நேவி சம்பத் என்கிற லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி

2008 ம் ஆண்டு செப்டம்பர் 17ம் திகதி கொழும்பில் இலங்கை கடற்படையினரால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் பிரதான சந்தேக நபர்  லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் பிணையில் விடுவிக்கபட்டுள்ளார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பி அறிக்கையில் . பாதுகாப்பு செயலராக இருந்த கோட்டாபய ராஜபக்சே இது தொடர்பான சகல விடயங்களையும் தெரிந்து வைத்து இருந்தார் சொல்லப்பட்டு இருந்தது.

2008 – 2009 ஆண்டுகளில் வசதியான தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களையும் மற்றும் இளைஞர்களையும் கடத்தி கப்பம் கோருவதை இலக்காகக் கொண்டிருந்த அச்சமூட்டும் கடற்படை கடத்தல் குழுவின் தலைவனாக இவர் செயல்பட்டு வந்து இருந்தார். குற்றவியல் பிரிவிற்கு பொறுப்பான அதிகாரியாக கடமையாற்றிய சி.ஐ.டி நிஷாந்த சில்வா (ஆட்சி மாற்றத்தின் பின் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார்), இவரை கைது செய்து இருந்தார்

நேவி சம்பத் என்கிற லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, முன்னாள் கடற்படை செய்தித் தொடர்பாளர் உட்பட ஸ்ரீலங்கா கடற்படையைச் சேர்ந்தவர்களால் முக்கியமாக நடத்தப்பட்டு வந்த கடத்தல் குழுவின் தலைவன் என சொல்லப்படுகிறது. நேவி சம்பத் அல்லது லெப்.கொமாண்டர் ஹெட்டியாராச்சி, முன்னர் ஒரு சமயம் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரண்ணகொடவின் தனிப்பட்ட பாதுகாப்பு அலுவலராக கடமையாற்றியிருந்தார். இந்த கும்பலினால் 2008-2009 காலப்பகுதியில் கடத்தப்பட்டவர்கள் கொழும்பிலுள்ள ‘பிட்டு பம்புவ’ கடற்படைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள். பின்னர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் உள்ள ஒரு துப்பாக்கித் தளத்தில் வைத்துக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் கடத்தப்பட்டவர்கள் எவரும் இது வரை வீடு திரும்பவில்லை

இதுமட்டுமல்லாது டி.ஐ.ஜி கஜநாயக்கா, லெப்.கொமாண்டர் ஹெட்டியாராச்சி (நேவி சம்பத்) தலைமையிலான குழுவினர் தான் பிள்ளையான் கும்பல் ஆட்களான தேவிகாந், மற்றும் வினோத் ஆகியோரை வைத்து பாராளமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களை சுட்டு படுகொலை செய்து இருந்தனர். பாதுகாப்பு அமைச்சின் செயலராக இருந்த கோத்தபாயா ராஜபக்சே இயக்கிய இரகசிய புலனாய்வு குழுவில் இருந்த இவர்கள் கொழும்பு உட்பட பல பகுதிகளில் நடந்த பல அரசியல், தனிப்பட்ட படுகொலைகளை தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களை இணைத்து செய்து முடித்து இருந்தனர்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழக்குகளோடு தொடர்புபட்ட இராணுவ வீரர்களை விடுவிப்பதாக கோத்தபாயா ராஜபக்ச சொல்லி இருந்தார். உண்மையில் லசந்த விக்ரமதுங்க உட்பட 3 பத்திரிகையாளர் சம்பந்தமான வழக்குகள் ,சில கடத்தல் வழக்குகள் என தென்னிலங்கையில் நடைபெற்ற குற்ற வழக்குகளோடு தொடர்புபட்ட 48 ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு இருக்கிறது .அதில் தேர்தலுக்கு முன்னரே 41 பிணை வழங்கப்பட்டு சிறைக்கு வெளியே இருக்கிறார்கள் .11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் மட்டுமே சிறையில் இருந்தார்கள்.இவர்களில் பிரதானமான நேவி சம்பத் என்கிற லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி அவர்களே இப்போது விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.