‘நீண்டகாலம் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவேண்டும்’ – ரவிகரன்

நீண்டகாலமாக பணிபுரிந்தும் இடமாற்றம் வழங்கப்படாத உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இவ்வாறு நீண்டகாலம் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் இடமாற்றம் கோரும்போது, அந்த இடமாற்றத்தைத் தடுப்பது மனித உரிமை மீறல் செயற்பாடு எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் 18.02.2021 இன்று இடம்பெற்றநிலையில் அக்கூட்டத்தில் கலந்துகொண்டுகருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

துணுக்காய் பிரதேசத்தில் ஏற்கனவே எட்டுவருடங்களுக்குமேலாக பணிபுரிகின்ற உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படவேண்டும்.

அதற்குரிய உத்தியோகத்தர்கள் வந்தவுடன்தான் இங்கு கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுமெனத் தெரிவித்து நீண்டகாலமாக இங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் இடமாற்றத்தைத் தடுப்பது மனிதஉரிமை மீறல் செயற்பாடாகும்.

ஏன் எனில் உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும்போது, குறிப்பிட்டளவு வருடகாலங்களுக்கு கட்டாய கடமைக்காலங்கள் குறிப்பிடப்பட்டு நியமனக் கடிதங்கள் வழங்கப்படுகின்றன.

அதை மீறி உத்தியோகத்தர்களின் இடமாற்றக் கோரிக்கைக்கள் தடுக்கப்படுகின்ற நிலைமைகளையே இங்கு காணமுடிகின்றது. எனவே இந்தவிடயத்தில் இங்கு அரச நிர்வாகங்கள் பிழையாக செயற்படுகின்றன என்றே சொல்லவேண்டியிருக்கின்றது.

அந்த நிர்வாக பிழைகளை நிவர்த்திசெய்யும்வகையில், நீண்டகாலமாக கடமையாற்றும் இடமாற்றம் கோருகின்ற உத்தியோகததர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவேண்டும்.

இவ்வாறாக உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்குவதன் மூலமே துணுக்காய் பிரதேசசெயலகம் உத்தியோகத்தர் வெற்றிடத்துடன் காணப்படுகின்றது என்பதையும், பிரதேசசெயலகம் மூடவேண்டிய நிலையில் காணப்படுகின்றது என்பதையும் அரசாங்கத்திற்கு உணர்த்த முடியும். அப்போதாவது அரசாங்கம் இந்த உத்தியோகத்தர் வெற்றிட விடயத்தில் கவனம்செலுத்தக்கூடிய நிலை ஏற்படும்.

எனவே நீண்டகாலம் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு  இடமாற்றங்கள் வழங்கப்படவேண்டும்” – என்றார்.