நீராவியடி விவகாரம் தொடர்பில் வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? நாடாளுமன்றில் சாள்ஸ்

நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள்,தமது நிலைப்பாடுகளை மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நீராவியடி கோவில் விவகாரம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகை யிலே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒரு சில சிங்கள இளைஞர்களும் பெளத்த தேரர்களும் தாங்கள் நினைத்ததை செய்ய முடியுமென அன்றைய தினம் செயற்பட்டனர். செம்மலை பிள்ளையார் ஆலயம் ஏற்கனவே ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இராணுவம் அங்கிருந்த காலத்தில் அவர்களின் வணக்க வழிபாடுகளுக்காக ஆலயத்துக்கு பக்கத்தில் பெளத்த சிலை ஒன்றை அமைத்திருந்தனர்.

ராணுவத்தினர் அங்கிருந்து சென்ற பின்னர் அண்மையில் மரணமடைந்த பெளத்த பிக்கு நீதிமன்ற உத்தரவை மீறி தொல்பொருள் திணைக்களத்தின் ஆசிர்வாதத்துடன் விகாரையை அமைத்தார். குறித்த பெளத்தகுரு சுகயீனமுற்று இறந்த நிலையில்,அவரை இந்து ஆலய வளாகத்துக்குள் தகனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றம் சென்று அதற்கான தடை உத்தரவை பெற்றதால் தேரரின் உடலை இராணுவ முகாமுக்கு முன்பிருக்கின்ற கடற்கரை பிரதேசத்தில் தகனம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

நீதிமன்ற கட்டளை வருவதற்கு முன்னர் ஒருசில பெளத்த குருமாரும் சிங்கள இளைஞர்களும் ஆலய வளாகத்துக்குள்ளே தேரரின் உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பாக வடமாகாண பொலிஸ்மா அதிபருக்கு நான் அறிவித்திருந்தேன். என்றாலும் பொலிஸார் நீதிமன்ற கட்டளையை செயற்படுத்தவில்லை.

ஜனாதிபதி தேர்தல் வரப்போகின்றது. இதில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் வாக்குக் கேட்பதற்காக, வடமாகாணத்துக்கு வரவுள்ளனர். அதனால் நீராவியடி பிள்ளையார் ஆலய பிரச்சினை தொடர்பில் அவர்களின் நிலைப்பாடு என்னவென்பதை  பிரதான வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.