பிரிட்டனை உலுக்கிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடந்து ஒரு வாரத்திற்குப் பின், அந்தக் கலவரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதிப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
ஜூலை 29ஆம் தேதியன்று பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற ‘டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில்’ கலந்து கொண்ட மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த 17 வயதான ஆக்செல் ருடகுபனா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தாக்குதல் நடத்தியவர் 2023இல் படகு மூலம் பிரிட்டனுக்கு வந்த அகதி என்றும், அவர் ஒரு இஸ்லாமியர் என்றும் ஆதாரமற்ற ஊகங்கள் கூறப்பட்டன. இது குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதும் சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 3) பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறின. பிரிட்டனின் ரோதர்ஹாம் நகரத்தில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் வசித்த விடுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பிரதமரும் போராட்டம் நடத்தியவர்களை கடுமையாக எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், பிரிட்டனை உலுக்கிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, நேற்று (07-08-2024) இங்கிலாந்து முழுவதும் உள்ள நகரங்களின் வீதிகளில், அந்தக் கலவரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான ‘இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்’ அமைதிப் பேரணிகளை நடத்தினர்.
வடக்கு லண்டன், பிரிஸ்டல் மற்றும் நியூகேஸில் உட்பட, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் இவர்கள் ஒன்றுகூடி பெரும்பாலும் அமைதியான முறையில் ஊர்வலம் சென்றனர்.
“அகதிகள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்” என்று கோஷமிட்டவாறு இந்த பேரணிகள் நடத்தப்பட்டுள்ளது.