பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ள கோட்டா – அகிலன்

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு சிறீலங்கா அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதனைவிட புலம்பெயர்ந்து செயற்பட்ட பலருடைய பெயர்களும் இந்தத் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே பல அமைப்புக்களும், நபர்களும் தடை விதிக்கப்பட்டவர்களாக உள்ள நிலையில், கடந்த 25 ஆம் திகதியிடப்பட்ட விசேட  வர்த்தமானி மூலம் இந்த அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டதன் நோக்கம் ஜெனிவா தீர்மானத்துக்கான பழிவாங்கல்தான்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா குறித்த தீர்மானம் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே கடந்த செவ்வாய்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 22 நாடுகள் ஆதரவாகவும், 11 நாடுகள் எதிராகவும் வாக்களிக்க, இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. வாக்களிப்பில் பங்கேற்காத நாடுகளின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்திருக்கின்றது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், அடுத்ததாக என்ன நடக்கும் என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது.

“தமிழ் மக்கள் எதிர்பார்த்த பரிகார நீதியை இந்தத் தீர்மானம் பெற்றுத்தரப்போவதில்லை” என ஒரு தரப்பினர் (கஜேந்திரகுமார் அணியினர்) சொல்கின்ற போதிலும், “இது தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் ஒரு திருப்புமுனையாக  – முன்னேற்றமாக அமைந்திருக்கின்றது” என மற்றொரு தரப்பினர் (சுமந்திரன் போன்றவர்கள்) சொல்கின்றார்கள்.

சிறீலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இது எந்தவகையிலும் தம்மைப் பாதிக்கப் போவதில்லை என அவர்கள் கூறுகின்றார்கள். “ஜெனிவா தீர்மானத்துக்கு தாம் அஞ்சப்போவதி ல்லை” என்பது அவர்களுடைய கருத்தாக இருக்கின்றது. ஆனால், பிரதான எதிர்க்கட்சிகள் சிறீலங்கா எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகளைப் பற்றிக் கூறிக்கொண்டிருக்கின்றன.

மீண்டும் ஒரு உள்நாட்டுப் பொறிமுறையைத்தான் இந்தத் தீர்மானமும் பரிந்துரைத்திருந்திருக்கின்றது. 2015 இல் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தில் “சர்வதேச வழக்குதொடுநர்கள், சர்வதேச நீதிபதிகளை” விசாரணையில் இணைத்துக் கொள்வது பற்றி பெயரளவிலேனும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை.

Bachelet 1120x680 2 பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ள கோட்டா - அகிலன்

ஆனால் இந்த தற்போதைய தீர்மானத்தின் செயற்பாட்டுப் பந்தி 9இன் பிரகாரம், குற்றத்தின் பங்காளிகளான இந்த அரசையே, தான் இழைத்த குற்றங்களை விசாரிக்க கோரும் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களாகிய தமிழர்களுக்கு, நீதிக்கான பொறுப்புக்கூறலை பொறுத்தவரையில் இந்த தீர்மானம் மிகவும் பலவீனமானது, வலுவற்றதாகும். குற்றவாளியான சிறீலங்கா அரசை மீண்டும் பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இருந்தபோதிலும் இம்முறை தீர்மானத்திலுள்ள பலமான அம்சமாக, போர்க்குற்றங்கள் குறித்த சாட்சியங்களை – ஆதாரங்களைச் சேகரித்து ஆவணப்படுத்தும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் முக்கியமானதாகும். சிறீலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கப் போகும் விடயமாகவும் இதுவே இருக்கும்.

இதற்காக ஐ.நா. உயர் ஸ்தானிகர் அலுவலகம் 12 பணியாளர்களைப் புதிதாக நியமிக்கவுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதித்துறையுடன் சம்பந்தப் பட்ட சட்ட ஆலோசகர்கள், புலனாய்வாளர்கள்  உட்பட பலர் இதற்காக நியமிக்கப்படவுள்ளார்கள். சாட்சியங்களை ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை இவர்கள் மேற்பார்வையிடுவதுடன், அதற்கான இணைப்பாளர்களாகவும் கடமையாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சாட்சியங்கள் – ஆதாரங்களை சேகரிப்பது – அவற்றை ஆவணப்படுத்துவது – அவற்றை பகுப்பாய்வு செய்வது என்பன இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பணியாகும்.

இதன்மூலம் உடனடியாகவே சிறீலங்கா சர்வதேசத்தின் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறீலங்காவை கண்காணித்து, சிறீலங்கா பற்றிய வாய்மொழி அறிக்கையை எதிர்வரும் செப்டம்பரிலும், எழுத்துமூல அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரியில் சமர்பிக்கும்படியும், அதையடுத்து, மாற்றங்கள் – முன்னேற்றங்கள் இல்லை என்றால், பொறுப்புகூறல் தொடர்பாக அடுத்து எடுக்கப்பட வேண்டிய காத்திரமான நடவடிக்கைகளை அடுத்த வருடம் செப்ரெம்பரில் சிபாரிசு செய்யும்படியும், ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை கோரியுள்ளது.

ஜெனிவாவில் நாம் தோற்றுவிடவில்லை என சிங்கள மக்கள் முன்பாக அரசாங்கம் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், மனித உரிமைகள் பேரவை தமது கண்காணிப்பை ஆரம்பித்துவிட்டது. 12 புதிய பணியாளர்களை நியமிப்பதற்கு முன்னதாக, தற்போதுள்ள பணியாளர்களைக் கொண்டே தமது செயற்பாடுகளை மனித உரிமைகள் பேரவை ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச கண்காணிப்புக்குள் சிறீலங்கா வந்துவிட்டது என்பதுடன், போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை அவர்கள் நேரடியாகச் சேகரித்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்யப் போகின்றார்கள் என்பது எதிர்காலத்தில் பொறுப்புக் கூறலிலிருந்து சிறீலங்கா அரசு தப்பித்துக் கொள்ள முடியாது என்பதையே உணர்த்துகின்றது.

இதனைவிட சிறீலங்கா மீதான பிரேரணைக்கு 40 இற்கும் அதிகமான நாடுகள் இணை அனுசரணையை வழங்கியிருந்தன. இதில் பெரும்பாலான நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளல்ல. சிறீலங்காவின் போக்கில் மாற்றம் ஏற்படாவிட்டால், எதிர்காலத்தில் வர்த்தக ரீதியான நெருக்கடிகளை சிறீலங்கா எதிர்கொள்ளவேண்டி வரலாம் என இராஜதந்திரிகள் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள். அதேபோல, முக்கிய இராணுவ அதிகாரிகள் மீது பயணத் தடைகள் வருவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

ஆக, சிறீலங்கா அரசு மீதான பிடி இறுகியிருப்பதாகவே தெரிகின்றது. முக்கியமான விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை சிறீலங்கா அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதே யதார்த்தம்!

இதனால், சீற்றமடைந்திருக்கும் நிலையில்தான் பழிவாங்கும் முனைப்புடன் புலம்பெயர்ந்த அமைப்புக்கள், தனிநபர்கள் மீது தடைகளைப் பிரகடனப்படுத்தும் முனைப்பில் அரசு இறங்கியுள்ளது. இது நிலைமைகளை மேலும் மோசமாக்குவதாகவும், சர்வதேச ரீதியாக சிறீலங்காவைத் தனிமைப்படுத்துவதாகவுமே அமைந்திருக்கும்.