பிரசார மேடைகளில் அதிகரித்துவரும் இனவாதப் பேச்சுக்கள் – தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாங்களும்,  வெறுக்கத்தக்க பேச்சுளும் அதிகரித்து வருவதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் பிரசார மேடைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகளும் வெறுக்கத்தக்க பேச்சுக்களும் வெவ்வேறு ஜனாதிபதி வேட்பாளர்களை மையப்படுத்தி வெளியிடப்பட்டு வருவதாக கபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார்.

இம்முறை சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக விசேட செயலணியொன்றை கபே அமைப்பு நியமித்துள்ளது. குறித்த செயலணி மூலம் சமூக வலையத்தளங்களில் இவ்வாறான கருத்துகள் தொடர்பில் தீவிர கண்காணிப்புகள் இடம்பெற்று வருகின்றன. சில வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாங்களை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றனர்.

அதேபோல் தேர்தல் பிரசார மேடைகள் இனவாதத்துடன் சேர்ந்து வெறுக்கத்தக்கப் பேச்சுகளும் அதிகமாக இடம்பெறுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் மேலும் வளர்ச்சியடைந்தால் வன்முறைகளை நோக்கியே தேர்தல்களம் செல்லுமென சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆசியவன்சமேலும் கூறியுள்ளார்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகியநாள் முதல் நேற்றுவரை 199 முறைப்பாடுகள் கபே அமைப்புக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவங்களாகவே அமைந்துள்ளதாகவும் கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.