பிரித்தானியாவில் தீவிரடமடையும் வன்முறை: அவசர கூட்டத்திற்கு பிரதமர் மீண்டும் அழைப்பு

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மீண்டும் இன்றிரவு அவசர கோப்ரா (COBRA) கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரிட்டனில் கடந்த சில வாரங்களுக்கு முன் 3 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக அங்கு இஸ்லாமியர்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும் எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்தப் போராட்டம் ஆங்காங்கே வன்முறையாக மாறியுள்ளது.

வடகிழக்கு பிரிட்டனின் சவுத்போர்ட் பகுதியில் ஒரு நடனப் பள்ளியில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை செய்தது இஸ்லாமியர் என்ற செய்தி பரவியது. அவர் இங்கிலாந்தில் அகதியாகக் குடியேறியவர் என்றும் தகவல்கள் பரவின. மேலும், அவர் ஓர் மசூதியில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனையடுத்து நாட்டில் பல்வேறு மசூதிகள் சூறையாடப்பட்டன.

குறிப்பாக பெல்ஃபாஸ்ட், வடக்கு அயர்லாந்து பகுதிகளில் திங்கள் கிழமை மாலை முதல் பதற்றமான சூழல் நிலவியது. ஒரு சூப்பர் மார்க்கெட் தீக்கிரையாக்கப்பட்டது.  காவல்துறை மீதும்   பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.  பிபிசி செய்தி நிறுவன தகவலின்படி வன்முறை வெடித்ததில் இருந்து இதுவரை 400-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், வன்முறை தொடர்பாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.