படையினர் எந்த வித யுத்தகுற்றங்களிலும் ஈடுபடவில்லை – கமால் குணரட்ண யுத்தக் குற்றம் புரியவில்லை என்றால், சர்வதேச விசாரணைக்கு ஏன் அச்சம்? – க.வி.விக்னேஸ்வரன்

இலங்கையில் பிரிவினைவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் இடமில்லை என குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண, ஆயுதங்களை ஏந்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இம்முறை மனித உரிமை   மீறல்கள் குறித்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுமான என்ற ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படையினர் எந்த வித யுத்தகுற்றங்களிலும் ஈடுபடவில்லை என்றும் கமால் குணரட்ண   தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது அரச படையினர் மேற்கொண்ட  மனித உரிமை மீறல் மற்றும்  சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக ஐ.நாவில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு இறுதி யுத்தத்தின் போது அரச படைகள் மேற்கொண்ட உரிமை மீறல் செயற்பாடுகள் ‘போர்க்குற்றச் செயல்கள்’ என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும் உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளுக்கான   பிரேரணைகளும் ஐ.நாவில் கொண்டுவரப்பட்டன. இதற்கு முன்னைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி பொறுப்புக் கூறலை நிறைவேற்றுவதாக  உறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஐ.நாவில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இணைந்து இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரவுள்ளது.

இந்நிலையில் படையினர் எந்த வித யுத்தகுற்றங்களிலும் ஈடுபடவில்லை  என்று கமால் குணரட்ண தெரிவித்துள்ளது  சுட்டிக்காட்டத்தக்கது.

இக்கூற்றிற்கு பதிலளித்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன்,  யுத்தக் குற்றம் புரியவில்லை என்றால், சர்வதேச விசாரணைக்கு ஏன் அச்சம்? என்று ஜெனரல் கமால் குணரத்னவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.  “இலங்கை இராணுவம் படுகொலையில் ஈடுபடவில்லை, போர்க் குற்றங்களை இழைக்கவில்லை. எனவே நாம் எதற்கும் அஞ்ச மாட்டோம்” என்று ஜெனரல் கமால் குணரத்ன வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்தே இந்தக் கோரிக்கையை எழுப்பியிருக்கின்றார் விக்னேஸ்வரன்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“ஜெனரலின் கருத்துக்களை நான் வரவேற்கிறேன். இது எங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது. இலங்கைப் படைகள் இந்த ‘நல்ல ஜெனரல்’ கூறியமை போன்று நல்லொழுக்கத்தின் ஒரு முன்னுதாரணமாக இருந்திருந்தால், இலங்கை ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்? சர்வதேச அரங்கில் எங்கள் முன்மாதிரியான நடத்தையை நாம் நிரூபிக்க முடிவதோடு எங்கள் மீதான கெட்ட பெயரையும் ஒரேயடியாகத் துடைத்தழிக்க முடியும் அல்லவா?

இந்த நல்ல ஜெனரலின் அறிக்கையை கவனத்தில் எடுத்து, அதனடிப்படையில் இலங்கை படைகளால் செய்யப்பட்டவை எனக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எந்தவொரு சர்வதேச விசாரணையையும் எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது என்று அரசாங்கம் குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அறிவிக்க வேண்டும். மே 2009 ஒட்டிய காலத்தில் என்ன நடந்தது என்பதை அங்கு நெருக்கமாக இருந்த இந்த நல்ல ஜெனரல் நன்கு அறிந்திருப்பார்.” என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.