

கிரீன்பீஸ் அமைப்பு, 2023ஆம் ஆண்டில் காலநிலை தொடர்பான திட்டங்களிலிருந்து £13 பில்லியனுக்கும் அதிகமான தொகை பறிக்கப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது.

“எங்கள் நோக்கம் நமது ஜனநாயகத்தை சீர்குலைப்பது அல்ல. ஆனால், வலுப்படுத்துவது” என்று பிலிப்பைன்ஸின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் கார்டினல் பாப்லோ விர்ஜிலியோ டேவிட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.