பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் அண்மையில் இலங்கையில் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டியுள்ள நிலையில் நாட்டில் பிரித்தாளும் அரசியல் செல்லுபடியற்றதாகி விட்டது என்பதனை தேர்தல் முடிவுகள் வலியுறுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை இத்தேர்தலில் மலையகம் உள்ளிட்ட சிறு பான்மை கட்சிகள் மோசமான தோல்வியினை சந்தித்துள்ள நிலையில் பிரதிநிதித்துவ அரசியல் கலாசாரம் மாற்றப்பட்டு பெருந்தோட்ட மக் கள் நேரடியாக அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வதே மிகவும் சிறந்ததென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அடிக்கடி வலியுறுத்தி வருகின்றமையும் நோக்கத்தக்கதாகும்.
இலங்கையில் கடந்த செப்டெம்பர் மாதத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து கடந்த நவம்பர்14 ம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளது. இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் இலக்கு பாராளுமன்றத்தில் 160 ஆசனங்களை பெறுவதாகும். இவ்விலக்கினை அண்மித்த தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களை பெற்று பாராளுமன்றத்தில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டது. 1977 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்த நிலையில் அரசியலில் பல்வேறு மாற்றங்களை முன்வைப்பதற்கு அது உந்துசக்தியாக அமைந்தது. குறிப்பாக இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு 1978 இல் முன்வைக்கப்படுவதற்கு இது அடிப்படை யானது. இந்நிலையில் நீண்ட கால இடை வேளையின் பின்னர் தேசிய மக்கள் சக்தி தற்போது மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள் ளது.
முறைமை மாற்றம்
இந்த வெற்றி தொடர்பில் சர்வதேச அரங்கில் வியந்து பேசப்படுகின்றது. மேலும் இவ் வெற்றிக்கு ‘அரகலய’ என்னும் மக்கள் போராட்டத்தின் பங்களிப்பு காத்திரமானதாகும். காரணம் போராட்டக்காரர்கள் முன்வைத்த பிரதான கோரிக்கையாக அமைந்தது முறைமை மாற்றம் (System Change) ஆகும். அதில் மரபு ரீதியான அரசியல் கலாசாரத்தை மாற்று வது, ஊழலற்ற மற்றும் பொறுப்பு கூறும் அரசாங்கத்தினை உருவாக்குவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது, சட்டத்தின் ஆட்சியினை உறுதிசெய்வது மற்றும் ஆட்சிமுறையில் மக்கள் நேரடியாக பங்கேற்பதற்கு வாய்ப்பளிப்பது போன்ற விடயங்கள் கோரிக்கைகளாக காணப்பட்டன. இக்கோரிக்கைகளை நிறைவேற் றக் – கூடிய இயலுமையுள்ள அரசியல் இயக்க மாக தேசிய மக்கள் சக்தியை இலங்கை மக்கள் நம்பியுள்ளனர் என்பதனை தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுவதாக புத்திஜீவிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் இவ் வெற்றியின் ஊடாக நாட்டில் நம்பகத்தன்மையை இழந்துவரும் இரண்டாவது குடியரசு யாப்புக்கு பதிலாக புதிய அரசியல் யாப்பை முன்வைப்பது உள்ளிட்ட பல நகர்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அரசியல் வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நாட்டில்நல்லிணக்கத்தை கட்டி யெழுப்பக்கூடிய சூழ்நிலைக்கு வலுச்சேர்த் திருக்கின்றது. பெரும்பாலான சிங்கள மக்கள் தமிழ் வேட்பாளர்களுக்கும், பெரும்பாலான தமிழ் மக்கள் சிங்கள வேட்பாளர்களுக்கும் இன, மத பேதமின்றி ஆதரவாக வாக்க ளித்துள்ளனர் என்பதையும் தேர்தல் முடிவுகள் வலியுறுத்தியுள்ளன.
இதனை முன்னிலைப் படுத்தி, நாட்டில் பிரித்தாளும் அரசியல் செல்லுபடியற்றதாகிவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தி ருக்கின்றார். மேலும் ‘வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும், மேற்கிலும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை ஒரே மையப்புள்ளியில் இணைக்க இந்தத் தேர்தலால் முடிந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் மூலம் இந்த நாடு விரும்பிய இலக்குகளை அடைவதற்கு மக்கள் அனைவரின் ஆதரவும் நம்பிக்கையும் எமக்குத் தேவை. எனவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை எவ்வாறு அமைதியான முறையில் நிலை நிறுத்துவது, மற்றவர்களின் அரசியல் உரிமைகளை எவ்வாறு மதிப்பது என்பதனை நாம் தேர்தல் முடிகளின் பின்னர் காட்டியுள்ளோம். இந்நாட்டு மக்களுக்கு இதனை ஒரு புதிய அனுபவமாக நான் கருதுகின்றேன்’ என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது நாட்டிற்கு இனவாதம் என்பது சாபக்கேடான பல சந்தர்ப்பங்கள் காணப்படு கின்றன. இவை வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயங்களாகும். இனவாத வெளிப்பாடு காரணமாக தமிழ் மக்களின் உரிமைகள் மறுக் கப்பட்டு அவர்கள் ஓரங்கட்டப்பட்டதன் விளைவை இலங்கை ஏற்கனவே அனுபவித்து விட்டது. இனவாதமானது நாட்டில் யுத்த மேகங்கள் சூழ்வதற்கும், அப்பாவி இளைஞர் படை காவு கொள்ளப்படுவதற்கும், நாட்டின் அபிவிருத்தி கேள்விக் குறியாவதற்கும், சர்வதே சத்தின் முன்னாள் இலங்கை தலை குனிந்து நிற்பதற்கும் ஏதுவானது. இனவாதத்தை கையிலெடுத்து மக்களை பிரித்தாண்டு, குளிர்கா ய்ந்த அரசியல்வாதிகள் இப்போது தோல்வியால் தலைகுனிந்து துவண்டு போயுள்ளனர். ‘இனவாதத்தை கையில் எடுத்தவர்கள் இனவாதத் தாலேயே அழிந்து போயிருக்கின்றார்கள்’ என்பதே உண்மையாகும். எவ்வாறாயினும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இனியும் இந்த நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லை என்பதை பறைசாற்றியுள்ளது. இது ஒரு நல்ல சகுனமாகும்.
போதாத்தன்மை நிலை
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கத்தை வெளிப் படுத்துகின்ற அதேவேளை சிறுபான்மை கட்சிகளை திரிசங்கு சொர்க்க நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்றால் மிகையாகாது. இக்கட்சிகள் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு அரும்பாடு படவேண்டி இருந்தது. இதனிடையே இக்கட்சிகளின் மூலமாக பாராளுமன்றத்துக்கு தெரிவானோர் எண்ணிக்கையும் வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக மலையகத்தைப் பொறுத்தவரையில் 2020 இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை இ. தொ. கா. பெற்றுக் கொண் டது. ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஷ் வரன் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். எனினும் இம்முறை ஜீவன் தொண்டமான் மட்டுமே வெற்றிபெற்றுள்ளார். இவரது வாக்கு வங்கியிலும் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. இதுபோன்றே தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில் உதயகுமார் தோல்வியைத் தழுவியுள்ளார். கண்டி மாவட்டத்தில் வேலு குமார் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில் பதுளை மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், அ.அரவிந்தகுமார், கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசன் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
மலையகத்தில் பிரதிநிதித்துவ அரசியல் என்பது வேரூன்றி காணப்படுகின்றது. மக்கள் கட்சிகளின் ஊடாக பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கின்றார்கள். எனினும் இதன் ஊடாக மக்கள் உரிய நன்மைகளை பெற்றுக் கொள்கின்றார்களா? என்பது குறித்து கேள்விக்குறியே எஞ்சி நிற்கின்றது. ஆட்சியில் உள்ள அரசாங்கத்துக்கு ஆதரவளித்து நன்மைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மையப்படுத்தி அமரர் தொண்டமான் செயற்பட்டு வந்தார். இதன் மூலம் நன்மைகள் சிலவும் கிடைத்தன என்பதனையும் மறுப்பதற்கில்லை. எனினும் இதன் போதாத்தன்மை தொடர்பிலும் கருத்து வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன. அத் தோடு தொழிலாளர் சக்தியை அடிப்படையாகக் கொண்டு பேரம் பேசும் நடவடிக் கைகளி லும் கடந்தகால அரசியல்வாதிகள் ஈடுபட்டனர். ஒரு காலத்தில் இது சாத்தி யப்பட்டது எனினும் பின்வந்த காலங்களில் இனவாத சிந்தனையாளர்களின் எழுச்சி இதில் தொய்வு நிலை ஏற்படுவதற்கு வழி வகுத்தது. அத் தோடு தொழிற்சங்கங்களின் அதிகரிப்பு, தொழிலாளர்களை பிரித்தாளும் நட வடிக்கைகள் எனப்பலவும் பேரம் பேசும் சக்தியை மழுங் கடிக்கச் செய்தது என்பதும் உண்மையாகும்.
ஒரு சமூகம் மேலெழும்புவதற்கு அச்சமூகம்சார் கட்சிகளிடையேயும் மக்களிடை யேயும் ஐக்கியம் என்பது மிகவும் இன்றியமையாததாகும். ஐக்கியத்தின் வலுப்பெறு கையானது சமூகம் உரிமைகள் பலவற்றையும் பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கும். எனினும் மலையக அரசியலைப் பொறுத்தவரையில் கட்சிகள் ஒன்றுக்கொன்று குரோத உணர்வு டனேயே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்ததையே அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஒருவர் மீது ஒருவர் சேறு பூசுதல் மலையக அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலையாக அமைந்தது. இதற்கும் ஒருபடி மேலே போய் வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்த நிகழ்வுகளும் மலையக அரசியலில் இல்லாமலில்லை.
இந்த அசிங்கம் தொலைக்காட்சியிலும் அரங்கேறியது. இத்தகைய நிகழ்வுகளால் மலையக சமூகம் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டதோடு மூன்றாம் தரப்பினருக்கு இது வாய்ப்பாகப் போய்விட்டது. மலையக மக்கள் தொடர்பான ஏளனப்பார்வை இதனால் அவர்களிடத்தில் மேலோங்கியது. பொதுவான விடயங்களில்கூட பல சந்தர்ப்பங்களில் மலையக அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படாது தங்களுக்குள் ‘ குடுமிச்சண்டை ‘போட்டுக் கொண்டதையும் நாமறிவோம். இதனால் பிரதிநிதித்துவ அரசியல் கேள்விக்குறியான சந்தர்ப்பங்களும் அநேகமுள்ளது.
மக்கள் நம்பி வாக்களித்து பாராளு மன்றத்துக்கு அனுப்பி வைக்கும் பிரதிநிதி கள் மக்களை நடுத்தெருவில் விட்டு விட்டு, அம்மக்களை பலிக்கடாவாக்கி உல்லாச வாழ்க்கை வாழ்வதாகவும் பலர் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தனர். இதில் உண்மை இல்லாமலும் இல்லை. இதேவேளை மலையகக் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விமர்சனங்களுக்கு ஒரு போதும் குறைவிருக்கவில்லை.
பிரதமரின் கருத்து
இதனிடையே பெருந்தோட்ட மக்கள் நேரடி யாக அரசியலில் ஈடுபட முடியாதுள்ள நிலை யில் எந்த பிரச்சினைகளுக்கும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளை நாடும் நிலை காணப்படுவது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்ச்சியாக கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றார். ’பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டின் முழுமையான பிரஜை கள். ஏனைய தரப்பினருக்கு கிடைக்கும் உரிமைகள் அவர்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்த வேண்டும். மலையக மக்கள் சுதந்திரமாக தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்ய வேண்டும். பெருந்தோட்ட மக்கள் நேரடியாக அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வதையே நாம் எதிர்பார்க்கின்றோம்’ என்றும் பிரதமர் தெரிவித்திருக்கின்றார். இதற்கேற்ப இம்முறை தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்ட மலையகத்தை சேர்ந்த சிலர் நேரடியாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கின்றனர்.
இதனடிப்படையில் நுவரெலியா மாவட் டத்தில் கிருஷ்ணன் கலைச்செல்வி (33,346), பதுளை மாவட்டத்தில் கிட்ணன் செல்வராஜ் (60,041), அம்பிகா சாமுவேல் (58,201) இரத்தினபுரி மாவட்டத்தில் எஸ். பிரதீப் (112,711) ஆகியோர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். மலை யக அரசியல் வரலாற்றில் முதல் தடவை யாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமை மகிழ்ச் சிக்குரிய செய்தியாகும்.
இந்நிலையில் மலையக கட்சிகளும் அரசியல்வாதிகளும் தமக்கிடையே ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு முன் செல்ல வேண்டும். இதைவிடுத்து இவர்கள் தமக்கிடையேயான குரோதங்களையும், சுயநலன்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு வேறுபட்டு நிற்பார்களானால் கடந்த பொதுத் தேர்தல்களில் சந்தித்த தோல்வியைக் காட்டிலும் அதிகரித்த தோல்வியினை ஒவ்வொரு தேர்த லிலும் சந்திக்க வேண்டியேற்படும். இது மலையக மக்களின் அபிவிருத்தியிலும் தாக்கம் செலுத்துவதாகவே அமையும்.
புதுமுகம் அம்பிகா
இதனிடையே இம்முறை பாராளுமன்றத்துக்கு புதியவர்கள் பலர் உள்ளீர்க்கப்பட்டுள்ளதும் தெரிந்ததாகும். இவர்களுள் ஒருவரான புதிய மலையக பெண் பிரதிநிதி அம்பிகா சாமுவேல் கருத்து தெரிவிக்கையில், தான் முதல் முறையாக அரசியலில் பிரவேசித்துள்ள நிலையில் மலையக இளைஞர் சமூகம் அரசியலில் பிர வேசிக்க தயாராக இருப்பதாக கூறுகின்றார்.
மேலும் ‘தோட்டத்தில் திறன் கொண்ட இளைஞர் குழு இருப்பதாகவும், ஆனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் சிக்கிக் கொண்டுள்ளதாகவும்’ அம்பிகா தெரிவித்துள்ளார். தான் முதல் முறையாக அரசியலுக்கு வருவதால் எமது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்கள். அவர்கள் நல்ல திறன் களைக் கொண்ட ஜனரஞ்சகவாதிகள்.
நாட்டுக்கு சேவைபுரிய ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் ஒருவித கட்டமைப்புக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். அந்த கட்டமைப்பு இப்போது உடைத்தெறியப்பட்டுள்ளது. இனிமேல் பல நல்ல தலைவர்கள் மலையகம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தருவார்கள் என்றும் ஒரு அம்பிகா தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தலில் சிறுபான்மையி னரின் பிரதிநிதித்துவத்தை சம காலத்தைக் காட்டிலும் மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இது குறித்து சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. ’பொதுத் தேர்தலில் சிறுபான்மை மற்றும் பெண் வேட்பாளர்களின் இருப்பு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. இதில் ஒடுக்கப்பட்ட தமிழ் தோட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் குறிப்பிடத்தக்க வெற்றிகளும் அடங்கும்.
இந்த ஆதாயங்கள் தொடர்ந்தும் அதிகரிப்பதை உறுதி செய்வதற்காக, இலங்கை பாராளுமன்றம், தேர்தல் ஆணைக்குழு மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தேர்தலில் போட்டியிடும் சிறுபான்மையினரின் திறனை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்’ என்றும் சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு வலி யுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.