நீதிபதிகளின் தகவல்களை இரகசியமாக திரட்டுமாறு சிறீலங்கா புலனாய்வுத்துறைக்கு ஆணை

சிறீலங்காவில் பதவிக்கு வந்துள்ள புதிய அரசு தனது எதிரிகளை பழிவாங்குவதையும், தனது கட்சி மற்றும் உறவினர்களுக்கு எதிரான வழங்குகளை இல்லாது செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் பல காவல்த்துறை மற்றும் அரச அதிகாரிகள் நாட்டைவிட்டு தப்பியோட முற்பட்டுள்ள வேளை சிலர் தப்பியும் ஓடியுள்ளனர். சில அரசியல்வாதிகள் சிறைக்குச் சென்றுள்ளனர்.

இதனிடையே சிறீலங்காவில் உள்ள நீதிபதிகளின் தனிப்பட்ட விடயங்கள் உட்பட எல்லா தகவல்களையும் இரகசியமாகச் சேகரிக்குமாறு சிறீலங்காவின் புலானாய்வுத்துறைக்கு அரசு இரகசிய உத்தரவை வழங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மேற்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரின் வங்கிக் கணக்குகள், சொத்து விபரங்கள், குடும்ப விபரங்கள், கல்வித் தகமைகள், படித்த கல்லூரி விபரங்கள், அவர்கள் வசம் உள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான விபரங்கள், அரசியல் தொடர்புகள், பொது விவாகாரங்களில் அவர்களுக்குள்ள தொடர்புகள், அவர்களின் பிள்ளைகள் படிக்கும் பாடசாலை விபரங்கள், தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் திரட்டப்பட வேண்டும் என சிறீலங்கா அரசு தனது உள்நாட்டு புலனாய்வு அமைப்புக்கு கட்டளையிட்டுள்ளது.

இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து நீதிபதிகளை மிரட்டி சிறீலங்காவின் புதிய அரசை எதிர்ப்பவர்களுக்கு எதிராக வழக்குகளை மேற்கொள்ளவும், சிறீலங்காவின் புதிய அரச தலைவர் மற்றும் அவரது உறவினர்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வழக்குகளை இல்லாது செய்யவும் சிறீலங்கா அரசு முற்பட்டவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கைகளை சிறீலங்கா புலனாய்வுத்துறையின் புதிய தலைவராக நியமனம் பெற்றுள்ள பிரிகேடியர் சுரேஸ் சலேஸ் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.