நிபந்தனைகளற்ற ஆதரவின் மூலமாக கூட்டமைப்பு சாதிக்கப்போவது என்ன? – தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம்

“தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை உள்ளடக்கிய 13 அம்சக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு, சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகளற்ற ஆதரவை வழங்குவதன் மூலமாக தமிழ் மக்களுக்கு எதனையாவது பெற்றுக்கொடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நம்புகின்றதா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கும் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம், “கடந்த கால வரலாற்றிலிருந்து கூட்டமைப்பின் தலைமை எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் அவர்களுடைய இந்தத்  தீர்மானம் வெளிப்படுத்துகின்றது” எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

“பல்கலைக்கழக மாணவர்களின் அநுசரணையுடன் தயாரிக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே தயாரில்லை என்று கூறிய சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகளற்ற ஆதரவை வழங்குவதற்கு கூட்டமைப்புத் தலைமை தன்னிச்சையாக எடுத்த முடிவு மற்றொரு வரலாற்றுத் தவறு” எனவும், ஆய்வு மையம் கண்டித்திருக்கின்றது. இது தொடர்பில் மையத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“நடைபெறப்போகும் சிறீலங்காவின் சனாதிபதித் தேர்தலில் நிபந்தனைகளற்ற வகையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எடுத்த முடிவு, வரலாற்றிலிருந்து அவர்கள் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சனாதிபதித் தேர்தலிலும் இதேபோல, மைத்திரிபால சிறிசேனவுக்கு நிபந்தனைகளற்ற ஆதரவை வழங்கிய கூட்டமைப்புத் தலைமை, அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தது? அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வும் வழங்கப்படவில்லை. இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு பகுதி நிலம் விடுவிக்கப்பட்டதைவிட வேறு எந்த நலன்களையும் கடந்த ஐந்து வருட காலத்தில் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 16 எம்.பி.க்கள் என்ற பலத்தை மக்கள் பெற்றுக்கொடுத்திருந்தார்கள். அந்தப் பலத்தை வைத்து அவர்கள் பேரம் பேசியிருக்க முடியும். பதிலாக, ரணில் அரசைப் பாதுகாப்பதற்காக மட்டுமே அந்தப் பலத்தை அவர்கள் மூன்று தடவைகள் பயன்படுத்தினார்கள். பட்ஜெட்களின் போது அந்தப் பலத்தை தமது தனிப்பட்ட நலன்களைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே அவர்கள் உபயோகித்தார்கள். இப்போது மீண்டும் நிபந்தனைகளற்ற ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் சந்திப்பில் கலந்துகொண்ட அவர்கள், தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் 13 அம்சக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதில் கையொப்பமிட்டார்கள். ஆனால், அந்தக் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் கூட தயாராகவில்லாத சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக இப்போது அறிவித்திருக்கின்றார்கள். தமது இந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் அவர்கள் தெரிவிக்கும் காரணங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கே தயாரில்லாத ஒருவருக்கு ஆதரவளிப்தென கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு மற்றொரு வரலாற்றுத் தவறாகும். கடந்த கால வரலாற்றிலிருந்து கூட்டமைப்பின் தலைமை எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் அவர்களுடைய தீர்மானம் வெளிப்படுத்துகின்றது.

தமது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு வலுச்சேர்க்கும் வகையில் 13 அம்சக் கோரிக்கையில் கையொப்பமிட்ட கூட்டமைப்பின் தலைமை, இணக்கத்தை ஏற்படுத்திய மாணவர்களையும் மக்களையும் முட்டாள்களாக்கிவிட்டு, நிபந்தனைகளற்ற ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியிருக்கின்றது. இதன்மூலம், தமிழ்க் கட்சிகளிடையேயான புரிந்துணர்வு குறுகிய காலத்தில் மரணித்துவிட்டது.

13 அம்சக்கோரிக்கைகளும் கைவிடப்பட்டவையாகிவிட்டன. கூட்டமைப்பின் தலைமை வழமைபோல செயற்பட்டாலும் கூட, பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றியம், அந்தக் கோரிக்கைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதுடன், அதனை ஆதரித்துச் செயற்படக்கூடிய கட்சிகள், அமைப்புக்களுடன் இணைந்து வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம்” என்பதுடன் தமிழ் கட்சிகளின் காேரிக்கைகளை ஏற்க மறத்த சிங்களத் தலைமைகளை முற்றாக புறக்கணிக்கும்  முடிவை தமிழ் மக்கள் இந்த தேர்தலில் இருந்து ஆரம்பிப்பார்களானால் அது எமது விடுதலைப் பாேரின் அடுத்த பரிணாமமாக இருக்கும் என ஆய்வு மையம் தனது அறிக்கையில் வலியுறுத்தியிருக்கின்றது.