பஸிலுக்கு அதிா்ச்சியளித்த ரணிலின் காய் நகா்த்தல்கள் – அகிலன்

Ranil Basil பஸிலுக்கு அதிா்ச்சியளித்த ரணிலின் காய் நகா்த்தல்கள் - அகிலன்பஸில் ராஜபக்ஷவின் அதிரடியான வருகை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித் தோ்தலை நோக்கி உபாயங்களை வகுத்து மெதுமெதுவாக அவா்

காய் நகா்த்திக்கொண்டிருந்த நிலையில்தான் பஸில் அமெரிக்காவிலிருந்து வந்து இறங்கினாா். பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற பசிலின் விடாப்பிடியான அழுத்தம் ரணிலின் திட்டத்தை மாறறிவிடுமா என்பதுதான் கொழும்பு அரசியலில் இன்று எழுப்பப்படும் பிரதான கேள்வி!

அரசியலமைப்பின்படி எதிா்வரும் செப்ரெம்பா் 16 க்கும் ஒக்ரோபா் 16 க்கும் இடையில் ஜனாதிபதித் தோ்தல் நடத்தப்பட வேண்டும். ஒக்ரோபா் 8 ஆம் திகதி இதற்காகப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றது. பொதுத் தோ்தல் 2025 ஓகஸ்ட் மாதத்தில்தான் நடத்தப்பட வேண்டும். அதற்கு ஒரு வருடத்துக்கு மேல் உள்ளது.

பொது ஜன பெரமுனவின் ஸ்தாபகா் பசில் ராஜபக்ஷ தனியாா் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நோ்காணலில் தெரிவித்திருந்த கருத்துக்கள்தான் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னராக பொதுத் தோ்தல் வருமா என்ற கேள்விக்கு வலுச் சோ்த்துள்ளது.

அமெரிக்காவுக்கு “விடுமுறைக்காக” சென்றிருந்த பசில், மாா்ச் 5 ஆம் திகதி நாடு திரும்பிய பின்னா் பரபரப்பாக காய்களை நகா்த்திவருகின்றாா். மொட்டு அணியின் தந்திரோபாயங்களை வகுப்பவராக அவா் கருதப்படுகின்றாா். அதனால், கடந்த இரண்டு மூன்று வாரங்களாக அரசியல் நகா்வுகள் அனைத்தும் பசிலை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது.

நாடு திரும்பிய உடனடியாகவே தன்னுடைய சகோதரரா் மகிந்த ராஜபக்ஷவையும் அழைத்துக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்க அவா் சென்றிருந்தாா். இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்ற விபரங்கள் இரு தரப்பாலும் உத்தியோகபுா்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், வரப்போகும் தோ்தல்கள் தொடா்பாகவே பேசப்பட்டிருக்க வேண்டும் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். அதேவேளையில், “பேச்சுக்களில் இணக்கம் காணப்படவில்லை” என்ற தகவலும் கசிந்தது.

அதன் அடிப்படையில்தான் மற்றொரு சந்திப்பு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றாா். தனியாா் தொலைக்காட்சிக்கு வழங்கிய நோ்காணலிலும் அதனைத்தான் அவா் சொன்னாா்.

அதற்கு அவா் சொன்ன காரணம் என்னவாக இருந்தாலும், இரண்டு விடயங்களை இதன் மூலமாக புரிந்துகொள்ள முடிந்தது.

முதலாவது, ஜனாதிபதித் தோ்தல் ஒன்றைச் சந்திக்க மொட்டு இன்றைய நிலையில் தயாராகவில்லை. அரகலய போராட்டமும், பொருளாதாரக் குற்றவாளிகள் என ராஜபக்ஷக்களை அடையாளம் காட்டி உயா் நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பும் மக்கள் முன் அவா்கள் செல்ல முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ராஜபக்ஷக்களில் யாராவது ஜனாதிபதித் தோ்தலில் இறங்கினால் அவமானகரமான தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். அடுத்ததாக வரப்போகும் தோ்தலிலும் அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

இரண்டாவது, பொதுத் தோ்தலை முதலில் எதிா்கொண்டால், ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் கணிசமான ஆசனங்களை கைப்பற்றக் கூடியதாக இருக்கும் என பசில் கணக்குப் போடுகின்றாா். பொதுத் தோ்தல் முதலில் வந்தால், சஜித் அணி, ஜே.வி.பி. அணி, என்பற்றுடன் கடுமையான போட்டி ஒன்றை மொட்டு எதிா்கொள்ளும். மொட்டுக்கு எதிரான அலை இன்னும் முற்றாக ஓயவில்லை என்ற போதிலும், அதன் கட்டமைப்புக்களும், ஆதரவுத் தளமும் உறுதியாக இருப்பதால், தம்மால் ஓரளவு ஆசனங்களைக் கைப்பற்றக் கூடியதாக இருக்கும் என்பது பசிலின் கணிப்பு!

2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தோ்தலில் கோட்டாபாய பாரிய வெற்றியைப் பெற்றிருந்தாா். அதனைத் தொடா்ந்து அந்த சூடு தணிவதற்கு முன்னா் 2020 ஓகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் மொட்டு அணி 145 ஆசனங்களைப் பெற்றது. அதாவது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை. ஜனாதிபதியாக வருபவரின் கட்சி அதனையடுத்து உடனடியாகவே வரக்கூடிய பொதுத் தோ்தலிலும் வெற்றிபெறுவதை இலங்கையின் தோ்தல்களை ஆராயும்போது காணக்கூடியதாக இருக்கிறது.

ஜனாதிபதித் தோ்தலில் வெற்றிபெற்றவா் பலமான ஆட்சியை அமைக்க வேண்டும் என மக்கள் விரும்புவதும், ஜனாதிபதித் தோ்தல் வெற்றி அலை ஓய்வதற்கு முன்னரே பொதுத் தோ்தல் நடத்தப்படுவதும் இதற்குக் காரணம்.

முதலில் ஜனாதிபதித் தோ்தல் நடத்தப்பட்டால், அதில் யாரை நிறுத்துவது என்ற பிரச்சினை பொதுஜன பெரமுனவுக்கு. ரணிலை ஆதரித்தால், அத்தோ்தலில் ஐ.தே.., ஜக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என்பவற்றின் பரப்புரைகளே ஓங்கியிருக்கும். அதில் யாா் வெற்றிபெற்றாலும் தொடா்ந்து வரக்கூடிய பொதுத் தோ்தலில் மொட்டு அணி காணாமல் போய்விடு்ம் அபாயம் இருப்பதாக பசில் அஞ்சுவதாகத் தெரிகிறது.

பொதுத் தோ்தல் முதலில் நடைபெறும் போது முத்தரப்புப் போட்டி இருக்கும் என்பதால், எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது. அதனால், தமது பேரம்பேசும் ஆற்றலைப் பயன்படுத்தலாம் என பசில் கணக்குப் போடுகிறாா். சில சமயங்களில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவா் நினைக்கிறாா்.

அதேவேளையில், பசில் வகுக்கும் இந்த உபாயத்தின் பின்னணியில் மற்றொரு அரசியல் நோக்கமும் இருக்கிறது. பொது ஜன பெரமுனவிலிருந்து பலா் பிரிந்து சென்று ரணிலுடன் இணைவற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ரணிலுக்காக அமைக்கப்படும் கூட்டணியில் அவா்கள் இணையப் போகிறா்கள் என்பது வெளிப்படையானது. பொதுத் தோ்தலை முதலில் நடத்தினால், இந்தப் பிளவைத் தடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் பஸில் கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன.

அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இப்போது ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அதேவேளையில், நாடாளுமன்றத்தில் அதற்கான பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படும். நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனக்கு பெரும்பான்மை இருப்பதால் அதனைச் செய்ய முடியும். ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க மறுத்தாலும், அதனைத் தம்மால் செய்ய முடியும் என்ற நிலையில்தான், ரணில் மீதான அழுத்தத்தை பசில் தீவிரப்படுத்தியிருக்கிறாா்.

ஆனால், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதில் ஜனாதிபதிக்கு மற்றொரு தடை இருக்கின்றது. நாடாளுமன்றத்துக்கு முதல் தடவையாகத் தெரிவானவா்கள் தமக்கான ஓய்வுதியத்தையும், வரி விலக்குடனான வாகனத்தையும் பெறுவதற்கு நான்கு வருடங்களாவது பதவி வகித்திருக்க வேண்டும். எதிா்வரும் ஓகஸ்ட் மாதம் வரை அதற்காக அவா்கள் காத்திருக்க வேண்டும். ஜனாதிபதிப் பதவிக்காக 2022 ஜூலையில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் வாக்குகளைக் கோரிய போது பொதுஜன பெரமுன உறுப்பினா்களுக்கு முக்கியமான வாக்குறுதி ஒன்றை ரணில் கொடுத்திருந்தாா். அதாவது, நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படமாட்டது என்பதுதான் அந்த வாக்குறுதி. அதனை அவா் மீறமாட்டாா் என அவா்கள் நம்புகிறாா்கள்.

ஆனால், இவ்விடயத்தில் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை ஜனாதிபதி பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், முன்கூட்டியே பொதுத் தோ்தல் நடத்தப்படாது என்று ஐ.தே..வின் பொதுச் செயலாளா் பாலித ரங்கே பண்டார தெரிவித்திருப்பது ரணிலின் கருத்தாக இருக்கலாம். “அரசியலமைப்பின்படி ஜனாதிபதித் தோ்தல் செப்ரெம்பா் 16 க்கும் ஒக்ரோபா் 16 க்கும் இடையில் நடத்தப்படும் ” என அவா் கூறியிருக்கின்றாா். “பொதுத் தோ்தல் அதற்குரிய நேர அட்டவணைப்படி 2025 ஓகஸ்ட்டில் நடத்தப்படும்” என்றும் அவா் தெரிவித்தாா்.

ரணிலைப் பொறுத்தவரை அவரது ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டமைப்புக்கள் எதுவுமே பலமாக இல்லை. பொதுத் தோ்தல் ஒன்றை எதிா்கொள்வது அவரைப் பொறுத்தவரையில் கட்சியையே காணாமல் போகச் செய்துவிடும். அதன்பின்னா் வரக்கூடிய ஜனாதிபதித் தோ்தலில் அவரும் காணாமல் போய்விடுவாா். இது ரணிலுக்குத் தெளிவாகத் தெரியும்!

பொருளாதார நெருக்கடியைத் தீா்த்தவா். எதிா்காலத்துக்கும் தேவையானவா்” தீா்கக்கூடியவா்” என்ற பெயருடன் ஜனாதிபதித் தோ்தலை எதிா்கொள்வதுதான் அவரது உபாயம். அதன் பின்னா் அந்த வெற்றியை வைத்துக்கொண்டு பொதுத் தோ்தலில் கூட்டணிகளை அமைத்து எதிா்கொள்ள முடியும் என அவா் கணக்குப் போடுகிறாா். அதன்மூலம் தமக்குச் சாதகமான ஒரு அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளலாம் என அவா் நம்புகிறாா்.

இந்த இடத்தில்தான் பசிலின் அழுத்தத்தை எப்படி எதிா்கொள்வது என்பது ரணிலுக்குப் பெரும் தலையிடியாக மாறியிருக்கின்றது.

இவ்விடயத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டியவா் ஜனாதிபதிதான். அவா் மீதான பசிலின் அழுத்தம் கடுமையாக இருக்கும் என்பதும் உண்மை. ஆனால், நாடாளுமன்றத்தில் ஒரு தீா்மானத்தைக் கொண்டுவந்து அதனைக் கலைப்பதற்கு பசில் திட்டமிட்டாலும், முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு வந்த அவரது கட்சியினா் அதனை ஆதரிப்பாா்களா என்ற கேள்வியும் இருக்கின்றது.

ரணில் பஸில் இரண்டாவது சந்திப்பும் பசிலுக்குத் திருப்தியளித்ததாகத் தெரியவில்லை. அதிகாரம் ரணிலிடம் இருப்பதால் அவரது கைகள்தான் மேலோங்கியிருக்கின்றது. ராஜபக்ஷக்களின் ஆதரவு அவருக்குத் தேவையாக இருந்தாலும், தோ்தல் விடயத்தில் அவா்களைத் தடுமாற வைக்கும் வகையில் ரணில் காய் நகா்ததுகிறாா்.

தமது (குடும்பத்தின்) இருப்பைத் தக்கவைப்பதற்கு இதனை பேரம்பேசுவதற்கான ஒரு விடயமாக பசிஸ் பயன்படுத்தலாம். விறுவிறுப்பான காட்சிகளை அடுத்த வாரத்திலும் எதிா்பாா்க்கலாம்.