நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்க பொதுசன வாக்கெடுப்பு அவசியம்

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்புக்கான அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மட்டும் நிறைவேற்ற முடியாது என்று சிரேஷ்ட சட்டத்தரணி நளின் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தடையற்ற நிர்வாகத்துக்கு இத்திருத்தம் அவசியமென அரசு தரப்பில் கூறினாலும் எந்தத் தடை இருந்தது என்பதை அவர்கள் விளக்கவில்லை என்று சட்டத்தரணி நளின் பத்திரன கேள்வி எழுப்பி உள்ளார்.

அத்துடன், கீழ் நீதிமன்ற நீதிபதிகளிடமிருந்து இவ்வாறான கோரிக்கைகள் வந்ததாகக் கூறுவதும் உண்மைக்குப் புறம்பானதாகும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தங்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் சட்டமூலத்தை தற்போதைய நீதிபதிகளே விசாரிப்பது முரண்பாட்டை உருவாக்கும்.

1978 அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆம் பிரிவுகளின்படி நீதித்துறை அதிகாரம் மக்கள் இறைமையின் ஒரு அங்கமாகும்.

எனவே, 83 ஆம் பிரிவின்படி மக்கள் இறைமையை பாதிக்கும் எந்தவொரு திருத்தத்துக்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டியதுடன், கட்டாயமாக பொதுமக்கள் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தரணி நளின் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், இப் பிரேரணையைப் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மட்டும் நிறைவேற்ற முடியாது. கட்டாயமாக பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் அல்லது இந்தத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சிரேஷ்ட சட்டத்தரணி நளின் பத்திரன தெரிவித்துள்ளார்.