பரப்புரைகளுக்காக வேட்பாளர்கள் செலவிட்ட தொகை எவ்வளவு; C.M.E.V. பிரதிநிதி தரும் தகவல்

“இலங்கை முழுவதும் வாக்களிப்பு சாவடிகளில் தேர்தல் கண்காணிப்பில் 3 000 பணியாளர்களும், 150 நடமாடும் வாகனங்கள் சேவையிலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன” என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் (C.M.E.V) இலங்கை முழுவதற்குமான கள முகாமையாளர் ஏ.எம்.என்.விக்டர் தெரிவித்தார்.

யாழ் ஊடக மன்றத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் முக்கியமாகக் குறிப்பிட்டவை வருமாறு;

“இலங்கையில் தேர்தல் சட்டங்களுக்கமைய விதி மீறல்களான வன்முறைகள் 1101 பதிவாகியுள்ளன. அவற்றில் தமிழரசுக் கட்சி தொடர்பில் 32 வன்முறைகள் பதிவாகியுள்ளதுடன் மாவட்ட ரீதியில் குருநாகல் மாவட்டம் 98 வன்முறைகள் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் முதலாவது மாவட்டமாகவும் உள்ளது. யாழ் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து 42. முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஜூலை தொடக்கம் ஆகஸ்ட் வரையான பிரச்சார செலவீனங்களில் மொத்தமாக 1870 மில்லியன் செலவு ரூபா செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழரசுக்கட்சி 45 மில்லியன் செலவு செய்துள்ளது. தவிர. அமைதிக்காலமாகிய பிரச்சார ஓய்வுக்காலம் அறிவிக்கப்பட்ட பின் இரகசிய சந்திப்புக்கள் துண்டு பிரசுர விநியோகங்கள், மறைமுக பத்திரிகை விளம்பரங்களும் இடம்பெற்றுவருவதாக அறியக்கிடைக்கின்றது. இம்முறை மேலதிகமாக சுகாதார நடைமுறை மீறல்களும் பதிவாகியுள்ளன. ஆயினும் கடந்த காலங்களில் 65%வாக்களிப்பு நடந்த போதிலும் இவ்வருடம் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற குறைந்த பட்சம் 70%மேல் வாக்களிக்க வேண்டும்” என்றார்.