நினைவேந்தல்களை செய்வதனை மன்று ஏற்றுக்கொண்டுள்ளது -எம்.ஏ சுமந்திரன்

யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தாங்கள் தனியாக நினைவேந்தல்களை செய்வதனை மன்று ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு நீதிப் பேராணை மனு யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

‘யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தாங்கள் தனியாக நினைவேந்தல்களை செய்வதனை மன்று ஏற்றுகொள்வதாகவும், ஆனால் கூட்டாக சேர்ந்து, மாவீரர் நினைவேந்தல் எனும் அடிப்படையில் செய்வது தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விடயமாகும்.

ஆகவே உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தனியாக நினைவேந்தல்களை செய்யலாம். கூட்டாக பொது இடங்களில் சேர்ந்து நின்று செய்வது தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டதால் மேல் நீதிமன்றுக்கு நியாதிக்கம் இல்லை என நீதிபதி குறிப்பிட்டார் என தெரிவித்தார்.